கத்தரி வெயிலில் வாடிய காஷ்மீர் தக்காளி!
கொழுத்த மதியம்… பின்னி மில்லின் கூரையை பிய்த்துக் கொண்டு வெப்பம் மண்டையில் இறங்கிக் கொண்டிருக்க, கேரவேனுக்குள் இருந்து ஒரே நேரத்தில் ஏழெட்டு ஏர் கூலர்கள் இறங்கினால் எப்படியிருக்கும்? அதன் பெயர் நர்கீஸ் பக்ரி என்றார்கள். காந்தியைதான் அரை நிர்வாண பக்கிரி என்றான் வெள்ளைக்காரன். இந்த பக்கிரியும் அரை நிர்வாண பக்கிரியாக இருக்க, ஒரே ஜில்லானது ஏரியா. உஃப் உஃப்… என்று அவ்வப்போது தனது உதட்டால் தனக்கே காற்று வீசிக் கொண்டார் நர்கீஸ் பக்ரி. வெப்பம் அப்படி…
காஷ்மீர் தக்காளியை கத்திரி வெயிலில் உட்கார வைத்தது வேறு யாருமல்ல, அறிமுகமான காலத்திலிருந்து இப்போது பார்க்கிற வரைக்கும் அப்படியே இளமை மாறாமலிருக்கும் பிரசாந்தும் அவரது அப்பா தியாகராஜனும்தான். இவர்கள் தயாரிக்கும் சாகசம் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்குதான் பாலிவுட்டிலிருந்து வந்திருந்தது பால் புட்டி!
இந்தியை பொறுத்தவரை நர்கீஸ் ரொம்ப பிரபலம். ரன்பீர் கபூருடன் இவர் நடித்த ராக் ஸ்டார் அங்கு மெகா மெகா ஹிட். அதற்கப்புறம் மெட்ராஸ் கபே, மெய் தேரா ஹீரோ ஆகிய படங்களும் நர்கீசின் வளைவு நெளிவுகளுக்கு சாட்சி. ரம்ஜானுக்கு வெளியான கிக் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினாராம் இவர். அதை பார்க்கவே கூட்டம் தியேட்டரில் மொய்த்தாக சொல்கின்றன வடக்கத்திய ஊடகங்கள். இவ்வளவு செல்வாக்குள்ள நர்கீஸ், பிரசாந்துடன் ஒரு பாடல் ஆடதான் வந்திருந்தார்.
ஐஸ்வர்யாராயே பிரசாந்துக்கு ஜோடியாகிவிட்டார். அப்புறம் இவர் என்ன ஜுஜுபி? என்று நாம் நினைத்தாலும் இந்த ஜிலேபியை பற்றி நான்கு வரிகளுக்கு மிகாமல் விடையளித்தார் பிரசாந்த். நர்கீஸ் அற்புதமான நடிகை, எனக்கு ஈடுகொடுத்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். முதல் முறையாக தென்னிந்திய சினிமாவுக்கு வந்துள்ளார் என்னோடு இணைந்து நடித்த பல பிரபலங்களில் இவர் விஷேஷமானவர், பேரழகி எனக்கு இது பெருமகிழ்ச்சி அளிக்கிறது என்றார் அவர்.
பிரசாந்த் பிரமாதமான டான்சர் என்று புகழ்ந்தார் நர்கீஸ். எப்படியோ பிரஸ்மீட் முடிந்தது. அதற்குள் எழுந்து ஓடி கேரவேனுக்குள் புகுந்து கொண்டது நர்கீஸ் என்கிற ஏசி.