நினைப்புக்கு வருகிறார் ரெட் அஜீத்! சிறுத்தை சிவா நல்லவரா, கெட்டவரா?
ஆறுபடை வீட்டையும் சுற்றி வந்தாலும், அஜீத் படங்களில் ஜீரணிக்க முடியாதது ரெட்தான்! ‘தல இப்படி பண்ணிருச்சே?’ என்று அவரது ரசிகர்களே வாயில் கர்சீப்பை பொத்திக் கொண்டு கதறிய அந்த படம் , அஜீத்தின் கேரியரில் ரொம்ப ரொம்ப சுமாரான படம். யங்… சார்மிங்… ஹேண்ட்சம்… அழகு, இளமை என்ற அர்த்தம் பொதிக்கக் கூடிய அத்தனை வார்த்தைகளுக்கும் சொந்தக்காரரான அஜீத்தை, அப்படியொரு திம்சுகட்டை கோலத்தில் காண யாருக்குதான் மனம் வரும்? இந்த லட்சணத்தில் அவருக்கு மொட்டை வேறு போட்டுவிட்டார் டைரக்டர்.
அந்த படம் வெளிவந்த பின்பு விஜய்யே கூட ஒரு படத்தில் தொப்பையை வைத்துக் கொண்டு ஒரு டான்ஸ் போட்டு அஜீத்தையும் அவரது ரசிகர்களையும் வெறுப்பேற்றியதெல்லாம் வரலாற்று குறிப்பிலிருந்து அழிக்கப்பட வேண்டிய அவலங்கள். காலச்சக்கரத்தின் கடையாணியை பிடுங்கி வண்டியை குடைசாய விடும் தந்திரம் அஜீத் போன்ற மனிதாபிமானிகளிடமும், நல்லவர்களிடமும் செல்லாது என்பதால் மீண்டும் வீறு கொண்டு எழுந்தார் அவர்.
இன்று அஜீத்தின் உயரம் மட்டுமல்ல, அவரது தன்னம்பிக்கையும் எவராலும் அண்ணாந்து பார்க்கக் கூடியதுதான். இந்த நேரத்தில் அந்த பொல்லாத ரெட் படத்தை நினைவுபடுத்த வேண்டுமா என்ன? சிறுத்தை சிவா தற்போது எடுத்துவரும் தல 56 படத்தில், அஜீத் வரும் பிளாஷ்பேக் காட்சிகளில் அதே மொட்டை கெட்டப்போடுதான் வருகிறாராம்! அதற்காகதான் அவர் படம் ஆரம்பிக்கும் முன் திருப்பதி சென்று மொட்டை போட்டதாகவும் தகவல்கள் உலவுகிறது.
அஜீத்தின் பிளாஷ்பேக்குக்கு ஒரு உருப்படியான கெட்டப்பா கிடைக்கல உங்களுக்கு? பாகுபலி கட்டப்பாவை விடவும் மோசமா ஒரு கொலை பண்ணிட்டீங்களே சிவா? ஆமா… நீங்க நல்லவரா, கெட்டவரா?