சந்தானத்திற்கு யார் மீது கடுப்பு?

கூரையேறி கோழி பிடிக்க வந்தவங்க பல பேரு வானம் ஏறி நட்சத்திரம் பறிச்ச கதை சினிமாவுக்கு புதுசல்ல! அள்ளிய நட்சத்திரத்தை சிதற விடாமல் பார்த்துக் கொள்வது அவரவர் பாடு. அப்படி கைநிறைய அள்ளிய சந்தானம், நிதானமாக இருக்க வேண்டிய நேரம் இது என்பதை அவரது பேச்சே காட்டிக் கொடுத்தது. (‘பேச்சே’வுக்கு முன் மூன்றெழுத்தில் ஒரு சொல்லை குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும். அது என்னவென்று அவரது மேடை பேச்சை படித்தபின் பூர்த்தி செய்து கொள்ளவும்)

‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா தேவி திரையரங்கத்தில் நடந்தது. உள்ளே நுழையவே முடியாதளவுக்கு திரண்டிருந்தார்கள் ரசிகர்கள். (அது திரட்டி வரப்பட்ட கூட்டமா? அல்லது தானாக திரண்ட கூட்டமா? வவுச்சர்ல கையெழுத்து வாங்குனவருக்குதானே தெரியும்?) விழா நடந்த இடத்திற்கு வந்து சேர வேண்டிய நடிகர் பார்த்திபன், யூடிவி தனஞ்செயன் போன்ற பிரபலங்கள் ஐயோடக்ஸ் தடவுகிற அளவுக்கு ஆளாகிதான் உள்ளே நுழைய முடிந்தது. அதற்குள் தேவி தியேட்டரின் ஒரு கதவை படீரென உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் சந்தானத்தின் ரசிகர்கள்.

படத்தின் இயக்குனர் ஸ்ரீநாத்தின் நீண்…..ட பேச்சுக்கு பிறகு மைக்கை பிடித்தார் ‘காமெடி சூப்பர் ஸ்டார் ’ சந்தானம். (அப்படின்னு நிகழ்ச்சி தொகுப்பாளினி ரம்யாதான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தார்)

‘இந்த படமே என்னோட ரசிகர்களுக்காகதான் பண்றேன். நான் விஜய் டிவியில ‘லொள்ளு சபா’ நடத்திட்டு இருந்த காலத்திலிருந்தே ‘தலைவா… நீங்க தனி ஹீரோவா நடிங்க’ன்னு எங்கிட்ட கேட்டுகிட்டேயிருந்தாங்க என்னோட ரசிகர்கள். எனக்குன்னு ஒரு மார்க்கெட் வேல்யூ வர்ற வரைக்கும் காத்திருப்போம்னு காத்திருந்தேன். இப்ப அது வந்திருக்கு. எவ்ளோ காலத்துக்குதான் இன்னொரு ஹீரோவோட லவ்வுக்கு ஹெல்ப் பண்ற மாதிரி நடிக்கறது? நம்மளே ஹீரோவா நடிப்போம்னு இறங்கிட்டேன்’.

‘என் வீடு இருக்கிற பொழிச்சலுர்ல நிறைய பசங்க எங்கிட்ட வந்து ‘மச்சான்… அவன் என்னை கலாய்ச்சுட்டான். வாடா’ன்னு சண்டை போட கூப்பிடுவானுங்க. நான் அவனுங்ககிட்ட சொல்லுவேன். ‘உனக்கு தில்லு இருந்தா தனியா போய் மோது. எதுக்கு இன்னொருத்தனை எதிர்பார்க்கிறே’ன்னு? நான் என்னை நம்பிதான் இந்த படத்தில் இறங்கியிருக்கேன். மரியாதை ராமண்ணா படத்தை தமிழ்ல ரீமேக் பண்ணனும்னு முடிவு செஞ்சப்போ, நான் தயாரிப்பு நிறுவனமான பி.வி.பி யிடம் பேசினேன். அவங்க யாரை வச்சு பண்ணப் போறீங்கன்னு கேட்டாங்க. டைரக்ஷன் ஸ்ரீநாத் பண்ணிக் கொடுப்பாருன்னு ஆரம்பிச்சு படத்துல வேலை செய்யுற டென்னீஷியன்ஸ் பேரையெல்லாம் சொன்னேன். இதுல யார் பெயரையும் நாங்க முன்ன பின்ன கேட்டது கூட இல்லையேன்னாங்க. என்னை நம்புங்க. பெரிய பெரிய டெக்னீஷியன நம்பி இறங்கிறதை விட நான் என்னை மட்டுமே நம்பிதான் இதுல இறங்கியிருக்கேன். நல்லா எடுத்துக் கொடுப்பேன்னு சொன்னேன். அவங்க நம்பியிருக்காங்க’ என்றார் சந்தானம்.

‘இந்த நிகழ்ச்சிக்கு முன்னணி ஹீரோக்களோ, முன்னணி இயக்குனர்களோ யாருமே வரவில்லை. நான் யாரையும் அழைக்கவில்லை என்று கூறிய சந்தானம், நான் நல்லா வரணும்னு நினைக்கிற சில உள்ளங்களை மட்டும்தான் இங்க வரவழைச்சிருக்கேன். மயில்சாமி மாமாவுக்கெல்லாம் இன்னைக்கு காலையிலதான் போன் பண்ணி வரச்சொன்னேன். வந்துட்டாரு’ என்றார். சற்று தாமதமாக வந்தாலும், மேடையேறி சந்தானத்தை மனமார வாழ்த்தினார் உதயநிதி ஸ்டாலின்.

ஒன்று மட்டும் நன்றாக புரிகிறது. யார் மீதோ செம கடுப்பிலிருக்கிறார் சந்தானம்.

முக்கிய குறிப்பு- ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் எப்படி? நகைச்சுவை பிரியர்களுக்கு முட்ட முட்ட ஒரு விருந்து ரெடி!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி- மோடி சந்தித்த வேளை…. எரிச்சல் ப்ளஸ் அதிர்ச்சியில் நிருபர்கள்

நாடாளுமன்ற தேர்தல் தேதி நெருங்கி வரும் வேளையில் ரஜினியும் பிரதமர் வேட்பாளர் மோடியும் சந்தித்துக் கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் தன்னை சந்திக்க எவர் வந்தாலும்,...

Close