ரோமியோ ஜூலியட் விமர்சனம்

அமர காதல்னா கைய அறுத்துக்கணும், சாக்கடையில புரளணும், ரயில்வே ஸ்டேஷன்ல பல்டி அடிக்கணும்… என்கிற சினிமா விதிகளையெல்லாம் தகர்த்தெறிந்திக்கிற படம். ‘இப்ப வர்ற லவ்வுல பெரும்பாலும் இப்படிதான் இருக்கு’ என்று சொல்ல முற்பட்டிருக்கிறார் இயக்குனர் லட்சுமணன். ரசிகர்கள் மத்தியில் நல்ல இமேஜ் உள்ள ஒரு ஹீரோவும், ஒரு ஹீரோயினும் இந்த கதையில் நடிக்க சம்மதித்ததே வியப்புதான்!

ஜிம் ஒன்றில் பதினைந்தாயிரம் சம்பளத்தில் கோச் ஆக வேலை பார்க்கும் ஜெயம் ரவி மீது காதல் வருகிறது ஹன்சிகாவுக்கு. ஜிம் வாடிக்கையாளர்கள் உதவியுடன் அவர் வாழும் பணக்கார வாழ்க்கையை கண்டு, ‘உண்மையிலேயே பெரிய பணக்காரர் போல…’ என்ற எண்ணத்தில் வந்த காதல் அது. தன்னை விரட்டி விரட்டி காதலிக்கும் ஹன்சிகாவை ஒரு கட்டத்தில் காதலிக்கவும் ஆரம்பிக்கிறார் ரவி. லவ் நல்லாதான் போயிட்டு இருக்கு என்று நினைத்தால், ரவி ஒன்றும் பெரிய அப்பாடக்கர் அல்ல, வெறும் 15 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஆர்டினரி கூலிக்காரர்தான் என்பது தெரிய வருகிறது ஹன்சிகாவுக்கு. அவ்வளவுதான்… காதலாவது, மண்ணாங்கட்டியாவது என்று கை கழுவி விடுகிறார் ரவியை. வேறொரு பணக்கார வாலிபனை மணக்க துணிகிறார். ‘என்னை வேணாம்னு சொல்லிட்டல்ல, உன்னை மாதிரியே ஒரு பிகர் செட் பண்ணி கொடுத்துட்டு நீ அவனை கல்யாணம் பண்ணிக்கோ. இல்லேன்னா உன் புது லவ்வுக்கு சங்கு ஊதிருவேன்’ என்கிறார் ரவி.

செகன்ட் ஹாஃப் முழுக்க ‘செட்டப்’ படலம். எப்படியோ? இறுதியில், ‘சந்தோஷம்ங்கிறது பர்ஸ்லயோ, கிரடிட் கார்டுலேயோ இல்ல. மனசுல இருக்கு’ என்று உணர்க்கிறார் ஹன்சிகா. காதல் ஜோடி இணைந்ததா என்பது முடிவு.

இந்த படத்தின் பெரிய கோக்குமாக்கே இதுதான். ஜெயம் ரவி பப்ளியாக இருக்கிறார். ஹன்சிகா இளைத்துப் போய் ஒல்லியாகியிருக்கிறார். இருவரும் ஒருவரையொருவர் டார்ச்சர் கொடுத்துக் கொள்வதை மட்டுமே முழு படமாக இழுக்கிறார் டைரக்டர். சில காட்சிகள் ஆஹா. சில காட்சிகள் ‘முடியல…’

ஐயோ… இப்படியொரு நல்ல பையனை அல்லாட விடுதே இந்த பொண்ணு என்று ரசிகர்கள் உச் கொட்டும் நேரத்திலா, ஜெயம் ரவி திருப்பி அடிக்க வேண்டும்? ‘எனக்கொரு நல்ல பிகரா செட் பண்ணிக் கொடு’ என்று இவர் கொடுக்கும் டார்ச்சர், ஹன்சிகாவை தாண்டி ரசிகனின் தலையிலும் ஏற… செம டென்ஷன்! ‘ஏண்டி… உங்களுக்கு வேணும்னா லவ் பண்ணுவீங்க. வேணாம்னா கழட்டி விட்ருவீங்க. நாங்க சூரிய வம்சம் சரத்குமார் மாதிரி உங்க கல்யாணத்துக்கு வந்து எல்லாருக்கும் கூல் ட்ரிங்ஸ் கொடுக்கணுமா?’ என்று ரவி முழங்குகிற போது, தியேட்டர் கலகலக்கிறது. (அவ்ளோ வெறுப்புல இருக்கு உலகம்) ஆமாம்… இந்த படத்துல இவரை எதுக்கு டிஆர் ரசிகரா காண்பிக்கிறார் இயக்குனர்.? ஒரு சீனில் டி.ஆர் போட்டோவை வைத்து ‘தலைவா’ என்று வணங்குவதோடு சரி. அதற்கப்புறம் டண்டனக்கா என்றொரு பாட்டு. அதோடு முடிந்தது டி.-ஆர் படலம். கொஞ்சம் யோசித்திருந்தால், இந்த டி.ஆர் மேட்டரை வைத்தே படத்தை ரகளை கட்டி அடித்திருக்கலாமே லட்சுமணன்.

