நடிகை ரோஜாவுக்கு கத்திக்குத்து நகரி தொகுதியில் ரகளை, மறியல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பது அரசியலுக்குதான் சர்வ பொருத்தம். அதை நிரூபித்திருக்கிறது இந்த கத்தி வெட்டு சம்பவம். அதுவும் தமிழ், தெலுங்கு, கன்னட படவுலகில் கொண்டாடப்பட்ட நடிகை ரோஜாவுக்கு நடந்திருப்பதுதான் ஐயோடா ஐயோடா.

தமிழ்சினிமாவில் அடிக்கடி காட்டப்படும் ஆந்திர வில்லன்கள் அசப்பிலும் நிசத்திலும் வந்து ரோஜாவின் மணிக்கட்டில் ஒரே போடாக கீறி, பெரும் ரத்த வெள்ளத்தை உருவாக்கிவிட்டார்கள். இதனால் ஆந்திராவின் பல பகுதிகள் அல்லோகலம் அலங்கோலம்! நம்ம ரோஜாவுக்கே இப்படியாகிருச்சா என்று அவரது தொகுதியான நகரி மக்களுக்கும் ஒரே கவலை. சம்பவம் இதுதான்…

ஆந்திர மாநிலத்தில் கோவில் விழாவில் முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் நடிகை ரோஜாவை மர்மநபர் கத்தியால் கையில் வெட்டினார். இதில் ரோஜாவிற்கு ரத்த காயம் ஏற்பட்டது. ஆந்திர மாநிலம் நகரியில் கங்கை அம்மனை கொண்டாடும் ஜாத்திரை திருவிழா என்ற விழா நடைபெற்றது. ஒரு வாரம் கொண்டாடப்படும் இந்த விழாவின் இறுதிநாளான நேற்று கிராம தெய்வமாக வணங்கப்படும் தேசம்மா, குண்டாலம்மா ஆகிய தெய்வங்களை வீதிஉலாவாக எடுத்து வந்தனர். விழாவில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வான ரோஜா கலந்து கொண்டார். அவர் 500 பெண்களுடன் சீர்வரிசை தட்டு ஏந்தி கோவிலுக்கு வந்தார். இந்தவிழாவில் நகரி முன்னாள் எம்.எல்.ஏ. தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணநாயுடுவும் ஊர்வலமாக வந்தார். அம்மன் அலங்காரம் முடிந்து ஊர்வலம் செல்ல பூஜை நடத்தப்பட்டது.

தோற்ற எம்.எல்.ஏ அவர் என்பதால் வெற்றி பெற்ற ரோஜா மீது செம கடுப்பில் இருப்பாரல்லவா? அதுதான் அவரது தொண்டர்கள் மூலமாக வெளிப்பட்டிருக்கிறது.

தெலுங்குதேசம் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கிராமபெரியவருக்கு தான் முதல்மரியாதை செய்ய வேண்டும் என்று கூறி தகராறு செய்தனர். எம்.எல்.ஏ. என்ற முறையில் முதல் மரியாதை நடிகை ரோஜாவுக்கு அளிப்பது வழக்கம். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அப்போது நடிகை ரோஜா பூஜை தட்டை பூசாரியிடம் கொடுத்தார். அதனை தெலுங்குதேசம் கட்சி தொண்டர் ஒருவர் தட்டி விட்டார். மேலும் கூட்டத்தில் இருந்த மர்மநபர் ரோஜாவின் கையை கத்தியால் வெட்டினார். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பாதுகாப்பு அளிக்காத போலீசாரை கண்டித்து நடிகை ரோஜா மற்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தி நடிகை ரோஜாவுக்கு முதல் மரியாதை அளிக்க ஏற்பாடு செய்தனர். இதனால் பரபரப்பு அடங்கியது.

ஆமாம்… ரகளையெல்லாம் ஓ.கே. அவரை மருத்துவமனைக்கு கொண்டு போனீங்களா? இல்லையா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Madras- Aagayam theepditha Song

http://youtu.be/VF6fSSqsEMI

Close