ஷங்கர் கேட்ட 140 கோடி அரண்டு போன தயாரிப்பு நிறுவனங்கள்
உலகத்து ஏ.டி.எம் களையெல்லாம் ஓரிடத்தில் குவித்தாலும், அதையும் தாண்டி ஒரு பட்ஜெட் போடுவார் ஷங்கர். பிரமாண்ட இயக்குனர் என்று பலரது பெருமூச்சுக்கு ஆளாகியிருந்தாலும், அவர்களின் இதயத்தையும் சேர்த்து நசுக்குகிற வித்தை ஷங்கரின் விரல்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அவர் போடுகிற இந்த மனக்கணக்கு தயாரிப்பாளருக்கு பல மடங்காக திரும்பி லாபமாக கொட்டுவதும் நடப்பதால், ஷங்கர் கேட்கிற தொகைக்கு மூச் காட்ட மாட்டார்கள்.
அவருதான் செலவு வைக்கிற டைரக்டர்னு தெரியுதுல்ல? அப்புறம் என்னாத்துக்கு அவரை கமிட் பண்ணுவானேன்? கண்ணீர் வடிப்பானேன் என்று சிலர் முகத்துக்கு நேரே கேட்பார்கள் என்பதாலேயே ஷங்கர் தருகிற வலிகளை கூட, கமுக்கமாக தாங்கிக் கொள்கிற வழக்கம் தயாரிப்பாளர்களுக்கு இருக்கிறது. சரி.,. போகட்டும். அதென்ன 140 கோடி?
வேறொன்றுமில்லை, எந்திரன் பார்ட் 2 எடுக்கப் போகிறார் அல்லவா? இதை தயாரிக்க இரண்டு முன்னணி நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றனவாம். அவர்களிடம் ஷங்கர் கொடுத்த பட்ஜெட்தான் 140. எந்திரன் படமே 100 கோடியில் எடுக்கப்பட்டது. இன்னமும் ஆங்காங்கே சில விநியோகஸ்தர்கள் அதை மீட்டெடுக்க முடியாமல் தடுமாறி, நஷ்டத் தொகை கமுக்கமாக கை மாறிய சம்பவங்கள் எல்லாம் நடந்தது. இப்போது 140 கோடி என்றால், எப்படியும் அது இன்னும் நீண்ண்ண்…..டு 160 ல் போய் நிற்கும்.
அதற்கப்புறம் உலகம் முழுக்க வியாபாரம் செய்தாலும், அந்த பணத்தை மீட்டெடுக்க முடியுமா என்று சந்தேகப்பட்டதாம் மேற்படி நிறுவனங்கள் இரண்டும். வேணும்னா 110 க்கு ஓ.கே என்கிறார்களாம். பேச்சு வார்த்தை போய் கொண்டிருக்கிறது. இது ரஜினி- ஷங்கர் கூட்டணி என்பதால்தான் இத்தனை காஸ்ட்லி!