சலீம்- விமர்சனம்

ஒரு சுள்ளான் பயில்வான் ஆகிற கதையெல்லாம் பார்த்து சலிச்சாச்சு. இவருமா? கையில் துப்பாக்கியோடு இருக்கும் விஜய் ஆன்ட்டனியின் ஸ்டில்களை பார்த்தால் அப்படிதான் கிலியடிக்கிறது நமக்கு. தியேட்டருக்குள் நுழைந்த முதல் முக்கால் மணி நேரம் சத்திய சோதனை! ஒரு அரை கிழவியை ஹீரோயின் என்று அறிமுகப்படுத்துகிறார்கள். அவரும் ஏதோ உலக மஹா அழகி போல அலட்டோ அலட்டென அலட்டுகிறார். எதற்கெடுத்தாலும் கோபம், எரிச்சல், கடுப்பு என்று சர்வரோக சிடுமூஞ்சியாகவே திரிகிறார். இவர் கடுப்படிப்பதும், விஜய் ஆன்ட்டனி பம்முவதுமாகவே படம் நகர்கிறது.

‘மண் குதிரை காலுல இப்படி சணலை கட்டி இழுக்குறாங்களேப்பா… வேற வழியில்ல. இன்டர்வெல்லோடு எஸ்கேப்’ என்கிற மனநிலைக்கு ரசிகன் தள்ளப்படும்போதுதான், ‘பாவம்டா ரசிகனுங்க…’ என்று நினைக்க ஆரம்பிக்கிறார் அறிமுக டைரக்டர் நிர்மல் குமார். சட்டென மாறிவிடும் படத்தின் தோரணை, அதற்கப்புறம் வருகிற பின் பாதி படத்திற்கும் சேர்த்து தோரணம் கட்டி விடுகிறது. ஆகமொத்த ரிசல்ட்? இனி விஜய் ஆன்ட்டனி வெறும் மியூசிக் டைரக்டரல்ல! அதையும் தாண்டிய ஆக்ஷன் ஹீரோ!

தனியார் மருத்துவமனைகளில் எப்படியெல்லாம் பணம் பிடுங்கப்படுகிறது? நியாய சிந்தனையோடு சேவை செய்யும் சில மருத்துவர்களை அந்த உலகம் எப்படி பார்க்கிறது என்பதையெல்லாம் நரம்பில் ஊசியேற்றுவதை போல நறுக் நறுக்கென சொல்வதுதான் இந்த சலீம் படம். ஒரு பணம் பிடுங்கி மருத்துவமனையில் விஜய் ஆன்ட்டனி டாக்டராக வேலை பார்க்கிறார். ஐந்து ரூபாய் வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்க்கும் அவரை, ‘போடா புண்ணாக்கு’ என்பதை போலவே ‘லுக் ’ விடுகிறது நிர்வாகம். நடுநடுவே அந்த அரை கிழவி இம்சை வேறு. நீயெல்லாம் ஒரு ஆம்பிளயா? என்கிற அளவுக்கு இவரை நைந்து போக வைக்கிறாள். அவ்வளவுக்கு பிறகும் அந்த வருங்கால மனைவியை நேசிக்கிறார் விஜய் ஆன்ட்டனி. நடுவில் ஒரு முக்கியமான சம்பவம். கயவர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு போராடும் ஒரு இளம்பெண்ணை மனிதாபிமான சிந்தனையோடு அதே மருத்துவமனையில் சேர்க்கிறார் விஜய்ஆ. சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கும் போதே அவள் காணாமல் போகிறாள். அந்த நேரத்தில்தான் ‘நீங்க எங்க ஹாஸ்பிடலுக்கு லாயக்கு இல்ல. உங்களை டிஸ்மிஸ் பண்றோம்’ என்று எள்ளி நகையாடுகிறது மருத்துவமனை நிர்வாகம். அவமானம், வெறுப்பு, சொசைட்டியின் போக்கு எல்லாம் சேர்ந்து விஜய் ஆன்ட்டனி என்ற கரப்பான் பூச்சியை காட்ஸில்லா ஆக்குகிறது. அதற்கப்புறம் அவர் காட்டும் வீரதீர பராக்கிரமங்கள்தான் படத்தின் பரபர செகன்ட்ஹாஃப்!

