ஒருவேளை அவங்க அப்பா அப்படியிருக்கலாம்! மெட்ரோ இயக்குனருக்கு சமுத்திரக்கனி சூடு!
அப்பா என்ற படத்தை தயாரித்து இயக்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு நல்ல இமேஜை கொண்டிருக்கும் அவர், இந்த சமுதாயத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு எடுக்கப்பட்ட படம்தான் இது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நடத்த வேண்டும்? என்பதை சொல்கிற படமாக உருவாகியிருக்கிறதாம் இந்த அப்பா.
“முதல்ல குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுற பெற்றோர்கள் வேணும். ஒரு சம்பவம்தான் இந்த கதையை நான் உருவாக்க காரணமா இருந்திச்சு. தைரிய லட்சுமின்னு ஒரு பெண். ப்ளஸ் டூ வில் 1100 மார்க்கும் மேலே எடுத்திருக்கா. அப்படியிருந்தும் தன் பெற்றோர் திட்டுவாங்களோ என்று அஞ்சி, போரம் மாலில் நான்காவது மாடியில் இருந்து குதிச்சு தற்கொலை பண்ணிகிட்டா. அந்த பெற்றோர் அவகிட்ட மனம் விட்டு பேசியிருந்தா இந்த துக்கம் நடந்திருக்குமான்னு நினைச்சேன். அதற்கப்புறம் உருவான கதைதான் இது. நானென்லாம் குறைஞ்ச மார்க் எடுத்துட்டு ஸ்கூலுக்கு போனா வாத்தியார் அடிப்பாரு. வீட்டுக்கு போனா பெத்தவங்க அடிப்பாங்கன்னு அஞ்சி, குளத்தங் கரையிலேயே நாள் முழுக்க உட்கார்ந்திருக்கேன். என்ன பண்ணுறதுன்னே தெரியாத காலம் அது. நான் இருக்கேண்டா… போனா போவட்டும்னு சொல்ற பெற்றோர் வேணும்” என்கிறார் சமுத்திக்கனி.
சமீபத்தில் திரைக்கு வந்திருக்கும் மெட்ரோ படத்தில், அப்பாவிடமே பையன் சிகரெட் கேட்பதும், அவர் அதில் பாதியை பிய்த்துக் கொடுப்பதுமாக ஒரு காட்சி இடம் பெற்றிருக்கிறது. அப்பா மகனின் சுதந்திரமான அணுகுமுறையை சொல்ல ஆயிரம் காட்சிகள் இருக்கும்போது இப்படியெல்லாம் ஏன் என்ற கேள்வியை சமுத்திரக்கனியிடம் வைத்தோம்.
“தெரியல சார். நான் பார்த்த என் அப்பா எப்படியோ, அதைதான் என் படத்தில் வச்சுருக்கேன். ஒருவேளை அந்த டைரக்டரோட அப்பா அப்படிப்பட்டவரான்னு எனக்கு தெரியாது” என்றார் அதிர்ச்சி விலகாமல்!
விரைவில் திரைக்கு வரவிருக்கும் அப்பா, ஏராளமான விருதுகளை குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எகிறிக்கிடக்கிறது இன்டஸ்ட்ரியில். அதே நேரத்தில் காக்கா முட்டை போல தியேட்டரையும் நிரப்பும் போல தெரிகிறது. எப்படி?
ஒரு விஷயத்தை அப்படியே ராவா சொல்லிட முடியாது. நடு நடுவே நிறைய சுவாரஸ்யங்களும் காமெடியும் வேணும்னு நினைச்சேன். அதுக்காகவே இந்த படத்தின் திரைக்கதையை இரண்டு வருஷமா உட்கார்ந்து உருவாக்கினேன் என்றார் சமுத்திரக்கனி.
கனி எப்படி இனிக்காமல் போகும்?