‘பன்னி’ துணிக கருமம்.
உணவு அரசியலை வைத்து பிழைத்துக் கொண்டிருக்கும் நாட்டில், போகிற போக்கில் செருப்படி என்பது இதுதான் போலிருக்கிறது. மாட்டுக்கறிக்கா ஆசைப்பட்டீங்க? என்று பட்டியலின குடியிருப்பை சூறையாடும் ஒரு கிராமத்தில், அதே ஊர் ஆதிக்க சாதிக்காரன் ஒருவன் பன்றிக் கறிக்காக அலைவதுதான் படம்.
நேர்த்தியும், நிதானமுமாக கதை நகர நகர ஒரு கட்டத்தில், இது படம் என்பதையும் தாண்டி அந்த ஊருக்குள் இறங்கிவிடுகிறது மனசு. புல், பூண்டு, பொட்டல் வெளியெல்லாம் கூட நடித்திருக்கிறது. முக்கியமாக அந்த சிறுவனும் தாத்தாவும். பூச்சியப்பனாக மாணிக்கம். பேரனாக அஸ்வின். இன்னபிற நடிகரெல்லாம் கூட பிரபல யூ ட்யூப் சேனலான நக்கலைட்ஸ் லிருந்து வந்தவர்கள். சிறப்போ சிறப்பு.
‘நாம ஏன் தாத்தா ஊருக்கு வெளியே இவ்ளோ தூரம் தள்ளி இருக்கோம்?’ என்று கேட்கிற அந்த சிறுவனும், அவனை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்று தோளில் சுமக்கிற தாத்தாவும் கடைசியில் என்னாகிறார்கள் என்பதையெல்லாம் கனத்த இதயத்தோடு செரிக்க வைக்கிறார் இயக்குனர் தமிழ். கதை – அருமை எழுத்தாளர் பெருமாள் முருகன்.
வெள்ளையும் சொள்ளையுமாக கிளம்பும் பெரிய மனுஷனையெல்லாம் வீட்டில் பெண்டாட்டி எவ்விதம் நடத்துகிறாள் என்பதை கேட்கவும் காணவும் படு ஜாலிதான்.
பேரனை யார் வீட்டிலோ படுக்க வைத்துவிட்டு குடிகாரப் பயல்களுக்கு சேவகம் செய்து முடிந்த பின், நள்ளிரவில் பேரனை எழுப்பி தோளில் போட்டுக் கொண்டு வீட்டுக்கு போகும் தாத்தா, வெறும் கேரக்டர் அல்ல. பல நூறு கிராமங்களில் நடக்கும் அட்டூழியத்தின் அடிச்சுவடு.
இப்படி வரி வரியாகவும், நிமிஷத்துக்கு நிமிஷமாகவும் சிலாகிக்க இப்படத்தில் நிறைய உண்டு.
இதுபோன்ற எதார்த்த முத்துகளையும் பவழங்களையும் தியேட்டருக்கு கொண்டு வரும் தெம்போ, திராணியோ அற்றுப்போய் இருக்கிறது தமிழ்சினிமா.
எப்படியோ…. ஓடிடி யாவது அந்த புண்ணியத்தை செய்ததே. வாழ்த்துக்கள்.
ஆனால் ஒன்று- மனிதனாய் பிறந்த யாவரும் சமம் என்பது சேத்து மான்களுக்குப் புரிவதுதான் எப்போது?
-ஆர்.எஸ்.அந்தணன்