சண்டியர் விமர்சனம்

‘மதுரக்காரங்க அருவாளுக்கு மட்டும்தான் மருதாணி கலரா? எங்களுக்கும்தான்’ என்று தஞ்சாவூர் காரர்கள் கிளம்பினால் எப்படியிருக்கும்! அதுதான் ‘சண்டியர்’. அறிமுகமில்லாத நடிகர்கள், ஆற்றில் நெளியும் மீனை போல அசால்ட்டாக கடந்து செல்லும் வசனங்கள் என்று படம் இன்னொரு ‘களவாணி’யாகவும் இருப்பதுதான் சண்டியரின் க்ரீன் சிக்னேச்சர்!

‘கடவுள் இல்லை’ என்கிற கொள்கையுடைய நாத்திக சிந்தனையாளனுக்கு கிடைக்கிற சின்ன சின்ன மேடைகள், அவனை திக்கி திணறி நெருங்கி வரும் அரசியல் அந்தஸ்து என்று நகர்கிறது வாழ்க்கை. அந்த ஊரின் சேர்மன் ஆக வேண்டும் என்கிற லட்சியத்தோடு காய் நகர்த்தும் அவனுக்கு நடப்பு சேர்மன்தான் பெரிய எதிரி. அவனை கவிழ்க்க ஆயுதம் எடுக்கும் ஹீரோ, அதில் ஒரு ஆயுதமாக அந்த சேர்மன் வீட்டு பெண்ணையே தேர்ந்தெடுக்கிறான். காதல்! இப்படி பிரசண்ட் சேர்மனுக்கும் பியூச்சர் சேர்மனுக்கும் நடுவில் நடக்கிற போராட்டங்கள் ரத்த களறியாக முடிக்கப்படும் போது, தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடந்த சில பல கொலைகள் நினைவுக்கு வர, திடுக்கிடும் முடிவு… ?

தஞ்சை மாவட்டத்தின் ‘ஸ்லாங்’ மிக அற்புதமாக பொருந்தியிருக்கிற படம். கதை நடக்கும் ஏரியாவும், கதாபாத்திரங்களின் இயல்பும் படம் துவங்கி பத்தாவது நிமிடத்தில் நம்மை கதைக்குள் ஈர்த்துக் கொள்கிறது. இது வழக்கமான அடிதடி மசாலாவல்ல, அதையும் தாண்டி என்று தெரியவரும் போது சடக்கென்று நிமிர்ந்து உட்காருகிறோம். அதற்கப்புறம் நம்மை முதுகு சாய விடவேயில்லை அறிமுக இயக்குனர் சோழதேவனும், எடிட்டர் சரவணனும்.

‘என் மேல பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுன சேர்மன் இங்க வந்தாவணும். இல்லேன்னா தேர் நகராது’ என்று சாமிக்கே ஜர்க் கொடுக்கும் அறிமுக ஹீரோவாக ஜெகன்! விஜய் சேதுபதி மாதிரி முன்னணி ஹீரோக்கள் பண்ணியிருக்க வேண்டிய ரோல் அது. அதை வெகு சாதாரணமாக தோளில் போட்டுக் கொண்டு நடக்கிறார் மனுஷன். ‘நீ கும்பிடுற சாமியையும் ஒரு கன்னுக்குட்டியையும் குளத்துல போடு. எது நீந்தி கரைக்கு வருதோ, அதை கும்பிடு’ என்று நாத்திகம் பேசுகிற போது நிமிர வைக்கிறார். ‘அதிரடிப்படை வர இன்னும் இருபது நிமிஷம் இருக்கு. அதுக்குள்ள செத்துற மாட்டோம்’ என்று கம்பீரமாக காய் நகர்த்துகிற போது மிரள வைக்கிறார். சண்டைக்காட்சிகளில் பொய்யில்லாமல் அடிக்கிறார்… வாங்குகிறார்…. இந்த ‘சண்டியருக்கு’ தமிழ்சினிவுல வாழ்வு இருக்குடோய்!

இப்படியொரு ரத்தகளறி படத்தில் காதலை காமா சோமாவென்றுதான் கையாளுவார்கள். ஆனால் ‘பொயட்டிக்’ பொழிப்புரையே எழுதியிருக்கிறார் இயக்குனர் சோழதேவன். அதுவும் ‘அக்கா… நீ இதை வாங்கிக்கலேன்னா அந்த அண்ணன் என்னை அடிப்பாருக்கா’ என்று கெஞ்சி கெஞ்சியே போண்டாவை ஹீரோயின் கையில் திணித்துவிட்டு போகிறான் டீ கடை பொடியன். அந்த போண்டாவை திருப்பி ஹீரோ முகத்தில் விட்டெறிந்துவிட வேண்டும் என்று பத்திரமாக எடுத்து வைக்கிறாள் ஹீரோயின். மறுநாள் அந்த போண்டா அவன் கைக்கு போகிற வரைக்கும் அதற்கும் ஒரு ட்விஸ்ட் ப்ளே வைக்கிறாரா…? தியேட்டரே விழுந்து புரள்கிறது சிரிப்பால். அந்த ஊர் மினி பஸ்கள் இவர்களுக்காக நின்று நின்று கிளம்புவதெல்லாம் சுவாரஸ்யம். ஒரு ஆபத்தான கட்டத்தில் ஹீரோவை காப்பாற்ற ஹீரோயின் எடுக்கும் முடிவு அதிர்ச்சி ப்ளஸ் அற்புதம். தஞ்சை மண்ணை வழித்துப் பூசிக் கொண்டு நிற்கிறது அந்த பெண்குட்டி. ஒரிஜனல் பெயரே கயல்தானாம்.

