முப்பது லட்ச ஹீரோ! ஆளே வராமல் ஒரு ஷோ கேன்சேல்!
சுவாரஸ்யமான சுக்கு மிளகு பேச்சுக்கு ஒரு காலத்தில் சிவகார்த்திகேயன் இருந்தாரென்றால், அதே இடத்தில் இப்போது மா.கா.பா.ஆனந்த்! இவரைப் போலவே அவர் என்றும், அவரைப்போலவே இவர் என்றும் மாற்றி மாற்றி இவர்களை உலகம் புகழ்ந்தாலும், உச்சத்திலிருக்கிற சிவாவை டச் பண்ண உருண்டு புரண்டாலும் முடியாது போலிருக்கிறது மா.கா.பாவால். இத்தனைக்கும் தம்பி தம்பி… என்று அன்பு காட்டுகிறாராம் சிவகார்த்திகேயன். நீயும் என்னை மாதிரியே வளரணும், வாழணும் என்று அவர் வாழ்த்தினாலும், சொந்த முயற்சியால் சுண்ணாம்பு ஆகிவிடுவார் போலிருக்கிறது மா.கா.பா. ஏன்ப்பா?
கைவசம் நான்கு படங்களை முடித்து வைத்திருக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்க அழைப்புகள் வருகின்றன. ஆனால், நல்ல படக் கம்பெனிகள் அழைத்தால் கூட, நான் பிஸி பிஸி பிஸி என்று பில்டப் கொடுக்கிறாராம். முட்டி மோதி அவரை ரீச் பண்ணி கதையையும் சொல்லி முடித்தால், அதற்கப்புறம்தான் செருகுகிறார் ஆணி. “நம்ம சம்பளம் முப்பது லட்சம். அதுக்கு தயார்ன்னா அடுத்த கட்டத்துக்கு போகலாம்” என்கிறாராம். அடுத்த கட்டம் ஓட்டம்தான் என்ற முடிவுக்கு வருகிறார்கள் தயாரிப்பாளர்கள். ஏன்? இன்னமும் மா.கா.பா. நடித்து ஓடியதாக ஒரு படமும் இல்லையே?
சமீபத்தில் திரைக்கு வந்த ‘நவரச திலகம்’ படத்திற்கு வந்த சோதனையை கேட்டால், மா.கா.பா. வை தட்டி எழுப்பி அவர் உறக்கத்தை கலைக்காமல் உட்கார மாட்டீர்கள். கடந்த வாரம் படம் திரைக்கு வந்ததல்லவா? முதல் நாள் ஷோவை பார்க்க சாலிகிராமம் பகுதியில் அமைந்திருக்கும் தேவி கருமாரி தியேட்டருக்கு வந்தவர்களின் எண்ணிக்கை வெறும் ரெண்டே ரெண்டு. அதனால் ஷோ கேன்சல் என்று அறிவித்துவிட்டது தியேட்டர் நிர்வாகம்.
ஆமா… சம்பளம் எவ்ளோ கேட்டாரு? முப்பது முப்பது!
கொக்கு கழுத்துல நண்டு தொங்குன கதையாதான் போவுது சினிமாவுக்கும் புது ஹீரோக்களுக்குமான புரிதல்!