இதுதான் உங்க நன்றியா சந்தானம்?

தமிழ் சினிமா எல்லாருக்கும் மகுடம் சூட்டுவதில்லை. அப்படி சூடிக் கொள்கிற சிலர், மகுடம் வந்த கொஞ்ச நாளிலேயே மறதியையும் அள்ளி தலையில் வைத்துக் கொள்கிறார்கள். அந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் இருக்கிறார் சந்தானம். வந்த பாதையை திரும்பி பார்த்தால், புண்ணியம் வந்து சேரும் என்று நினைத்திருக்கலாம். அதனால்தான் தனக்கு தயாரிப்பாளர் அந்தஸ்து கொடுத்து அழகு பார்த்த இராம.நாராயணன் மறைவுக்கு அஞ்சலி செலுத்த கூட செல்லவில்லை.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் சிங்கப்பூர் மருத்துவமனையில் தமிழ்சினிமாவின் அற்புதமான மனிதர் என்று எதிரிகளும் போற்றக் கூடிய இராம.நாராயணனின் உயிர் பிரிந்தது. திங்கட் கிழமை கூட அவரது உடல் சென்னைக்கு வரவில்லை. செவ்வாய் காலைதான் வந்து சேர்ந்தது. நடுவில் ஒரு நாள் முழுசாக இருந்தது. உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வந்து சேருகிற அவகாசமும் இருந்தது. ஆனால் நேற்று இராம.நாராயணனின் உடல் தகனம் செய்கிற கடைசி நிமிடத்தில் கூட சந்தானத்தை அங்கு காணோம்.

சந்தானத்திடம் ‘உன்னை ஹீரோவாக்குறேன்’ என்று வாக்குறுதி கொடுத்தவர்கள் பலரும் அமைதியாக இருக்க, சுமார் நாலு வருடங்களுக்கு முன்பே, ‘நான் உன்னை ஹீரோவா வச்சு படம் எடுக்கிறேன்’ என்று அட்வான்ஸ் கொடுத்தவர்தான் இராம.நாராயணன். கண்ணா லட்டு திங்க ஆசையா படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு சந்தானத்தை முதன் முதலாக தயாரிப்பாளராக ஆக்கியவரும் அவர்தான். அந்த படத்தை நல்ல விலைக்கு விற்றுக் கொடுத்து சந்தானத்திற்கு மட்டுமே சுமார் பத்து கோடி லாபம் பார்த்துக் கொடுத்தவரும் அவர்தான்.

இவ்வளவு செய்தவரின் மறைவுக்கு சந்தானம் கொடுத்த மரியாதைதான் அந்த மன்னிக்க முடியாத ஆப்சென்ட். இத்தனைக்கும் இன்று (புதன் கிழமை) சென்னையில் அவரது வாலிப ராஜா படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. ஊருக்கு முன்னால் வந்து சந்தானம் அலப்பறை கொடுப்பார் என்பதை சொல்லவும் வேண்டுமா?

நல்லாயிருக்குப்பா உங்க நன்றி நவிலல்!

Read previous post:
நமீதா வந்தாலும் பிரச்சனை வரலேன்னாலும் பிரச்சனை

கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் சேலம் நாமக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு போயிருந்தார் நமீதா. அவரை தொட்டுப்பார்க்கும் ஆசையோடு குவிந்த கூட்டம், அப்படியே ஆர்ப்பரித்து மேடையை நோக்கி...

Close