சதுரங்க வேட்டை விமர்சனம்
நெத்தியில நாமம் போடவென்றே ஸ்பெஷல் நாமக்கட்டியோடு திரிகிற கூட்டம் ஒன்று, உங்களுக்கு பக்கத்திலேயே இருக்கலாம். ‘பாக்கெட் ஜாக்கிரதை’ என்பதுதான் இந்த படத்தின் அட்வைஸ்! இது ஏமாறுகிறவன் தப்பா? ஏமாற்றுகிறவனின் சாமர்த்தியமா? என்றெல்லாம் காதுக்கு பின்னாலிருக்கும் ‘கருத்து’ ஏரியாவை குத்தி குத்தி உணர்த்துகிறது ஒவ்வொரு காட்சியும். அட்றா சக்க… மனுஷன் ஏமாற்றதுக்குதான் எத்தனையெத்தனை வாய்ப்புகள். அதிலும் ஹீரோ பேசுகிற ஒவ்வொரு வசனமும் நச் நச். ‘நான் உங்களை ஏமாத்தல. ஏமாற்றதுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கேன்’ ‘நல்லவனா இருந்தா செத்த பிறகு சொர்க்கத்துக்கு போகலாம். கெட்டவனாயிருந்தா வாழும் போதே சொர்க்கத்தை பார்க்கலாம்’ என்கிற அளவுக்கு இந்த படத்தில் திருட்டுத்தனத்துக்கு லைசென்ஸ் தருகிறார் இயக்குனர். பட்…, நீதி என்னவோ ஒன்றுதான். ‘ரொம்ப காலத்துக்கு எவனையும் ஏமாத்த முடியாது’.
பாத்ரூம் பக்கெட்டில் தண்ணீர் பிடித்து அதை பாட்டிலில் அடைத்து, ‘இது அமெரிக்காவிலிருக்கிற ஏரியில் பிடித்து இம்போர்ட் செய்யப்பட்ட தண்ணீர். இதில் ஒரு சொட்டு கலந்து தினந்தோறும் குடித்தால் கேன்சர் அண்டாது. கை கால் நடுங்காது. தன்னம்பிக்கை வளரும் என்றெல்லாம் விற்கிறார் ஹீரோ. அதற்கப்புறம் எம்.எல்.எம் பிசினஸ், ஈமு கோழி பிசினஸ், என்று நாட்டில் பித்து பிடித்து திரியும் அத்தனை பணத்தாசைக்காரர்களையும் பந்தாடுகிறது நிஜம். அதிலும் பூட்டிக்கிடக்கிற ஒரு நகைக்கடையை வைத்து ஹீரோ நட்டி செய்யும் ஒரு மேஜிக், கற்பனைக்கும் எட்டாத கலகலப்பு. மக்கள் அப்படிதானே பறக்கிறார்கள் பணத்திற்கும் இலவசத்திற்கும்!
இப்படி திருட்டு, மொள்ளமாரி, முடிச்சவிக்கி வேலைகளின் தலைவனான நட்டி எப்படி நல்லவராகிறார்? அவரை அந்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் சம்பவம் எது? என்பதையெல்லாம் கனஜோராக விவரிக்கிறது கதை. இந்த படத்தின் ஒவ்வொரு வசனங்களும், காட்சியும் நிழல் அல்ல… நீதி போதனை.
குற்றவாளியான நட்டி, போலீசிடம் சிக்கிக் கொள்கிற வரைக்கும் இளிச்சவாய் ஜனங்களின் தவிச்ச முகத்தையும், அது பற்றி எவ்வித கவலைக்கும் இடம் கொடுக்காமல் நட்டி அண் கோஷ்டி இடம் விட்டு இடம் பெயர்வதையுமே ரசிக்க வேண்டியிருக்கிறது. அவர் மாட்டிய பின்பு கதை இன்னும் பரபர…! ‘பணம்- அச்சடிக்கப்பட்ட ஆயுதம்’ என்பன போன்ற பல பல சப் டைட்டில்களோடு எபிசோட்கள் விரிவதும் தமிழ் சினிமா திரைக்கதையில் புது அட்டம்ப்ட்! அது மட்டுமல்ல, ஒரு திருட்டுக்கு பின்னால் இருப்பது வெறும் திருட்டு மட்டுமல்ல, அதற்கான ஹோம் வொர்க் என்பதையும் அவ்வளவு அழகாக காட்டுகிறார் டைரக்டர் வினோத்!
