அடங்க மாட்டாரு ராஜேஷ்! அடுத்தப்படம் ‘ குடியும் குடித்தனமும் ’
டாஸ்மாக் காட்சிகள் எதையும் காட்டக் கூடாது என்று ஒரு சின்ன உத்தரவு மட்டும் போட்டுப் பாருங்களேன்…சினிமாவிலிருந்தே கழன்று கொண்டு ஓடி விடுவார் டைரக்டர் ராஜேஷ்.எம். அவரது முதல் படமான ‘சிவா மனசுல சக்தி’ படத்தில் ஆரம்பித்த குடி மேட்டர் அவரது லேட்டஸ்ட் படமான ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ வரைக்கும் தொடர்கிறது. படம் முழுக்க ஊற்றி ஊற்றி குடித்துவிட்டு, மாற்றி மாற்றி நையாண்டி செய்வதுதான் அவரது படத்தின் ஒன் லைன். மெயின் லைன் எல்லாம்!
காமெடி பண்றதுக்கு நல்ல ஏரியா பார்தான். அதனால்தான் நான் எப்ப பார்த்தாலும் குடி மேட்டரையே கையில் எடுக்கிறேன். மற்றபடி குடி குடியை கெடுக்கும். குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு எதிரானது என்பதிலெல்லாம் எனக்கும் நிறைய உடன்பாடு உண்டுதான். என்ன பண்ணுறது…? நான் எல்லாரையும் சிரிக்க வச்சாகணுமே? என்று இந்த குடி மேட்டருக்கு குயுக்தியான ஒரு பதிலை சொல்லி தப்பித்துவிடுகிறார் அவரும்.
இந்த விஎஸ்ஓபி படத்திற்கும் வழக்கம் போல சமுதாயத்தின் ஏ க்ளாஸ் ஏரியாவிலிருந்து எதிர்ப்பு. இருந்தாலும் பி.க்ளாஸ், சி.க்ளாஸ் ரசிகர்கள், கையில் கிளாஸ் இருக்கிற சந்தோஷத்தோடு படத்தை பார்த்து அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில்தான் ராஜேஷ் தன் அடுத்த படத்திற்கும் இதே போல ஒரு தலைப்பு வைத்திருப்பதாக காதை கடிக்கிறது கோடம்பாக்கம்.
ஜீவா ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தின் தலைப்பு, குடியும் குடித்தனமும்!
விசு பட தலைப்பு போல இருந்தாலும், விஸ்கியை ஊற்றியே வண்டியை 100 கி.மீ வேகத்தில் ஓட்டிவிட மாட்டாரா ராஜேஷ்? வெவரம்ப்பா….!