ரஜினியின் எந்திரன் 2 ஷங்கரால் கமலுக்கு மன உளைச்சல்?

தீயினால் சுட்டப்புண் உள்ளாறும், ஆறாதே… ஷங்கரால் சுட்ட வடு!

நிலைமை அப்படிதான் இருக்கிறது கடந்த ஒருவார காலமாக! ரஜினியின் எந்திரன் 2 வேலைகள் பரபரப்பாக துவங்கி, அதே பரபரப்போடு நடந்து வருகிறது. ரஜினியின் பிறந்தநாளன்று கபாலி படத்தின் டீசர் வெளியிடப்படும். அதே தேதியில் எந்திரன் 2 படப்பிடிப்பும் துவங்கப்பட இருக்கிறது. அதுவரைக்கும் கூட கமல்ஹாசனின் தொடர்பு எல்லையில் ஷங்கரின் தொடர் தொல்லை நீளும் போல தெரிகிறது. என்னவாம்?

இந்த படத்தில் ரஜினி ஹீரோ…. தெரியும்! ஆனால் வில்லன்? ஒட்டுமொத்த இந்தியாவையும், ஓர சார கன்ட்ரிகளையும் சுற்றி சுற்றி வந்தாலும், பொருத்தமான வில்லனை ஆழ்வார்பேட்டையில் இருப்பதாக நினைக்கிறது ஷங்கரின் மனசு. படத்தை தயாரிக்கும் லைக்காவும் சரி, படத்தின் இயக்குனர் ஷங்கரும் சரி, ஒரே பிடிவாதமாக கமல்ஹாசனை நடிக்க வைக்கும் தீர்மானத்தோடு இருக்கிறார்கள். ஆனால் ‘கெட் அவுட்’ என்று மட்டும்தான் சொல்லவில்லையாம் கமல். மற்றபடி எல்லா வார்த்தை பிரயோகங்களையும் உபயோகித்துவிட்டாராம்.

பணம் ஒரு விஷயமில்லை என்றான பின்பு, பிரச்சனை எங்கு வந்து முட்டுகிறது தெரியுமா? இந்த அப்ரோச் ஆரம்ப நிலையில் இருந்தபோதே கமல் மனசை புழுங்கடித்துவிட்டாராம் ஷங்கர். கதையை முதலில் சொல்லி, அதற்கப்புறம் மெல்ல, “அந்த இன்னொரு ரோலில் நீங்க நடிச்சா நல்லாயிருக்கும்” என்று கூறியிருந்தால் கமலே இதற்கு செவி சாய்த்திருக்கக் கூடும். ஆனால் எடுத்த எடுப்பிலேயே “இந்த படத்தில் நீங்க வில்லனா நடிக்கணும்” என்று கேட்டுவிட்டாராம். அதற்கப்புறம் கதையை கேட்கக் கூட கமல் தயாராக இல்லை என்கிறது கோடம்பாக்கத்தின் நம்பத் தகுந்த வட்டாரம்.

படப்பிடிப்புக்கு இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில், “கமல்ஹாசனை எப்படியாவது கன்வின்ஸ் பண்ணுங்க” என்று தொடர்ந்து வற்புறுத்துகிறதாம் லைக்கா. “எந்திரன் 2 சம்பந்தமா பேசணும்னு நினைச்சா ஸாரி. வேற எதுவா இருந்தாலும் எப்ப வேணா வாங்க” என்கிறாராம் கமல்!

சாணக்கியனின் அருவாளை சாணை பிடித்தது போல இன்னும் ஷார்ப்பாக இருக்கிறார் கமல். அவரை எதிர்கொள்ள முடியுமா ஷங்கரால்?

Read previous post:
இலங்கைக்கு படம் தர மாட்டேன்! சொன்ன சொல் மறந்த சுந்தரபாண்டியன்?

தமிழர்களுக்கு மறதி ஜாஸ்தி. இது அரசியல்வாதிகளுக்கும் தெரியும். அதைவிட சினிமாக்காரர்களுக்கு இன்னும் நன்றாக தெரியும்! இதற்கு சமீபத்திய சிறப்பான உதாரணம் அண்ணன் சுந்தரபாண்டியன், சினிமா போராளி, சசிகுமார்தான்....

Close