தனக்கு என்ன வருமோ, அதை சரியாக கண்டுணர்ந்து அதற்குள் தன்னை பொருத்திக் கொண்டிருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. அதிகம் வசனங்கள் இல்லை. அலட்டல் இல்லை. இந்த பக்குவம் இனிமேலும் தொடர்ந்தால், தமிழ்சினிமாவின் வசூல்ராஜாக்களில் ஒருவராக திகழ்கிற அதிர்ஷ்டத்தை அவருக்கு வாரி வழங்குவார்கள் மக்கள். தன்னை விசாரிக்கும் போலீஸ் ‘நீ அல்கொய்தாவா? உன் பேக்ரவுண்ட் என்ன? எத்தனை பேரு உன் கூட்டத்துல இருக்காங்க?’ என்று கேள்வி மேல் கேள்வி கேட்க, ‘சலீம்..ங்கிறது வெறும் பேருதான் சார், நீங்க வேணா விஜய்னு கூப்பிடுங்க, இல்லன்னா ஆண்டனின்னு கூப்பிடுங்க…’ என்று அவர் பதில் சொல்லும்போது தியேட்டரில் பொறி பறக்கிறது. வசனம் எழுதிய வசந்த் செந்தில் தனியாக கவனிக்க வைக்கிறார்.

படத்தின் ஹீரோயின் அக்ஷா பர்தாசனி பற்றிதான் ஏற்கனவே சொல்லிவிட்டோமே அரை கிழவி என்று? ‘மாட்னா மண்டையிலேயே குட்டணும்ப்பா’ என்று நினைத்துக் கொண்டிருக்கிற நேரத்தில்தான், அந்த சந்தோஷமான காட்சி. ‘நான் சொன்னா அவன் கேட்பான்’ என்று போலீசிடம் தெனாவட்டாக கூறிவிட்டு விஜய் ஆன்ட்டனியை சந்திக்க போகிறார். லேசாக கதவை திறக்கிற விஜய் ஆன்ட்டனி அவருக்கு கொடுக்கிற ட்ரீட்மென்ட், ஹப்பா… நிறைவு! அட… இவர்தான் இப்படி என்றால், ஐட்டம் டான்சில் ஒருவரை ஆட விட்டிருக்கிறார்கள். அவர் முக்கால் கிழவி. (படத்தில் தன்னை விட யாரும் அழகாயிருந்துவிடக் கூடாது என்று விஜய் ஆன்ட்டனி உத்தரவு ஏதும் போட்டிருப்பாரோ? )

தனது மகன் கடத்தப்பட்டுவிட்டான் என்பதை அறிந்த வினாடியிலிருந்தே கொஞ்சம் கொஞ்சமாக விஷம் தலைக்கேறி கொத்த தயாராக காத்திருக்கும் மந்திரியாக வருகிறார் ஆர்.என்.ஆர்.மனோகர். அவர் கண்களே பாதி கொடூரம். என்ன புடுங்குறீயா அங்க? என்று போலீஸ் அதிகாரியை எத்தும் கெத்து! தம்பி… திடீர்னு போனை கட் பண்ணிர்றீங்க என்று நரி சிரிப்போடு பேச ஆரம்பிக்கும் கம்பீரம் என்று தியேட்டரையே கலவரப்படுத்துகிறார் மனுஷன். தமிழ்சினிமா ஆராதிக்கப்பட வேண்டிய புதிய வரவு!

‘பையனுக்கு பதினெட்டு வயசு ஆகல. அவனை மைனர் ஜெயில்லதான் போடுவாங்க’ என்று குற்றவாளிக்கு ஆதரவாக பேசுவதை போலவே விஜய் ஆன்ட்டனிக்கு போட்டுக் கொடுக்கும் அந்த காவல்துறை அதிகாரி மௌலியும் கவர்கிறார். (இவர் ஹரிதாஸ் படப்புகழ் அதிகாரிதான்)

படத்தின் இரண்டாம் பாதியில் ஒரு நட்சத்திர ஓட்டலையும் ஒரே ஒரு அறையையும் சுற்றி வருகிறது கதை. ஆனால் சிறிதளாவது போரடிக்க வேண்டுமே? அங்குதான் தன் திரைக்கதை சாமர்த்தியத்தை நிலைநாட்டுகிறார் இயக்குனர் நிர்மல்குமார். அவ்வளவு சீரியசான இடத்திலும் ரசிகர்களை பொசுக்கென சிரிக்க வைக்கவும் தெரிகிறது அவருக்கு. ‘இவ்வளவு சத்தமா பேசுறதுக்கு எதுக்கு இவனுங்க தனியா போய் பேசணும்?’ என்று அந்த பி.ஏ மைண்ட் வாய்சில் பேசும்போது கலீராகிறது தியேட்டர்.

