‘சினிமாவை குட்டிச்சுவராக்கியதே கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ! ’ செல்வமணி பேச்சை ரசிக்குமா இன்டஸ்ட்ரி?
சினிமா எடுக்க வரும் காப்பரேட் நிறுவனங்களின் மீது என்ன கடுப்போ? இன்று அவர்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார் இயக்குனர் சங்க செயலாளர் ஆர்..கே .செல்வமணி. சத்யம் தியேட்டரில் நடந்த ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அப்படத்தின் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன், ‘சினிமா எடுக்க வந்து நிறைய ஏமாற்றத்தைதான் சந்திச்சேன். கூட இருந்தவங்களே கோடி கோடியா ஏமாத்திட்டாங்க. இருந்தாலும் எல்லாத்தையும் சமாளிச்சு என் நிறுவனத்தை ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போலாக்குவேன்’ என்று கூறிவிட்டு அமர்ந்தார். பின்னாலேயே பேச வந்த செல்வமணி பிடிபிடியென பிடித்துக் கொண்டார் அவரை.
தமிழ்சினிமாவை குட்டிச்சுவராக்கியதே இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். அவங்க நேரடியா யாரோடவும் தொடர்பு வச்சுக்கறதில்ல. பொறுப்பை அந்த டைரக்டர்ட்ட அல்லது வேறு யாருகிட்டயாவது ஒப்படைச்சுடுறாங்க. அந்த ஆளுங்க, உனக்கு இவ்வளவு சம்பளம். அதுக்கு மேல வாங்குறது எனக்கு என்று சொல்லி சொல்லி கோடிக்கணக்குல சுருட்டுறாங்க. கடைசியில் படம் ஓடலேன்னதும் கார்ப்பரேட் நடைய கட்டிடுது.
அதனால் எங்க இயக்குனர் சங்கத்தில ஒரு முடிவு எடுத்துருக்கோம். என்னன்னா…? அந்த மாதிரி கமிஷன் அடிக்கிற டைரக்டர்களின் திருட்டு ஆதாரபூர்வமா நிருபிக்கப்பட்டால் அவங்களை சங்கத்திலிருந்தே நீக்கிடுவோம். இந்த படத்தின் தயாரிப்பாளர் அருமைச்சந்திரன் கணக்கு பார்க்காமல் இருந்ததுதான் தப்பு. தினமும் இரண்டு மணி நேரம் ஒதுக்கி கணக்கு பார்த்திருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது. இவர்களை மாதிரி தயாரிப்பாளர்கள் வெற்றிபெற்றால், இன்னும் 500 கோடியை இந்த இன்டஸ்ரியில் இறக்க அவர்களது நண்பர்களே தயாரா இருக்காங்க. இப்படி பல தயாரிப்பாளர் வர்றது இன்டஸ்ரிக்கு நல்லது. ஆனால் அவங்களை ஜெயிக்க விடணுமே! என்றார் வேதனையோடு.
எஸ்.ஜே.சூர்யாவின் பேச்சில் நிறைய நிஜம் இருந்தது. அருமைச்சந்திரன் தான் ஏமாற்றப்பட்டதை இந்த மேடையில் சொன்னார். கெட்டவனா இருந்தா ஆண்டவன் தண்டிச்சுருவான். அதுவே நல்லவனா இருந்தா நம்மளை சுற்றியிருப்பவங்களே தண்டிச்சுருவாங்க. அதனால் கெட்டது தெரிஞ்ச நல்லவனா இருக்கணும் என்றார்.
படத்தின் ஹீரோவாக ஸ்ரீகாந்தும் அவருக்கு ஜோடியாக புதுமுகம் நீலமும் நடித்திருக்கிறார்கள். சூரிய பிரகாஷ் இயக்கியிருக்கிறார். விழாவுக்கு நீலம் பச்சை கலர் டிரஸ்சோடு வந்திருந்தார்! நீலமும் சரி, பச்சையும் சரி, கிளாமருக்கு அடையாளம். ஆனால் இந்த ஓம் சாந்தி ஓம் படத்தில் குழந்தைகளும் பார்க்கிற மாதிரிதான் நடித்திருக்கிறாராம் நீலம்.
ஏன் நீலம் ஏன்?