தன்னை அடிக்க அடியாள் செட் பண்ணிவிட்டு வரவழைக்கும் ஹன்சிகா முன்னிலையில் அந்த ரவுடிகளை புரட்டி புரட்டி எடுக்கும் ஜெயம்ரவி, ஹன்சிகாவிடம், ‘நீ தற்கொலை பண்ணிக்க போறீயா? எங்க கட்டை அவிழு பார்க்கலாம்’ என்று குட்டை உடைப்பது செம!

ஹன்சிகா மட்டும் என்னவாம்? முட்டை விழியும், முணுமுணு பேச்சுமாக ரகளை பண்ணுகிறார். அவர் மீதிருக்கும் ‘ஏஞ்சல்’ இமேஜை தகர்த்து காலி பண்ணுகிறது அந்த கேரக்டர். இருந்தாலும், மயிலு மயிலுதானே? மன்னிச்சுடுறோம் தாயீ….

சினிமா டைரக்டராகவே வரும் வி.டி.வி கணேஷ் ஜெயம் ரவியின் காதலை வளர்க்க தனது ஆடி காரை கொடுக்கிறார். பல லட்சம் பெறுமானமுள்ள கிரடிட் கார்ட்டை கொடுக்கிறார். அன்பொழுக சேர்ந்து சேர்ந்து சரக்கடிக்கிறார். ஆனால் திடீர் திருப்பம்… இவர் கதையைதான் அவர் படமாகவே அடித்துக்(?) கொண்டிருக்கிறார். அந்த காட்சியில் தியேட்டரே கலீர் என்று சிரிக்கிறது. ஒரே ஒரு சீனில் வந்தாலும், நண்பேன்டா என்று நிரூபிக்கிறார் ஆர்யா.

டைரக்டர் லட்சுமணனின் வேகமான கதையாக்கத்தில் இந்த ஒரு இடம் அற்புதம். தன்னுடன் ஆடிக்காரில் வரும் ஜெயம் ரவியின் பர்சை சுத்தமாக உருவுகிறார் ஹன்சிகா. ஒரு கட்டத்தில் வண்டி பெட்ரோல் இல்லாமல் நடுரோட்டில் நின்றுவிட, ‘எனக்கு நீ லாயக்கு இல்ல. யதார்த்தம் இதுதான். இந்தா ஆயிரம் ரூபா. பெட்ரோல் போட்டுட்டு வீடு போய் சேரு’ என்று பணத்தையும் வார்த்தைகளையும் வீசிவிட்டு ஹன்சிகா கிளம்புகிறாரே, பயங்கரம்!

படத்தில் அதிக கேரக்டர்களை புகுத்தி அலற வைக்காமல் ஜெயம் ரவி, ஹன்சிகா, வி.டி.வி கணேஷ் என்று சிலரை மட்டும் வைத்துக் கொண்டு கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். பாராட்டுகள். ஆமாம்… அந்த பூனம் பாஜ்வாவை வச்சுகிட்டு என்னதான் சொல்ல வர்றாராம் இவர்?

டி.இமான் இசையில் டண்டனக்கரா பாடலெல்லாம் அவரது பழைய லைப்பரரியில் இருந்து உருவியதில் ஒன்றாகதான் இருக்கிறது. மெலடிகளுக்கு பெயர் போன இமானை, ‘சும்மா இருடி’ என்று கூறிவிட்டார் போலும் இயக்குனர்? சப்! சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவில் எல்லாரும் அழகாக இருக்கிறார்கள். எல்லாமும் அழகாக இருக்கிறது.

காதலை பட்டுத்துணியில் வைத்து பிரசன்ட் பண்ணிய சினிமாக்களும் உண்டு. காதலை சாக்கு மூட்டையில் வைத்து சர்வ் பண்ணிய படங்களும் உண்டு. ரொம்ப அசால்ட்டாக டிஷ்யூ பேப்பரில் சுற்றி கொடுத்திருக்கிறார் லட்சுமணன். துணிச்சல்தான்! அதே நேரத்தில் “…..ரிச்சலும்தான்!”

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இசை சூறாவளியை தந்திரமாக ஏமாற்றிய இயக்குனர்! மூணு கோடி ஏவ்வ்வ்வ்…. மனசு இன்னும் ஆறலையாமே?

‘இரும்பை முழுங்கிட்டு இஞ்சி ரசம் குடிச்சிக்கலாம்னு நினைச்சு தப்பு பண்ணுற ஊர்டா இது’ என்று இந்த செய்தியை படித்து முடிக்கும் போது நீங்கள் அலுத்துக் கொண்டாலும் தப்பில்லை....

Close