விஜய்யின் தாய்மாமா கதையில்தான் நடிக்கிறார் தனுஷ்! -அந்த இந்திப்பட கதை இதுதான்
பிரபல இந்திப்பட இயக்குனர் பால்கி இயக்கும் ‘ஷமிதாப்’ படத்தில் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்த படத்தின் ஆக பெருமையாக அமிதாப்பும் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்பதையெல்லாம் ஊர் உலகம் நன்கு அறிந்திருக்கும். இசைஞானி இளையராஜாவின் இசையில் மனதை கொள்ளை கொள்ள தயாராகிக் கொண்டிருக்கிற ஷமிதாப் கதை, இங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதுதான் வியப்பு. இங்கிருந்து என்றால்…? எய்ட்டீஸ் தமிழ்சினிமாவிலிருந்து! அதுவும் நம்மால் பலமுறை கிசுகிசுக்கப்பட்ட ஒரு முக்கியமான விஷயம்தான் படத்தின் அடி நாதம்!
தமிழ்சினிமாவில் நடிகர் மோகனின் காலம் ஒன்று இருந்தது. கமல், ரஜினி இருவரும் கொடி கட்டி பறந்த காலத்தில், திடீரென முளைத்த அரவிந்த் கெஜ்ரிவால் அவர். இவரும் கோவை தம்பியும் இணைந்து உருவாக்கிய எல்லா படங்களும் ஹிட் அடித்தன. அவ்வளவும் இசைஞானி இளையராஜாவின் இசையால் உச்சத்தை தொட்ட படங்கள் என்றால், அந்த பாடல்களை ஏதோ தானே தொண்டை மெனக்கெட்டு பாடுவது போல நடித்த மோகனுக்கும் அதில் பெரும் பங்கு உண்டு. அவ்வளவு பெரிய ஹீரோவாக மாறிய பிறகும் மோகனுக்கு டப்பிங் குரல்தான் அமைந்தது. அதுவும் அவரது முதல் படத்திலிருந்தே மோகனுக்கு தொண்டையாக இருந்து தொப்பரையாக நனைந்து கொடுத்தவர் பிரபல பின்னணி பாடகர் எஸ்.என்.சுரேந்தர்தான். இவர் நடிகர் விஜய்யின் சொந்த தாய் மாமா.
எஸ்.என்.சுரேந்தரின் பின்னணி குரலில் கலக்கி வந்த மோகன், திடீரென கலக்கத்துக்குள்ளானார். எனது குரலால்தான் உனக்கு பெருமை என்று சுரேந்தரும், எனக்கு டப்பிங் பேசுவதால்தான் உனக்கு பெருமை என்று மோகனும் முட்டிக் கொள்ள, இனி சுரேந்தர் வேண்டாம். நானே டப்பிங் பேசுகிறேன் என்று பேச ஆரம்பித்தார் மோகன். என்னவொரு கொடுமை? அதற்கப்புறம் வந்த அவரது எல்லா படங்களும் படுதோல்வி. அவரை குரலுக்காகவும் ரசித்த கூட்டம், கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. இன்னும் இந்த நிமிடம் வரைக்கும மேலெழ முடியவேயில்லை மோகனால்.
நிற்க… ஷமிதாப் கதையும் இதுதான். பிரபல ஹீரோவான தனுஷுக்கு பின்னணி குரல் கொடுக்கிறார் அமிதாப். வழக்கம் போல ஈகோ வர, இருவரும் மோகன் சுரேந்தர் ஆகிவிடுகிறார்கள். அதற்கப்புறம் தனுஷ் படங்கள் வரிசையாக தோல்வியை தழுவ, அமிதாப் எடுக்கும் முடிவு என்ன?
தமிழ்நாட்டை சேர்ந்த இயக்குனர், தமிழனின் பெருமைக்குரிய இளையராஜா, தமிழ்ப்பட ஹீரோ தனுஷ், இவர்களுடன் நம் தமிழ்நாட்டிலேயே கிசுகிசுக்கப்பட்ட கதை? வாவ்… தமிழனின் கொடி வடக்கிலும் பறக்கிறது எல்லா விதத்திலுமாக!