ராக்கெட் ட்ரீ விமர்சனம்
இந்தியாவின் ‘ஞானம்’ விண்ணை முட்டிக் கொண்டு பறந்தாலும், இந்தியாவின் ‘மானம்’ மண்ணை பிளந்து கொண்டு கீழே போய் விட்டது. அறிவாளிகளின் உச்சி முடியை, பற்றி இழுக்கும் அயோக்யத்தனம் எல்லா துறைகளிலும் இருக்கிறது, இருந்திருக்கிறது, இருக்கும் என்பதன் சுருக் சுருக் பதிவுதான் இந்த ராக்கெட் ட்ரீ. நாடெங்கும் இருக்கும் நம்பி நாராயணன்கள் இனிமேலாவது காப்பாற்றப்படட்டும். (ஆமா…. இந்த மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை கதையையும் யாராவது படமாக்கலாம்ல?)
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் இந்திய ராக்கெட் ரகசியங்களை பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார் என்று அவரை கைது செய்கிறது போலீஸ். சித்ரவதை என்றால் அப்படியொரு மரண சித்ரவதை. குடும்பமே நிலைகுலைகிற அளவுக்கு நாலாபுறத்திலிருந்தும் அசிங்கம் மற்றும் அவமானம். அவ்வளவுக்குப் பிறகு அவர் நிராபராதி என்று விடுவிக்கப்படுகிறார். அடைந்த வலிக்கும், இழந்த பெருமைக்கும் எதை கொடுக்கும் அரசாங்கம்? கோர்ட் படியேறுகிறார் நம்பி. என்ன நடந்தது என்பதெல்லாம்தான் இந்த ராக்கெட் ட்ரீ.
படத்தின் முதல் பாதி முழுக்க குப்புற படுத்து குறட்டை விட்டாலும் தப்பில்லை. நம்பி நாராயணனுக்கு போலீஸ் இழைத்த அவஸ்தையை விட பெரும் அவஸ்தையை தருகிறது படம். எப்படியோ அந்த ஒரு மணி நேரத்தை கடந்துவிட்டால் விறுவிறுப்பான ரெண்டாம் பாதியை பதற்றமும், கவலையுமாக கடக்கலாம்.
முதல் பாதியில் என்ன கோளாறு?
முழுக்க டெக்னிகல் வார்த்தைகள்… இரண்டு பேர் சந்தித்துக் கொண்டாலே பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி கிளாசுக்குள் வந்து சிக்கிக் கொண்டோமோ என்று நினைக்கிற அளவுக்கு ‘நிமிண்டி’ வைக்கிறார்கள். வந்து போகிற அத்தனை நடிகர்களும், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரா டிராமாவில் வரும் ‘குத்து’விளக்குகளாக இருப்பதால், குத்துபட்ட ஃபீலிங்காகிறது தியேட்டர். ஆனாலும் காட்சிகளை வடிகட்டி வடிகட்டி டிகாஷன் எடுத்தால் நம்பி இந்தியாவுக்காக எவ்வளவு பெரிய ரிஸ்குகளை எடுத்திருக்கிறார் என்று புரியவருகிறது.
இதே மாதிரி டஃப் பார்முலா கதைதான் ‘சூரரை போற்று’ படமும். ஆனால் அதை எந்தளவுக்கு ரசிகனின் மண்டைக்கு ஏற்றார் போல செதுக்கினார் சுதா கொங்கரா? அந்த வித்தை மாதவனுக்கு சிக்காமல் போனதுதான் துரதிருஷ்டம்.
செகன்ட் ஹாஃப் முழுக்க நம்பியின் சித்திரவதைகளும், அவரது சமாளிப்ஸ்களும்தான். நம்பியாக நடித்திருக்கும் மாதவன் பல இடங்களில் நடிப்பால் அசரடிக்கிறார். முக்கியமாக சிறையிலிருந்து வந்தபின் தன் மனைவியை தேடுகிற அந்த இடம். தன்னை தேடி சிறைக்கு வரும் நண்பன் உன்னியை எதிர்கொள்ளும் இன்னொரு இடம். மாதவனின் ஓல்டு கெட்டப் நிஜமாகவே மிரட்டல். நிஜத்தில் பிராமணரல்லாத நம்பி நாராயணனை பிராமணர் போல காட்டியிருப்பதற்கு ஏதாவது ஸ்பெஷல் காரணங்கள் இருக்கிறதா என்று புரியவில்லை.
நம்பியின் மனைவியாக சிம்ரன். வெகு நாட்கள் கழித்து நடிக்க வந்திருக்கிறார். வெகு சிறப்பாக நடித்தும் இருக்கிறார்.
படத்தில் அப்துல் கலாம், கஸ்தூரி ரங்கன் என்று பலரும் வருகிறார்கள். ஆனால் நம்பியின் சித்ரவதை நேரத்தில் ஒருவராவது முன் வந்து உதவ வேண்டுமே? ம்ஹும். “ராக்கெட் கவுந்தா எப்படி சரிசெய்யறதுன்னு தெரிஞ்ச எங்களுக்கு மனுசன் கவுந்தா என்ன செய்யறதுன்னு தெரியல” படத்தில் வரும் இது போன்ற வசனங்கள் இந்த கேள்வியை இன்னும் உரக்க எழுப்புகின்றன.
பேட்டி கொடுக்கிற மாதவன், அப்படியே நம்பி நாராயணனாக மாறும் காட்சி பலே. அவரை பேட்டி எடுக்கிற சூர்யா, கிடைத்த பத்து வினாடியில் நூறு எமோஷன்களை கொட்டி வைக்கிறார். (இவரை பொறுத்தவரை இந்த ஒரு பிரச்சனைதான். கண்ட்ரோல் பட்டன் முக்கியம் சார்)
சாம்.சி.எஸ் சின் பின்னணி இசை படு மட்டம். ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளர் என்று அவரவர் பங்குக்கு அவரவர் ‘படுத்தி’ இருக்கிறார்கள்.
மாதவன் ‘நம்பி’ ஏவிய இந்த ராக்கெட், கடலில் விழுந்தால் கூட மன்னிக்கலாம். நம்பி தியேட்டருக்குள் வந்த ரசிகனின் தலையில் விழுந்திருக்கிறது.
-ஆர்.எஸ்.அந்தணன்