ஒரு புளியம் பழத்துக்காக ஷுட்டிங்கையே நிறுத்திட்டாங்களா? அட… அடடே!
ஒரு படத்தில் வருகிற ஒரு பிரேம் சொல்லிவிடும்… அது எந்த மாதிரி படம் என்று! இம்சைக்கும் இதுவே ஃபார்முலா! இனிப்புக்கும் இதுவே ஃபார்முலா! ‘தொரட்டி’ என்ற படத்தின் ஒவ்வொரு பிரேமும் இனிப்போ இனிப்பு!
பி.மாரிமுத்து இயக்கத்தில், புதுமுகம் ஷமன் மித்ரு நடித்திருக்கும் படம்தான் ‘தொரட்டி’! விரட்டி விரட்டி வெட்டுவாய்ங்களோ? என்று டவுட் மிகும் கண்களோடு உள்ளே போனால், ஆஹா… அதுவல்லவோ அற்புதம்! 80 களில் நடக்கிற கதை. நாகரீகத்தின் அழுக்கு படாத கிராமம். அங்கு இரு மனசுகளின் சங்கமம் என்று தேங்காய் பூவை தூவிட்டது போல மெல்லிய நாட். நாலைந்து பாடல்களும் ஒரு ட்ரெய்லரும் திரையிட்டார்கள். ஆங்காங்கே பயணித்து அவார்டுகளை குவித்து வந்திருக்கிறது தொரட்டி.
அதென்னய்யா தொரட்டி? நூற்றுக்கணக்கான ஆடுகளை வயல்வெளிகளில் கட்டி மேய்ப்பதற்கு குழுவாக கிளம்பிப் போய்விடுவார்கள். அந்த குழுவில் சென்றுவிடுகிற இளைஞர்கள் எந்த ஊரில் இருக்கிறார்கள் என்றே தெரியாது. அதில் ஒரு இளைஞனுக்கு திருமணம் என்றால் கூட, சொன்ன நேரத்திற்கு ஊருக்கு வர மாட்டான் அவன். அந்த நேரத்தில் அவன் பயன்படுத்திய தொரட்டிக்கு மாலை போட்டு அதையே மணமகன் இடத்தில் உட்கார வைத்து, மணப்பெண்ணின் அம்மாவே தாலி கட்டுவாள். ஊர் திரும்பும் அவன், வந்த பின்பு மனைவியோடு வாழ துவங்கிவிடுவான். ஒரு நீண்ட கம்பின் முனையில் ஒரு அருவாளை கட்டி வைத்தால் அதுதான் தொரட்டி.
படத்தில் ஒரே ஒரு காட்சி. புளியம் பழத்தின் ஓட்டை உடைத்து அதில் ஆட்டுப்பாலை பீய்ச்சி, கதாநாயகி சத்யகலாவுக்கு தருகிறான் ஹீரோ. ஆனால் படப்பிடிப்பு நடந்த நேரம், புளியம்பழ சீசன் இல்லாத நேரம். டைரக்டர் விட்டால்தானே? எங்கிருந்தாவது ஓட்டோடு சேர்ந்த புளியம்பழம் வேண்டும் என்று கூறிவிட்டாராம். நாலாபுறமும் அலைந்து திரிந்து எங்கோ ஒரு கிராமத்திலிருந்து கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்கப்புறம் அந்த காட்சி எடுக்கப்பட்டிருக்கிறது. அதே போல, கதாநாயகி ஒரு நாவல் மரத்தில் நாவற்பழம் உலுக்குகிற காட்சி. சீசன் இல்லாததால் சில மாதங்கள் காத்திருந்து எடுத்தார்களாம் அதை.
இப்படி உயிரும் உணர்வுமாக உருவாகியிருக்கும் தொரட்டி, இப்பவே பல நாடுகளுக்கு சென்று விருதுகளை குவிக்க ஆரம்பித்துவிட்டது. படத்தின் வெளியீட்டு உரிமையை அட்டக்கத்தி, சூது கவ்வும் படங்களின் தயாரிப்பாளர் சி.வி.குமார் வாங்கியிருக்கிறார்.
பால்காரனுக்குதான் தெரியும் பசு மாட்டின் பேச்சு! இப்பவே தொரட்டியின் உயரம் புரிஞ்சுருச்சு!