வராத சந்தானமே வந்துட்டாரு… அவ்ளோ பெரிய அன்பா அது?
அவர் படத்தின் ஆடியோ விழா என்றால் கூட அந்த இடத்தில் சந்தானம் இருக்க மாட்டார். பட பிரமோஷன்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர் நடிகைகளில் அஜீத் நயன்தாராவுக்கு முதலிடம் என்றால், அதற்கப்புறம் பளிச்சென கண்ணில் படுகிறவர் சந்தானம் மட்டும்தான். அப்படிப்பட்ட அவரே, தான் நடிக்காத படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார் என்றால், அந்த விழா எவ்வளவு முக்கியமானதாக இருந்திருக்க வேண்டும்?
ஆறு மணிக்கு துவங்கப் போகிற விழாவுக்கு ஐந்து மணிக்கே வந்துவிட்டார். அவருக்கு முன்னாலேயே அங்கு வந்து காத்திருந்த நடிகர் பிரபுவுடன் அமர்ந்து பொழுதுபோக்கிக் கொண்டிருந்தார். (யாருக்கு கொடுத்த கால்ஷீட்டிலோ லட்சங்கள் கரைந்து கொண்டிருந்தன) மாலை ஏழு மணிவரை நிகழ்ச்சி ஆரம்பிக்கப் படவேயில்லை. அப்படியிருந்தும் சந்தானம் காத்திருந்தது யாருக்காக?
அசுர குலம் என்ற படத்தின் ஆடியோ விழாதான் அது. இதில் ஹீரோவாக நடிப்பவர் பிரபல ஸ்டன்ட் மாஸ்டர் பெப்ஸி விஜயனின் மகன் சபரீஷ். சந்தானம் வந்தது மாஸ்டரின் அன்புக்காகதானாம். அப்படியென்ன மாஸ்டருக்கும் அவருக்குமான உறவு? அந்த விழாவில் அதையும் சொன்னார் சந்தானம். (நம்புற மாதிரியாவா இருக்கு?)
”இந்த சபரிஷுடன் நான் ஏற்கெனவே ‘மார்க்கண்டேயன்’ படத்தில் நடித்திருக்கிறேன். இதில் நான் நடிக்கவில்லை. இருந்தாலும் அன்புக்காக வந்திருக்கிறேன். ‘மார்க்கண்டேயன்’ படத்தை ஒரு காட்டில் எடுத்தோம். வீரப்பன் கூட நுழையமுடியாத காடு அது. அங்கு டாய்லட் கட்டி மின் சாரம் , ஏசி என்று எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் மாஸ்டர்.
பத்துமாதம் சுமந்து அம்மா பெற்றாலும் எல்லாருக்கும் ரோல்மாடல் அப்பாதான். எங்கள் அப்பா குடிக்க மாட்டார். புகை பிடிக்க மாட்டார். அவர் ஒரு பில்டிங் காண்ட்ராக்டர். இருந்தாலும் தன்னிடம் வேலை பார்ப்பவர்களிடம் ஜாலியாக அரட்டை அடிப்பார். அவர்தான் என் முதல் ஹீரோ. சபரிஷுக்கு நல்ல அப்பா, கிடைத்து இருக்கிறார். சபரிஷுக்குத் துணை நிற்போம். என்னை ரசிக்கும் ரசிகர்கள் என் தம்பி சபரிஷ் படத்தையும் பார்க்க வேண்டுகிறேன்”. என்றார்.