நிருபர்கள் வெளியே நிற்கிறார்கள்! ஆடியோ விழாவில் சீனு ராமசாமி கவலை!
கடந்த சில தினங்களாகவே கொதிக்கும் கொப்பரையாக இருக்கிறது கோடம்பாக்கம். ஒட்டுமொத்த சென்னையையும் ‘வை-ஃபை’ என்று சொல்லக்கூடிய கம்பியில்லா இன்டர்நெட் வசதி செய்து தரும் நோக்கத்தோடு விஞ்ஞான உலகத்திற்கு மக்களை அழைத்து செல்ல முடிவெடுத்திருக்கிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. பெங்களூரில் தற்போது அப்படியொரு வசதி இருக்கிறது. எல்லாம் இணைய சேவைகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அக்கறையினால் அமைந்த லட்சியம்.
பிரதமர் நரேந்திர மோடியும் கூட, தனது உரைகளில் எல்லாம் அகன்ற அலைக்கற்றை சேவை கிராமபுறங்களையும் சென்றடைய வேண்டும் என்கிறார். ஆனால் ‘இன்டர்நெட்டா? அது ஏன் இப்போ?’ என்கிற படு பிற்போக்கான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்.
இணையதள பத்திரிகையாளர்களை முற்றிலும் புறக்கணிப்பது என்கிற அவர்களது முடிவால் ஆங்காங்கே சர்ச்சைகள். போராட்டங்கள். குழப்பங்கள். இந்த நேரத்தில் இன்று சென்னையில் நடந்த ‘பொங்கியெழு மனோகரா’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் சீனு ராமசாமி, அழுத்தம் திருத்தமாக ஒரு கருத்தை பதிய வைத்திருக்கிறார். ‘சினிமா என்பது பொதுத்துறையை சேர்ந்த விஷயம். இங்கு பத்திரிகையாளர்களை உள்ளே விடக் கூடாது என்று சொல்வது முறையல்ல. எல்லா பத்திரிகையாளர்களும் வெளியே நிற்கிறார்கள். இந்த நிலையை உடனே மாற்ற வேண்டும்’ என்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு வேண்டுகோள் விடுத்தார். நடிகர் சரத்குமார், ராதாரவி, பெப்ஸி சிவா போன்றவர்களும் இணையதள நிருபர்களுக்கு தங்கள் ஆதரவை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.
இதற்கிடையில் நேற்று தமிழக முதல்வரின் செயலாளர் ராம்மோகன்ராவ் அவர்களிடம் இந்த பிரச்சனை குறித்து சில மூத்த அரசியல் நிருபர்களும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.