சிரிக்காத விஷ்ணு சிரிக்க வைப்பாரு… உத்தரவாதம் தரும் முண்டாசு டைரக்டர்
உலகத்திலேயே பெரிய கஷ்டம் காமெடி படம் எடுப்பதுதான். கிரேஸி மோகன்களையே சமயத்தில் கிடுக்கிப்பிடி போட்டு உட்கார வைத்துவிடும் இத்தகைய படங்கள். ஆனால் இதற்கு முன்பும் சரி, பின்பும் சரி, முகத்தில் சிரிப்பே தென்படாத நடிகரான விஷ்ணுவை வைத்து ஒரு சிரிப்புப்படம் எடுப்பதென்பது எவ்வளவு பெரிய துணிச்சல்? முண்டாசுபட்டி இயக்குனர் ராம் அந்த வகையில் பயில்வான்தான்.
விஷ்ணுவை ஹீரோவா வச்சு எப்படி சார் ஒரு காமெடி படம் எடுக்க துணிஞ்சீங்க என்றால், அதற்காகவே காத்திருந்த மாதிரி பேச ஆரம்பித்தார் டைரக்டர் ராம். (க.த.ரா இல்லை இவர்) எண்பதுகளில் நடக்கிற கதை சார் இது. நான் காளியை வைச்சு எடுத்த குறும்படத்தைதான் இப்போ இரண்டு மணி நேர படமா எடுத்திருக்கேன். பொதுவா சின்ன படங்களை சற்று நீளமாக்கும் போது ஏற்படுகிற சிக்கல் இந்த கதைக்கும் இருந்தது. அதை சரி பண்ணதான் சுமார் ஒரு வருஷம் உட்கார்ந்து யோசிச்சு ஒரு ஸ்கிரிப்ட் பண்ணினேன். ச்சும்மா விறுவிறுன்னு போற மாதிரியான திரைக்கதையா வந்திருக்கு. அதற்கப்புறம்தான் படம் எடுக்கவே இறங்குனோம்.
ஆங்… என்ன கேட்டீங்க? விஷ்ணுவுக்கு காமெடியே வராதுன்னுதானே? உண்மைதான். அவருக்கு வராது. ஆனால் படத்தில் அவர் சிரிக்க மாட்டார். அல்லது சிரிப்பு மூட்டவும் முயல மாட்டார். கதை அது பாட்டுக்கு போவும். ஆடியன்ஸ் விழுந்து விழுந்து சிரிப்பாங்க. அப்படிதான் இந்த படத்தை வடிவமைச்சுருக்கோம் என்றார் ராம். ஒரு ஊரில் யார் போட்டோ எடுத்தாலும் இறந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. அந்த ஊரில் போட்டோ எடுக்கப் போய் மாட்டிக் கொள்கிறார்கள் காளியும், விஷ்ணுவும். மிச்ச மீதியை வெண் திரையில் காண்க என்று கை குலுக்கிய ராம், அதற்கப்புறம் சொன்னதையே ஒரு தனி மினி படமாக ஓட்டலாம்.
வேறொன்றுமில்லை, எண்பதுகளில் கதை நடக்கிறதல்லவா? அதற்காக ஒரு பழைய செட்டப் கடை தெருவுக்காக தமிழ்நாடு முழுசும் அலைஞ்சோம். அப்பதான் சத்திய மங்கலம் பக்கத்தில் அப்படியொரு நீளமான கடைத்தெருவை பார்த்தோம். எய்டீஸ் காலத்திலிருந்து மாறாத அதே பழமையோடு இருந்தது அத்தனை கடைகளும். நல்லதா போச்சு என்று போட்டோ ஸ்டுடியோவை கைப்பற்றி பேசி முடித்தோம். அப்பவும் ஒரு நெருடல். எதிரே ஒரு பெரிய பில்டிங் கட்டியிருந்தார். அது மிக சமீபத்தில் அதுவும் ஸ்டைலாக கட்டப்பட்ட வீடு. அப்புறமென்ன, அந்த வீட்டு ஓனரிடம் கெஞ்சி கூத்தாடி, உங்க வீட்டையும் எய்ட்டீஸ் ஸ்டைலுக்கு மாற்றிக் கொள்கிறோம் என்று பர்மிஷன் கேட்டோம்.
ஒரு மாதம் கழித்து நாங்கள் போவதற்குள் எங்க ஆர்ட் டைரக்டர் அந்த வீட்டையே தலை கீழா புரட்டி போட்டு எய்ட்டீஸ் காலத்துக்கு கொண்டு போயிருந்தார். அப்புறம் தொடர்ச்சியா படம் பிடிச்சோம் என்றார். இவ்வளவு சவால்களுக்கும் ஷட்டரை ஓப்பன் பண்ணிய மாதிரி ஒரு சந்தோஷம் வரும் பாருங்க. அதை தியேட்டருக்கு வந்து அனுபவிங்க என்றார்.
விஷ்ணுவுக்கு ஜோடியாக அட்டக்கத்தி நந்திதா ஹீரோயினாக நடிக்கிறாராம். அதென்னவோ தெரியல, பேருக்குதான் அட்டக்கத்தி. அடிக்கிற ஹிட்டையெல்லாம் கூட்டி பார்த்தா, கோடம்பாக்கத்தின் போர்வாளா இருப்பாரு போலிருக்கு. காத்திருக்கிறோம் நந்திதா…