ஏற்கனவே வம்பு… மறுபடியும் எதுக்குப்பா மீனாவ இழுக்கறீங்க? சரத்குமார் பதிலால் ‘சண்டமாருதம் ’ திகைப்பு
அட… இதென்னடா அசுரப் பாய்ச்சலாக இருக்கிறதே என்று ஆச்சர்யப்பட வைத்தார் சரத்குமார். ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் மூன்று படங்களின் துவக்க விழாவுடன், தனது ‘சண்டமாருதம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையும் ஒரே நேரத்தில் வைத்து அலறவிட்டார் இன்டஸ்ட்ரியை! அத்தனையும் முத்தான புராஜக்டுகள் என்பதுதான் விசேஷம். தனுஷ் நடிக்கும் மாரி, பாபி சிம்ஹா நடிக்கும் பாம்பு சட்டை, விக்ரம் பிரபு நடிக்கும் இது என்ன மாயம் ஆகிய மூன்று படங்களும் சரத்குமாரின் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் சினிமா நிறுவனம்தான் தயாரிக்கிறது. இணை துணை தயாரிப்பாளர்கள் வேறு நபர்களாக இருந்தாலும், சரத் என்பதால் சற்று கூடுதலான அந்தஸ்து அவற்றிற்கு!
‘சண்டமாருதம்’ படத்தின் ட்ரெய்லரை ரஜினியிடம் காண்பித்தாராம் சரத். அப்போது அவரை ரொம்பவே பாராட்டினாராம் ரஜினி. ஏன்? ‘இப்பல்லாம் ஒரு ஹீரோ வில்லனாகவும் நடிச்சா ஒரு தனி கவன ஈர்ப்பு இருக்கு அதில். ரசிகர்களும் அதை விரும்புறாங்க. நீங்களும் இப்போ அந்த வழிக்கு வந்திருப்பது நல்லது’ என்றாராம். ஏனென்றால் இந்த படத்தில் சரத்குமாருக்கு இரண்டு வேடங்கள். ஒன்றில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த கதையை டைரக்டர் வெங்கடேஷ் சரத்குமாருக்கு சொல்லும்போதே ஒரு விஷயத்தை அழுத்தமாக சொன்னாராம். படத்தின் ஹீரோவுக்கு பெரிய வேலையில்லை. வில்லனுக்குதான் பவர்புல் ரோல். அதனால் அதை வேறொரு நடிகர் செய்வதற்கு பதிலாக நீங்களே செஞ்சுருங்க என்பதுதான் வெங்கடேஷின் யோசனை. முதலில் வில்லனாக நடிப்பதா என்று தயங்கிய சரத், அதற்கப்புறம் முழு மனசோடு இறங்கிவிட்டார். படத்தில் அவரது கிடா மீசையும், சுருட்டு பிடிக்கும் ஸ்டைலும் வேறொரு சரத்தை நமக்கு காட்டும்.
சண்டமாருதம் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இந்த படத்திற்கு இசையமைக்க வந்த கதையை அவர் விவரிக்க விவரிக்க, அங்கிருந்த டைரக்டர் வெங்கடேஷ்தான் ஓவராக நெளிந்தார். அவருடைய படங்களையெல்லாம் ஒரு ஆடியன்சா பார்த்துருக்கேன். ஆனால் அவர் படத்துக்கு நான் இசையமைப்பேன்னு கனவுல கூட நினைச்சதில்ல. ஏன்னா, அவரு பாணி வேற. நான் இசையமைக்கிற பாணி வேற. திடீர்னு என்னை தேடி வந்து நீங்கதான் இந்த படத்துக்கு இசையமைக்கணும்னு அவர் கேட்டப்போ எனக்கு பயம்மா இருந்திச்சு. என்னை சுதந்திரமா வொர்க் பண்ண விடுவாரா? அவர் படங்களில் வர்ற பாடல் வரிகளில் அப்படி இப்படி டபுள் மீனிங்கெல்லாம் இருக்குமே? நம்மையும் அதுக்கு வற்புறுத்துவாரோன்னு நினைச்சேன். ஆனால் என்னிடம் எடுத்த எடுப்பிலேயே அவர் சொன்னது உங்க பாணியிலேயே பாடல்கள் இருக்கட்டும் என்பதுதான். நான் சந்தோஷப்பட்டு முடிவதற்குள்ள, ஒரு ஐட்டம் சாங் வேணும்னார்.
நான் ஐட்டம் சாங் போட்டதேயில்ல. இருந்தாலும் அவருக்காக ட்யூன் போட்டேன். பாடலை மோகன்ராஜ் எழுதினார். நீ கழுவுற மீனா இல்ல நழுவுற மீனான்னு அவர் முதல் வரி எழுதினார். அதற்கப்புறம் அங்கு வந்த சரத்குமார், ஏற்கனவே என்னை பற்றி தப்பு தப்பா சொல்றாங்க. இதுல இவரு வேற மீனா மீனான்னு எழுதியிருக்காரு. அது வேணாம்னு சொல்லிட்டார். அப்புறம் வரிகளை வேற மாதிரி மாத்தினார் டைரக்டர். டும்மாங்கோலின்னு ஒரு வார்த்தை எழுதியிருக்கார். சத்தியமா அதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு தெரியல என்று போடு போடென்று போட, ஏரியாவே கலகல!
சரத்குமாருக்கு ஜோடியாக ஓவியாவும், மீரா நந்தனும் நடித்திருக்கிறார்கள். ஸ்கிரீன்ல சரத் யங் ஆகிட்டாரா? அல்லது அவங்கதான் முத்திட்டாங்களா தெரியவில்லை. பட்…. ஓட்டப்பந்தயத்துல சரத் சார் முன்னைவிட எனர்ஜியோட தயாரா இருக்கார்னு மட்டும் புரியுது.