இதற்கு முந்தைய படங்களை பார்த்தவர்கள் ‘நட்டியெல்லாம் ஏன் நடிக்க வரணும்?’ என்று யோசித்திருக்கலாம். இந்த படத்தில் அப்படியொரு பொருத்தம் அவரிடம். அதுவும் அவர் பேசும் மெஸ்மெரிச பேச்சும், அதற்கு அவரது கம்பீரமான குரலும் ஒரு ஈர்ப்பு என்றால், ஏமாற்றுகிற புண்ணியவான்களுக்கேயுரிய பாடி லாங்குவேஜ் அஷ்ட பொருத்தமாக நுழைந்து கொள்கிறது அவரது நடை உடை பாவனையில்! ‘எல்லாரையும் தோற்கடிச்சுட்டேண்டா’ என்கிற தொணியோடு அவர் கோர்ட்டிலிருந்து வெளியேறுகிற காட்சி ஒன்று போதும் உதாரணத்திற்கு! அவர் சாவுக்கு அவரே குழி வெட்டிக் கொள்ளப் போகிறார் என்று பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தால், வைக்கிறார்களப்பா ஒரு ட்விஸ்டு! நச்…
முழு படத்திற்கும் தேவையில்லைதான் இஷாரா. ஆனால் நடுநடுவே வந்தாலும் நடிப்பிலும் தோற்றத்திலும் ‘நிறைந்து’ காணப்படுகிறார். அவரது சொந்தக் குரல் ஒரு இனம் புரியாத ப்ளஸ்சும் கூட! ‘இது ரொம்ப சின்ன உலகம். அன்பை மற்றவங்களுக்கு கொடுப்பதும், மற்றவங்ககிட்டயிருந்து வாங்கறதும்தானே வாழ்க்கை’ என்கிற டயலாக்கை அவர் குரலில் கேட்க வேண்டும். அடேயப்பா… அதில் ஏதோ ஒரு இனம் புரியாத சோகமும் இழையோடுகிறது.
நம்ப முடியாவிட்டாலும், இளவரசுவை போல முட்டாள்களும் இருப்பதால்தானே திருடர்கள் பிழைப்பு ஓடுகிறது. அதுவும் பாம்புக்கு 200 பாஷை தெரியும் என்பதை நம்புவதும், யாராவது பேசுவதை கேட்டால் பாம்புக்கு உடல் இளைக்கும் என்பதால் மவுன விரதம் இருப்பதுமாக ஒரே களேபரம். ‘பாம்புன்னு சொல்லாதீங்க செட்டியார். வேணும்னா அதுக்கு இளைய தளபதி விஜய்னு பேரு வச்சுக்கலாமா?’ என்று ரவுசு கட்டி அடிக்கிறார் நட்டி.
சுத்த தமிழில் பேசுகிற வில்லன், இஷாராவை பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்க்க அல்லாடும் மற்றொரு ரவுடி என்று டிபரண்ட் கேரக்டர்களால் ரசிக்கவும் பதறவும் வைக்கிறார் டைரக்டர். அந்த கிரானைட் அதிபரின் கேரக்டருக்குள் பளிச்சென்று பொருந்திக் கொள்கிறார் கேஜிஎஸ் வெங்கடேஷ்.
பின்னணி இசையில் முழு சதம் அடித்திருக்கும் இசையமைப்பாளர் சீன் ரோல்டன், பாடல்களில் படு பயங்கரமாக சறுக்கியிருக்கிறார். ஒரு பாடல் கூட மனதில் நிற்கவில்லையே? ஏற்கனவே ஸ்லோவான பாடல்கள், இதில் படம் முடிகிற நேரத்தில் ஒரு பாடலை போட்டு பயங்கரமாக வெறுப்பேற்றுகிறார் டைரக்டர்.
நீதிமன்ற காட்சிகளில் நடுநடுவே வந்து போகும் நட்டி அண் கோவின் ஏமாற்றுக் காட்சிகள் எடிட்டர் ராஜாசேதுபதிக்கு ஒரு சபாஷ் போட வைக்கிறது. நட்டி ஒளிந்து கொள்ள தேர்ந்தெடுக்கும் அந்த கிராமத்தையும் அந்த அழகான குடிசையையும் மட்டுமல்ல, பல காட்சிகளில் காரண காரியத்தோடு வைக்கப்பட்டிருக்கும் டாப் ஆங்கிள் ஷாட்டும் ஒளிப்பதிவாளர் கே.ஜி.வெங்கடேஷின் திறமைக்கு சர்டிபிகேட் கொடுக்கிறது.
இப்போது தமிழ்நாட்டில் சிறந்த ஏமாற்று வேலையாக ஓடிக் கொண்டிருப்பது ‘ரைஸ் புல்லிங்’ மேட்டர்தான். இந்த படத்தில் காட்டப்படும் எல்லா ஏமாற்று வேலைகளும் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இப்போதும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. போலீஸ் வண்டியில் மைக் செட் கட்டி வீதி வீதியாக அட்வைசிக்க வேண்டிய ஒரு விஷயத்தை அசர வைக்கும் திரைக்கதையுடன் மிரள வைக்கும் சம்பவங்களுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர். அந்த வகையில் மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியிருக்கும் இந்த அறிமுக இயக்குனர் எச்.வினோத்துக்கு முழுமையான பாராட்டுகள். அவரது துல்லியமான வசனங்களுக்கும் ஒரு தனி பொக்கே!
அடுத்தவனிடம் ஏமாந்த ஒவ்வொரு தமிழனும் ஒரு முறை பார்த்தாலே கூட போதும்… இந்த ‘சதுரங்க வேட்டை’ தயாரிப்பாளருக்கு தங்க வேட்டைதான்!
-ஆர்.எஸ்.அந்தணன்
verum buildup thaan padathula onnume illai
Are you working in AMWAY ?