சாந்தனு போனார் அஜீத் வீட்டுக்கு! பட்…?
வந்தவங்களை விட்டுட்டு வராதவங்க மேலதான் கண் போவும் என்பது சைக்காலஜி. அந்த சைக்காலஜியை பிடித்துக் கொண்டுதான் தையத்தக்கா என்று குதித்துக் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்த விஷயத்தில் பொதுவான ரசிகர்களுக்கும் அஜீத் ரசிகர்களுக்கும் பெரிய அளவுக்கு முட்டல் மோதல்! சமூக வலை தளங்களிலும் கூட இதுதான் விறுவிறு டாபிக்!
வேறென்ன? அஜீத் எப்போதும் போல இந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை. பாக்ராஜ் மகன் சாந்தனுவின் திருமணத்திற்கு அவர் வராதது பெரிய அளவில் மனக்குறையை ஏற்படுத்தியிருக்கிறது சினிமா ரசிகர்களுக்கு. என்னதான் நடந்தது? பாக்யராஜ் ஏரியாவில் விசாரித்தால், பெரும் அமைதி. இருந்தாலும் மெல்ல மெல்ல சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். “இளம் ஹீரோக்களுக்கு நானே என் கையால் திருமண அழைப்பிதழை கொடுத்துவிடுகிறேன். உங்க காலத்து பெரியவங்களுக்கு நீங்களே கொடுத்துருங்க”. இதுதான் சாந்தனுவின் விருப்பமாம். அதற்கேற்ப எல்லா இளம் ஹீரோக்களையும் சந்தித்த சாந்தனு, அஜீத் வீட்டிற்கும் சென்று அவரை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வைத்திருக்கிறார். அவரிடம் அன்போடு பேசிய அஜீத், அங்கேயே சாந்தனுவை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தாராம். அந்த சந்தர்ப்பத்தில் கூட தனது நெடு நாள் ஆசையை எவ்வித தயக்கமும் இன்றி அஜீத்திடம் கூறியிருக்கிறார் சாந்தனு. என்னவென்று?
“என்னோட கல்யாணத்துக்கு அம்மா கையால் தாலி எடுத்துக் கொடுக்கணும்னுதான் அப்பா ஆசைப்பட்டார். ஆனால் எனக்கு விஜய் சார்தான் தாலி எடுத்துக் கொடுக்கணும்னு நான் அப்பவுலேர்ந்து அவரை வற்புறுத்திகிட்டு இருக்கேன். அப்பா கடைசியில் ஒத்துக்குட்டாரு’ என்பதுதான் அந்த விஷயம். அதற்கப்புறமும் தனக்கேயுரிய வெள்ளை சிரிப்போடு வாழ்த்தி அனுப்பியிருக்கிறார் அஜீத்.
அதுமட்டுமல்ல, இதற்கு முன்னால் கூட கே.பாக்யராஜ்க்கும் அஜீத்திற்கும் எவ்வித மனஸ்தாபமும் இருந்தததில்லையாம். ஏ.எம்.ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா திருமணத்திற்கு வந்தபோது, கே.பாக்யராஜும் அஜீத்தும் கால் மணி நேரத்திற்கும் மேலாக அன்போடு பேசிக் கொண்டிருந்தார்களாம்.
இருந்த இடத்திலேயே வாழ்த்தி அனுப்பியதால் கூட நேரில் வராமலிருந்திருக்கலாம். அதையேன் இவ்வளவு தூரம் வளர்ப்பானேன்?