‘ தமிழ்நாடு முழுக்க தம்பிங்க பெருகிட்டாங்க ’ சீமான் பதிலால் கோபமான இயக்குனர்!
சீமானுக்கு தமிழகம் முழுக்க ஏராளமான தம்பிகள். ஆனால் ஆரம்ப காலத்தில் அவரை பைக்கில் வைத்துக் கொண்டு கம்பெனி கம்பெனியாக சுற்றிய தம்பி நாகேந்திரன்தான். இவர் இயக்கி வரும் படம்தான் ‘நீயெல்லாம் நல்லா வருவடா!’ நாகேந்திரன் எப்படி? ஆள் முரடு… பேச்சும் முரடு…
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா அண்மையில் நடந்தது. அஞ்சான் பட வேலைகளை கூட போட்டது போட்டபடி ஓடி வந்தார் லிங்குசாமி. ஏன்? அதற்கு விடையை சொன்னார் அதே விழாவில் கலந்து கொண்ட கரு.பழனியப்பன். ‘லிங்குசாமி வரலேன்னா, அவன் என்ன பெரிய இவனா?’ன்னு கூட கேட்பாரு நாகேந்திரன். அதுக்கு பயந்துகிட்டுதான் அவர் வந்திருப்பார்னு நினைக்கிறேன்’ என்று கூற, சற்றே ஜர்க் ஆனது பிரஸ். அதற்கப்புறம் கரு.பழனியப்பனே நாகேந்திரனின் குண நலன்களை விவரிக்க, மீட்டருக்கும் அடங்காத சூடு பார்ட்டிதான் அவர் என்பது புரிந்தது.
‘கந்தசாமி படத்தில் சுசி கணேசனுக்கு அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தேன். படம் முடிஞ்சதும் தாணு அண்ணன், ‘நான் உனக்கு படம் தர்றேண்டா’ன்னாரு. ஆனா ஒண்ணும் நடக்கல. நானும் அதுக்காக வெயிட் பண்ணல. வந்துட்டேன். ஆனா எந்த தயாரிப்பாளரையும் தேடிப்போய் கதை சொல்லணும்னு நான் நினைச்சது இல்ல. ஏன்னா அவங்க காதை நோண்டிகிட்டே கதை கேட்பாங்க. கொட்டாவி விட்டுகிட்டே கதை கேட்பாங்க. எனக்கு அது சரிப்படாதுன்னு இருந்தேன். அப்பதான் ஒரு தயாரிப்பாளர் கதை கேட்க விரும்புறார்னு சொன்னாங்க. அவர் தனி பிளைட்ல மலேசியாவிலிருந்து வந்திருந்தார். போனேன். பிளைட்ல ஏறுனேன். பிளைட் பறந்துகிட்டு இருக்கும்போதே கதை சொன்னேன். அந்த பிளைட்ல நானும் அவரும் மட்டும்தான். புது அனுபவமா இருந்திச்சு.
பிளைட் கீழே இறங்கறதுக்குள்ள இந்த கதைய நாம படமா எடுக்குறோம்னு உறுதி கொடுத்தாரு. படத்துக்கு ஆகுற மொத்த பட்ஜெட்டையும் ஒரே பேமெண்ட்டா கொடுத்து எடுக்க சொன்னார் என்றார் நாகேந்திரன். கேட்கவே பிரமிப்பாக இருந்தது. விமல் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புன்னகைப்பூ கீதா நடிக்கிறார். ஆரம்பத்தில் இந்த ஜோடி பொருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவரே விமல்தானாம். போகட்டும்… அதற்கப்புறம் நாகேந்திரன் சொன்னதுதான் கவனிக்க வேண்டிய பஞ்சாயத்து.
இந்த நிகழ்ச்சிக்கு அண்ணன் சீமானை கூப்பிட்டேன். தம்பி… முன்னே நீ மட்டும்தான் எனக்கு தம்பி. இப்ப தமிழ்நாடு முழுக்க தம்பிங்க பெருகிட்டாங்க. நான் எல்லாத்துக்கும் போக முடியுமா?ன்னு கேட்டாரு. சரிண்ணேன்னு வந்துட்டேன் என்றார் வருத்தமாக!
இந்த கரடு முரடு கொட்டாங்குச்சிக்குள் வெள்ளே வௌர்னு தேங்காய் பத்தை! அந்த படத்தின் டீஸரைதான் சொல்கிறோம். ரொம்ப புதுசாக இருந்தது. நாகேந்திரன் ஜெயித்தால் நாடு முழுக்க இவருக்கும் தம்பிகள் பெருகுவார்கள்….!
படத்தில் வலது ஓரத்தில் இருப்பவர்தான் நாகேந்திரன்!