ரஜினிக்கு நோ நோ உதயநிதின்னா யெஸ் யெஸ்! என்னய்யா இது சத்யராஜ் பாலிசி?
‘புரட்சித் தமிழன்’ சத்யராஜுக்கு எப்போதெல்லாம் புரட்சி வெடிக்கும் என்பது தெரியாதா என்ன? அதனாலேயே புரட்சிக்கு வழி வகுக்க கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஹீரேவாக நடிப்பதை நிறுத்திக் கொண்டு, கேரக்டர்களில் ‘தூள் கிளப்பி’ வருகிறார். அப்படியாப்பட்ட சத்யராஜுக்கு அவ்வப்போது சோதனைகள் வரும். சொந்தப்படம் எடுக்க வேண்டும் என்று ஓயாமல் சிபிராஜ் தரும் சோதனை ஒன்று. இன்னொன்று… எப்போதெல்லாம் ஷங்கர் படம் எடுக்கிறாரோ, அப்போதெல்லாம் ‘அதில் வில்லனா நடிக்கிறீங்களா?’ என்ற கேள்வி. இவ்விரண்டையும் ஸ்டடியாக நின்று சமாளிப்பதற்குள் அவருக்கு நாக்கு தள்ளி வருவதை நாடே அறியும்.
எந்திரன் பார்ட் 2 எடுக்கிற நேரத்தில் கூட அவருக்கு அந்த ஆப்ஷனை வைத்தார் ஷங்கர். ‘ரஜினிக்கு வில்லனா நடிக்க முடியுமா?’ என்பதுதான் அது. இப்படி கேட்கப்படும் போதெல்லாம், “ஒரு படத்தில் எனக்கு வில்லனா ரஜினி நடிப்பாரான்னு கேட்டு பதில் சொல்லுங்களேன்” என்று ஒரேயடியாக கதவை சாத்தி விடுவதும் அவரது வழக்கம்.
அப்போதெல்லாம் தன் ஈகோ உதவியுடன் ஸ்டடியான முடிவெடுத்த சத்யராஜ், உதயநிதி ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறார் என்பது எவ்வளவு பெரிய செய்தி? யெஸ்… காமெடி கலந்த டெரர் வில்லனாக நடிக்கப் போகிறாராம். அதாவது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் வந்தாரே… அப்படி!
பொருத்தமான படத்தைதான் உதாரணம் சொல்லியிருக்கிறோம். ஏன் தெரியுமா? இப்படத்தை இயக்கவிருக்கும் தளபதி, பொன்ராமிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்தான். குருநாதரின் பிளேவரிலேயே இப்படத்தை உருவாக்கப் போகிறாராம்.
சத்யராஜின் லொள்ளு படத்தில் சற்று தூக்கலாக இருக்கும் என்றே தெரிகிறது.