சண்டிவீரன் – விமர்சனம்

‘நீரின்றி அமையாது உலகு’ என்பதை நிறையவே சொல்லி வருகிறது தமிழ்சினிமா. பல இயக்குனர்கள் வேறொரு நீர் (?-) ஏரியாவில் உருண்டு புரண்டு அவரவர் கதையை ஓட்டிக் கொண்டிருக்கும் போது, நிஜமாகவே குடிநீருக்காக போராடுகிறது இந்த கதை. அருகருகே இருக்கும் இரண்டு கிராமங்களுக்கு நடுவில் ஒரு குளம். அந்த தண்ணீரை குடிக்கக் கேட்டு ஒரு கிராமமும், கொடுக்கவே முடியாது என்று இன்னொரு கிராமமும் மல்லுக்கு நிற்க, தரவேண்டிய கிராமத்திலிருக்கும் அதர்வா இவ்வுலகுக்கு தரும் அட்வைஸ் என்ன? க்ளைமாக்ஸ்! நடுவில் காதல், மோதல், காமெடி என்று சினி பார்முலாவை சிந்தாமல் சிதறாமல் கடை பிடிக்கிறது திரைக்கதை.

சற்றே வளர்ந்த தலைமுடியுடன் ஊர் திரும்பும் மலேசியா ரிட்டர்ன்களை பலத்த சந்தேகத்தோடு பார்க்க வைப்பது போல ஒரு சொல்லை அறிமுகப்படுத்துகிறார் டைரக்டர் சற்குணம். ஏதோ ‘ரோத்தா’வாம்ல? இந்த படத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தப்படாத போர்ஷன் அது. இருந்தாலும், ஹீரோயின் ஆனந்தி, ‘எத்தனை ரோத்தா வாங்குன?’ என்று அதர்வாவை கலாய்க்க செமத்தியாகவே உதவியிருக்கிறது அது. அந்த ஊரிலேயே பணக்காரரான லாலின் பெண் ஆனந்தி. லால் மில்லில் தவுடு தள்ளும் தொழிலாளி ராஜஸ்ரீயின் மகன் அதர்வா. லவ் வரணுமே? வந்து விடுகிறது.

எந்த நேரத்திலும் அது லாலுக்கு தெரிய வரும். வெட்டுக்குத்து ரத்தாபிஷேகம் நிச்சயம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்க, நினைப்பது போலவே நடக்கிறது எல்லாம். மகளை காதலித்தவனை பழிவாங்க ஊர் குளத்தை மையமாக வைத்து லால் நடத்தும் அந்த நாடகம் துவங்கியதிலிருந்தே விறுவிறுப்பும் துவங்கி விடுகிறது. கடைசி அரை மணி நேரம் வரைக்கும் மொத்த ரசிகனையும் முள்ளின் மேல் ஏற்றி டென்ஷன் கொடுக்கிறார் டைரக்டர் சற்குணம். அதற்கப்புறம் அந்த டெம்போ அப்படியே குறைந்து லால் காமெடியன் ஆகிவிட, கடைசி அரைமணி நேரம், ஐயோ சற்குணம்… ரொம்பவே சறுக்குனோம்!

ஒளிபடைத்த கண்ணினாய் ஆக வருகிறார் அதர்வா. அது ஆனந்தியின் இதயத்தை துளைத்து லவ் வரவழைப்பதெல்லாம் ரெகுலர் சினிமாதான். ஆனால்? இந்த ஜோடி அவ்வளவு யதார்த்தம்! சம்பந்தமேயில்லாத ஒருவனிடம், நான் அப்படியிருக்கக் கூடாது. ஸாரி… என்று அதர்வா ஜாடை பேச, புரிந்து கொண்டு நடையை கட்டுகிற ஆனந்தி, அதற்கப்புறம் அதர்வாவிடம் விழுவதை ரசிக்கும்படி சொல்லியிருக்கிறார் சற்குணம். புத்தகத்துக்குள் புளூ டூத்தை மறைக்கும் அந்த டெக்னிக் இனி இளசுகளுக்கு பயன்படும். அதை கொண்டை ஊசி என்று நினைத்து ஆனந்தியின் அம்மா தலையில் செருகிக் கொண்டு போகிற கற்பனைக்கு தனி மார்க் தர்றோம் பாஸ்!

‘கர்நாடகா காரன் தண்ணி கொடுக்கலேன்னு சண்டை போடுறோம். ஆனால் பக்கத்து ஊருக்கு தண்ணி தர மாட்டேங்குறோம்…’ என்கிற வசனம் நெற்றி பொட்டில் அறைகிற ரகம். அதைப்போலவே அந்த தண்ணீர் பாட்டும்! எழுதிய விரல்களுக்கும் அந்த வரிகளுக்கு ட்யூன் போட்ட விரல்களுக்கும் வாழ்நாள் முழுக்க வாட்டர் கேன் சப்ளை பண்ணலாம். அதுவும் இலவசமாக!

பரபர பைட் இருக்கிறது. அதற்கு இணையாக இருக்கிறது அந்த கரெண்ட் கம்பி காட்சிகள். இன்னும் சற்று நேரத்தில் பக்கத்து ஊர் காலியாக போகிறது. வெடிகுண்டு வீச்சரிவாள்களுடன் கிளம்புகிறவர்களை தடுக்க வேண்டும். என்ன செய்யப் போகிறார் அதர்வா? டெம்ப்ட் ஏற்றி திருப்புமுனை ஏற்படுத்துகிற திரைக்கதைக்கு ஒரு ஷொட்டு.

அதர்வா, ஆனந்தி, லால் என்று அந்த ஊரிலிருக்கும் அத்தனை பேரும் அளந்து வைத்த மாதிரி அழகாக நடித்திருக்கிறார்கள். பிஜிமுத்தையாவின் ஒளிப்பதிவும், எஸ்.என்.அருணகிரியின் இசையும் ஆஹா ஓஹோ. அப்படியிருந்தும்….

ஒண்டி வீரனாக நிற்கிறார் அதர்வா. பாராட்டுகள். ஆனால் சண்டிக்குதிரையாக இழுக்கிறதே படம்?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆவிப்படம் ஆயிரம் வருது… ஆனா இவங்க பயமுறுத்தல!

‘உனக்கென்ன வேணும் சொல்லு!’ இதுவும் ஒரு ஆவிப்படம்தான். ஆனால் கையிலெடுத்து கொஞ்ச வைக்கிற குழந்தை ஆவி. தனது வாழ்வில் நடந்த ஒரு அமானுஷ்யமான விஷயத்தை மையக்கருவாக எடுத்துக்...

Close