கவர்ச்சி ஒண்ணு! கருத்துதான் வேற… வேற!
செக்ஸ் என்ற ஒன்று இருக்கும் வரை செக்ஸ் ஒர்க்கர்ஸ் இருக்கதான் செய்வார்கள்! அந்த தொழிலை சட்டப்படி செய்யலாமா, சந்துக்குள்ள மறைஞ்சிருந்து செய்யலாமா? இது குறித்த விவாதத்தை அவ்வப்போது கையில் எடுத்துக் கொள்ளும் படங்கள் ஏராளமாக வந்து கொண்டேயிருக்கின்றன. ட்ரிப்பிள் எக்ஸ் வெப்சைட்டுகள் பெருத்துவிட்ட இந்த காலத்திலும், இப்படிப்பட்ட படங்களுக்கு தியேட்டர் வாசலில் தள்ளுமுள்ளு நடப்பதுதான் ஆச்சர்யம். அந்த விஷயத்தில் எந்த மொழிப் படமாக இருந்தாலும், ‘புரியலே’ என்று மண்டையை சொறிகிற வழக்கம் தமிழனுக்கு இல்லை. அதுபோகட்டும்… இன்று திரைக்கு வரும் ‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’ எந்த மாதிரியான படம்? அப்படத்தின் டைரக்டர் முத்துக்குமாரிடம் கேட்டால், “பாலியல் தொழில் சட்டபூர்வமாக அங்கீகரிக்கக் கூடாதுன்னு சொல்ற படம் சார் இது” என்கிறார்.
“இந்த படத்தின் கதையை ஏதோ சாதாரணமா போற போக்குல எழுதிடலை சார். நிறைய ஆராய்ச்சி(?) பண்ணியிருக்கோம். மும்பையில் சில மாதங்கள் தங்கியிருந்து அப்சர்வ் பண்ணியிருக்கேன். அங்கு காலையில் தொழிலை ஸ்டார்ட் பண்ணுற பெண், நள்ளிரவு வரைக்கும் எத்தனையோ கஸ்டமர்களை சந்திக்கிறா. சட்டபூர்வமா ஆக்கியதால் வந்த விளைவு இது. எங்க படத்துல அது தப்புன்னு சொல்றோம் ” என்றார். இன்னும் திரைக்கு வராமல் முக்கிக் கொண்டிருக்கும் ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ என்ற படத்தில், “இதுக்கு லைசென்ஸ் கொடுங்கய்யா…” என்கிறார் அந்த படத்தின் டைரக்டர் யுரேகா. எது எப்படியோ? இரண்டு படங்களிலும் கற்றுக் கொள்ளவும் பார்க்கவும் நிறைய ஐட்டங்கள் இருப்பதால், ரசிகனின் துட்டுக்கு நஷ்டம் இல்லை!
‘வெண்ணிலாவின் அரங்கேற்றம்’ படத்தில் ஷகிலாவும் இருக்கிறார் என்பதுதான் முக்கியமான விஷயம். தன் மகள் விபச்சாரியாகிவிடக் கூடாது என்று நினைத்தாலும் அவளை காப்பாற்ற முடியாத தாயாக நடித்திருக்கிறாராம் அவர். ஆங்… சொல்ல மறந்தாச்சு. படத்தில் ஒரு சாமியார்! கிட்டதட்ட ‘ஜன்னலை திற… இன்னல் வரட்டும்’ என்றாரே, அவரைப்போலவே தோற்றமுடைய ஒருவர்னு வச்சுக்கோங்களேன். அவரை ஒரு இளம் பெண்ணோடு நெருக்கமாக நடிக்க வைத்திருக்கிறாராம் முத்துக்குமார். சென்சார் அமைப்பு, “ம்ஹும் முடியாது. நீங்க அவரைதான் சொல்றீங்க” என்று கட் கொடுக்க, “ஏன்ங்க… அந்த படத்துல இருக்கிற ஆளு நான் இல்லேன்னு ஒரிஜனல் புட்டேஜுக்கு அந்த சாமியாரே விளக்கம் கொடுத்துட்டாரு. நாங்க யாரையோ காமிச்சுருக்கோம். நீங்க வந்து அவருதான் இதுன்னா எப்படிங்க? ஒரு காட்சியை கூட கட் பண்ண அனுமதிக்க மாட்டோம்” என்றாராம் டைரக்டர் முத்துக்குமார்.
இப்படி பாண்டிய மன்னன் சபையில் நடந்த சொற்போர், அறப்போர், மொழிப்போர் எல்லாம் ஒரு முடிவுக்கு வந்தது. எப்படி? மறு தணிக்கைக்கு போய் ஒரு கட் கூட இல்லாமல் சாமியாரின் சல்லாப காட்சியோடு திரைக்கு வந்துட்டாருல்ல முத்துக்குமாரு?