முதல்ல டைரக்டர் அடிச்சாரு… அப்புறம் விக்ரம் அடிச்சாரு… சமந்தா பதிலால் திக் திக்?
பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று மொக்கை போட்டுக் கொண்டிருந்தார் விக்ரம். இடம்- 10 எண்றதுக்குள்ள படத்தின் டீஸர் வெளியீட்டு விழா! இப்போதெல்லாம் எந்த ஹீரோவுக்கும், நம்ம படத்தின் பிரமோஷனுக்குதான் வருகிறோம். நிறுத்தி நிதானமாக படம் பற்றி நாலு வார்த்தை பேசுவோம் என்கிற அக்கறை துளி கூட இல்லை. அதன் ஒட்டுமொத்த உதாரணமாக இருந்தார் விக்ரம். தன்னுடன் வந்த சமந்தாவை இம்ப்ரஸ் செய்ய வேண்டும் என்பதில் காட்டிய அக்கறையில் பத்தில் ஒரு சதவீதம் கூட, தன் படத்தை பற்றி பேச வேண்டும் என்பதில் காட்டவில்லை அவர். புரிந்து கொண்ட மீடியா, அவரை விட்டுவிட்டு சமந்தாவை நாடியது.
சமந்தாவுக்கு விக்ரம் தேவலாம் என்பதை போலவே இருந்தது இவரது பதில். “டைரக்டர் ஷுட்டிங்ல என்னை அடிச்சுட்டாருங்க. காயம் இதோ இருக்கு பாருங்க” என்றெல்லாம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தார். நம்ம பிரஸ்காரர்களும், தெரியாம உள்ள வந்துட்டோம். நம்ம பங்குக்கு நாலு நிமிஷம் மொக்கை போடுவோம் என்று நினைத்தார்களோ என்னவோ? “ஏன் விக்ரம் உங்களை அடிக்கலையா?” என்று அவருக்கு நிகராக செல்லம் கொஞ்சியது. “முதல்ல டைரக்டர் அடிச்சாரு. அப்புறம் விக்ரம் அடிச்சாரு. செம வலிப்பா” என்று கூறிக் கொண்டிருந்தார் சமந்தா. அதற்குள் தரிசனம் கொடுத்தது போதும் என்று நினைத்தார்கள் போலிருக்கிறது. இடத்தை காலி பண்ணிவிட்டார்கள்.
அவர்கள் போன பிறகு தனியாக நின்று பேசிக் கொண்டிருந்தார் படத்தின் இயக்குனர் விஜய் மில்ட்டன். அவரிடம், இந்த படத்திற்கு ஆங்கில பத்திரிகையில் ஒரு பக்கம் விளம்பரம் கொடுத்திருக்கீங்க. தயாரிப்பாளர் சங்கம் எந்த படத்திற்கும் ஒரு பக்கம் விளம்பரம் கொடுக்கக் கூடாது என்கிற சட்ட திட்டத்தை உருவாக்கி கடந்த பதினைந்து வருஷமாக கடை பிடித்து வருகிறார்களே? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய் மில்ட்டன், அது படத்திற்காக கொடுக்கப்பட்டது இல்ல. ரிலையன்ஸ் நிறுவனம் தனது விளம்பரத்திற்காக கொடுத்தது என்றார்.
அப்படி பார்த்தால், சூர்யா விளம்பர தூதுவராக இருக்கிறார் என்பதற்காக அவர் படத்திற்கெல்லாம் சரவணா ஸ்டோர்ஸ் ஒரு பக்க விளம்பரமும், விஜய்க்கு கொக்கோ கோலா நிறுவனம் ஒரு பக்க விளம்பரமும், சரத்குமார் படங்களுக்கு ஏதாவது வேஷ்டி நிறுவனம் ஒரு பக்க விளம்பரமும் கொடுத்தால் என்னாவது? தயாரிப்பாளர் சங்கத்தின் கண்ணில் சுண்ணாம்பு தடவி விட்டோம் என்கிற சந்தோஷம் வேண்டுமானால் மிச்சமாகலாம்!