உங்க நைனா போட்ட சோத்தில்.. காரம் ரொம்போ! இறங்கி அடிக்கும் பிரசாந்த்!

கொஞ்சம் லேட்டானாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்று உடம்பை ஸ்லிம்மாக்கிக் கொண்டு வந்திருக்கிறார் பிரசாந்த். இப்பவும் அதே ரசிகர் கூட்டத்தை உலகெங்கிலும் வைத்திருக்கும் பிரசாந்த்துக்கு பொறுப்பு தேவைப்படுகிற அளவுக்கு, போட்டியை சமாளிக்கும் தில்லும் தேவையாக இருக்கிறது. அதுவும் உடனடியாக. அதனால்தான் அவர் நடித்துக் கொண்டிருக்கும் ‘சாஹசம்’ படத்தை செதுக்கி செதுக்கி உருவாக்கிக் கொண்டிருக்கிறார் தியாகராஜன். இந்த படத்தின் இயக்குனரும் அவரேதான்.

பொதுவாகவே பிரசாந்த் படத்தின் பாடல்கள் ஊர் உலகமே முணுமுணுக்கிற அளவுக்கு அமையும். அந்த வழக்கத்தை இந்த படத்தில் மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? எஸ்.தமன் இசையில் உருவான மெட்டுகளுக்கு குரல் கொடுக்கும் பாடகர்களை தேர்வு செய்யவே அதிகம் மெனக்கெடுகிறார் மம்பட்டியான் தியாகராஜன்.

கவிஞர் நா.முத்துகுமார் எழுதிய பெண்ணே பெண்ணே… என்ற பாடலை மோஹித் சவ்ஹான் தனது மயக்கும் குரலில் பாடி அசத்தினார். அதற்கப்புறம் வருகிற வரிகளை கேட்டால் யூத்துகள் கைதட்டி ஆரவாரம் செய்வார்கள். ‘குட்டிப் பெண்ணே ஆங்கிரி பேர்ட் பெண்ணே… சும்மா சீனு வேணா(ம்) கண்ணே, உங்க நைனா போட்ட சோத்தில்.. காரம் ரொம்போ… குல்பி வாங்கித்தாரேன் கண்ணே.. ’ இவைதான் அந்த வரிகள்.

மோஹித் சவ்ஹானை பற்றி நடிகர் தியாகராஜன் கூறுகையில், ‘மிக அருமையான குரல் வளமிக்க மோஹித் சவ்ஹான் இசையில் மட்டுமல்ல பழகுவதற்கும் இனிமையான மனிதர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இவர் பாடிய பாடலை கேட்ட நாள்முதல் பிரஷாந்தின் சாஹசம் படத்தில் இவரை பாட வைக்க வேண்டுமென நினைத்தேன். நீண்ட முயற்சிக்குப் பிறகு அது நிறைவேறியது எனக்கு மகிழ்ச்சி. மிகச்சிறப்பாக வந்துள்ள ஆங்கிரி பேர்ட் பெண்ணே பாடலை இளம் காதலர்களுகாக டெடிக்கேட் செய்கிறேன். இந்த பாடலை இளைஞர்கள் மட்டுமல்ல இசை விரும்பிகள் அனைவருமே காதலிப்பார்கள். மோஹித் சவ்ஹான் ராக் ஸ்டார், டெல்லி6, ரங்தே பசந்தி, ஜப்வி மெட் ஆகிய இந்தி படங்களில் பாடிய அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றியடைந்தன. அகில இந்திய அளவில் சிறந்த பாடகருக்கான விருதை தொடர்ந்து 5 வருடங்களாக பெற்று வருகிறார் மோஹித் சவ்ஹான்.

இவர் ஏற்கனவே அனிருத் இசையில் 3 படத்திற்காக பாடிய போ நீ போ… என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி அடைந்ததோடல்லாமல் சிறந்த பாடகருக்கான விஜய் அவார்ட் பரிசையும் பெற்று தந்தது. சாஹசம் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக வெகு விரைவில் நடைபெறவுள்ளது. அதுவும் பிரசாந்துக்கு பிடித்த மலேசியாவில் என்றார்.

ஹலோ மலேசியா… ரெடியா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அமெரிக்காவில் லிங்கா ரசிகர்களின் உற்சாகம் (வீடியோ)

தமிழகத்தில் மட்டுமல்ல, உலகெங்கிலும் ‘லிங்கா’ கொண்டாட்டம் ஆஹா ஓஹோதான்! அதுவும் அமெரிக்காவில் லிங்காவை கொண்டாடித் தீர்த்து விட்டார்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள். சுமார் 5000 மைல் சுற்றளவில்...

Close