படத்தில் கவனத்தை ஈர்க்கும் இன்னொரு நடிகர் டி.ரவி. சேர்மனின் அப்பா. எந்நேரமும் வெற்றிலையை மெல்லும் வாய். அலங்க மலங்கடிக்கிற நேரத்திலும் கூட அசராத நிதானம் என்று வாழ்ந்திருக்கிறது இந்த ‘தஞ்சாவூர் பெரிசு’. அதற்கப்புறம் ஜெகனின் நண்பர்களாக நடித்திருக்கும் அத்தனை பேரும் கவர்கிறார்கள். சாலியமங்கலம் கடைத்தெருவில் புரட்டி எடுக்கப்படும் அந்த இளைஞன் வாங்குகிற அவ்வளவு அடியிலும் யதார்த்தம் ரத்தமாக பொத்துக் கொண்டு ஊற்றுகிறது. முக்கியமாக சிங்கம்புலி. குடித்துவிட்டு அவர் பண்ணும் அமர்க்களங்கள் இன்னும் கொஞ்ச நாளைக்கு நகைச்சுவை சேனல்களுக்கு செம தீனி போடும்.

‘எந்த கட்சியா இருந்தா என்ன? அதை யதார்த்தம் ஏறி போட்டு மிதிக்கணும்’ என்று நினைத்தே வசனங்களை எழுதியிருப்பார் போலிருக்கிறது. மணல் பிரச்சனை, சாலை பிரச்சனை, 100 நாள் வேலை திட்டத்தில் ஆரம்பித்து, விவசாயிகளுக்கு நெல் விலை நிர்ணயிப்பது வரை அரசியல்வாதிகளின் குரல்வளையை பிடித்திருக்கிறார் டைரக்டர் சோழதேவன். அந்த தைரியத்திற்காகவே இன்னொரு முறை கை குலுக்கலாம் அவருக்கு. இந்த வருடத்தின் கவனிக்கப்பட வேண்டிய இயக்குனர்கள் லிஸ்ட்டில் இவரும் இருக்கிறார்.

இசை- யத்தீஷ் மகாதேவ். பாடல்கள் இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம். ஒரு பாடலை ஒரு பல்லவி ஒரு சரணத்தோடு முடித்திருக்கிற ‘கட்ஸ்…’ இயக்குனரை மீண்டும் பாராட்ட வைக்கிறது. ஹரிபாஸ்கரின் ஒளிப்பதிவு தஞ்சை கிராமத்தை பசியோடு மேய்ந்திருக்கிறது. குறிப்பாக சில ஏரியல் ஷாட்டுகளும் இரவுக்காட்சிகளும் நேர்த்தி. க்ளைமாக்சுக்கு சற்று முன்பு மாட்டுப்பொங்கல் தினத்தன்று வந்திறங்கும் அந்த கூலிப்படை யாரை கொல்வதற்கு? என்பதை ஒரு சின்ன கட் போட்டு பின்னாடி விவரிப்பதில் கவனம் பெறுகிறார் எடிட்டர் சரவணன்.

ஒரு காட்சியில் தெருவின் இருபுறமும் கிடக்கும் ஆட்டுத்தலைகள், கறித் துண்டுகளை குளோஸ் அப்பில் வெட்டுவது, சேவல் சண்டை, என்று பிராணிகள் நல வாரியம் கவனிக்க நிறைய காட்சிகள். அந்த ‘வெட்டு’ கண்களிலிருந்து இவையெல்லாம் தப்பித்தது எப்படி என்பதுதான் மர்மமாக இருக்கிறது. பிற்பாதியில் வருகிற வன்முறை காட்சிகள் காரக் குழம்பு வைக்கிறேன் பேர்வழி என்று காரத்தையே குழம்பாக வைத்த கதையாக முடிந்திருக்கிறது.

மற்றபடி, ‘சண்டியர்’ சைலன்ட்டாக ஊர்ந்து கொண்டிருக்கும் கோடம்பாக்கத்தை அரிவாளால் ‘முதுகு கொத்தி’ திரும்பி பார்க்க வைக்கிற படம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. ஜெஸ்ஸி says

    ஆமா சண்டியர்ன்னு பேர் வெச்சி கமல் படம் எடுத்தப்போ எங்களை இழிவு படுத்துகிறார்கள்ன்னு திருமாவளவனும், ராமதாசும் போட்டி போட்டு போராட்டம் பண்ணினாங்களே, இப்போ மட்டும் அவங்களை காணோம்…?

    கமல் சண்டியர்ன்னு பேர் வெச்சாதான் பிரச்சனையா..? மத்தவங்க அதே பேரை வெச்சா ஒன்னும் பிரச்சனை இல்லையா ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆவி, பிசாசு, பேய், பில்லி சூனியம் வாட் நெக்ஸ்ட்?

பழிவாங்குகிற விஷயத்தில் ஆவிகளுக்கு இணையாக ஆளுங்கட்சிகள் கூட இருக்க முடியாது. அது போல சாமியார்களில் எத்தனை வகையோ தெரியாது. ஆனால் ஆவிகளில், பேய்களில் எத்தனை வகை என்பதை...

Close