கதையிலிருக்கிற பரபரப்பை இருட்டும் மிரட்டலுமாக கேமிராவுக்குள் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் எம்.சி.கணேஷ் சந்திரா. முதல் பாதியில் தேமே என்று இருந்தாலும், இரண்டாம் பாதியில் எடிட்டரின் ஷார்ப்நஸ் அருமை. இசையும் விஜய் ஆன்ட்டனிதான். ‘மஸ்காரா…’ ஹிட். மற்றவையும் சோடை போகவில்லை.

இன்ஸ்பெக்ட்டர் அருள்தாசை க்ளைமாக்சில் நேரத்திலாவது மீண்டும் காட்டி, ‘அவனா நீ’ என்று ஆச்சர்யப்பட வைத்திருந்தால் தியேட்டரே குலுங்கியிருக்குமே?

‘தொடரும்…’ என்ற அபாய(?) அறிவிப்போடு தமிழ்சினிமாவில் பல படங்களை நிறைவு செய்திருக்கிறார்கள். இந்த படத்திலும் அப்படியொரு ‘என்ட் கார்டு’ வருகிறது. ஆனால்…. விஜ்ய் ஆன்ட்டனி,  வீ ஆர் வெயிட்டிங்…!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. jessy says

    எனக்கு தமிழ் படங்களை பார்க்கும் போது சில கேள்விகள் வருவதை தவிர்க்க முடியாது. ஏன் ஒரு ஹீரோயின் ? காதல் ஏன் கண்டிப்பா இருக்கு. ரவுடியா இருக்கிற ஹீரோ கடைசியா செத்தே ஆகணும்னு ஏன் ? இப்படி

    ஆங்கில படங்களில் ஹீரோ நல்லவன் கேட்டவன் இப்படி எதுவும் இருக்காது. அவனுக்கு ஒரு வேலை, அதை செய்து முடிக்க அவன் படும் கஷ்டம் எடுத்துக்கிட்ட டாஸ்க் முடிக்கணும் இப்படி தான் இருக்கும். விஜய் ஆண்டனி படங்களில் இந்த கேள்விகள் இல்லாம முழுமையா என்ஜாய் பண்ண முடிஞ்சது.

    முதல் படம் – சூழ்நிலை காரணமா தப்பு செய்தவன், கடைசி வரை தன்னோட டாஸ்க்கை முடிக்க படும் கஷ்டம், கடையா தப்பு பண்ணவன் சாகனும்னு ரொம்ப அறுக்காம, கடைசி வரை தன்னை பாதுகாத்துக்கிட்டது, இந்த படத்திலும் ஒரு டாஸ்க் ஆரம்பிச்சதும், லவ்வர் சமாதானம் பேச வந்ததும் லவ் செண்டிமேன்ட்ன்னு ஜல்லியடிக்காம அந்த பொண்ணுக்கு குடுக்கற ட்ரீட்மென்ட் இந்த மாதிரி சில விஷயங்கள் தான் இந்த ரெண்டு படங்களையும் வேற ஒரு தளத்துக்கு கொண்டு போயிடுச்சி. கீப் இட் அப் விஜய் ஆண்டனி…!!!!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தயாரிப்பு பாலா இயக்கம் மிஷ்கின் ஸ்டார்ட் கலகம்!

‘பிசாசு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் மிஷ்கின். படத்தை தயாரிப்பவர் இயக்குனர் பாலா. தணலுக்கும் தண்ணீருக்கும் கூட ஒத்துப்போகும்.... ஆனால் வித்தை திமிர் உள்ள இருவருக்கும் ஒத்துப்போகுமா?...

Close