தம்பி வா காத்திருக்கேன்! சீனு ராமசாமி பெருந்தன்மை!
கோடம்பாக்கத்தில் நடக்கும் அநேக ஆடியோ வெளியீட்டு விழாக்கள் வெறும் அக்கப்போருக்காகவே நடக்கிறதோ என்கிற அச்சத்தை மட்டுமே ஏற்படுத்தும். காய்கறி பிரச்சனையிலிருந்து, காஷ்மீர் பிரச்சனை வரைக்கும் பேசித் தொலைப்பார்கள். நடுநடுவே நம்ம படத்தை பற்றி ரெண்டு வரி பேசிட மாட்டாங்களா…? என்று படக்குழுவினரை ஏங்க வைக்கும் இந்த வி.ஐ.பிகள் அதை மட்டும் கரெக்டாக மறப்பார்கள்.
அப்படியொரு ஆடியோ விழாவாக இருந்தாலும், அசத்தலாக ஒரு விஷயம் நடந்தது ‘கொஞ்சம் கொஞ்சம்’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில். அறிமுக இயக்குனர் உதயசங்கரன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புக்குட்டியும், தேனடை மதுமிதாவும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். பாடல்களும், ஒளிப்பதிவும் வந்திருந்த விருந்தினர்களை அசரடித்தது. சிறப்பு விருந்தினராக வந்திருந்த இயக்குனர்கள் சீனு ராமசாமியும், மீரா கதிரவனும் அதையும் தாண்டி அசர வைத்தார்கள்.
“படத்தின் ஒளிப்பதிவு பிரமாதமா இருக்கு. நான் இயக்கிய படத்தில் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தவர்தான் இந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் நிக்கி கண்ணன். அப்போ எனக்கு இவர் இவ்வளவு திறமைசாலின்னு தெரியாம போச்சு. தெரிஞ்சிருந்தா நானே இவருக்கு முதல் வாய்ப்பை கொடுத்திருப்பேன்” என்றார் மீரா கதிரவன்.
பின்னாலேயே பேச வந்த சீனு ராமசாமி, “என் படத்தில் நிக்கி கண்ணன் ஒளிப்பதிவாளரா பணியாற்றணும்னு விரும்புறேன். தம்பி… நீ எப்ப வேணும்னாலும் என் ஆபிசுக்கு வரலாம். உனக்காக காத்திருக்கேன்” என்றார் பலத்த கைதட்டல்களுக்கு மத்தியில்.
வெறும் சடங்காக முடிந்து போகும் இத்தகைய விழாக்களுக்கு மத்தியில், அர்த்தபூர்வமாக முடிந்தது ‘கொஞ்சம் கொஞ்சம்’ ஆடியோ விழா