ஆளாளுக்கு போன் அதிர்ச்சியில் ஸ்ருதி?
அப்பா வெண்பா எழுதினால் பிள்ளை ஹைக்கூ எழுதுவதுதானே வேருக்கும் மரியாதை, பூவுக்கும் அழகு! அந்த இலக்கணத்தை அப்படியே பின் பற்றுகிறார் ஸ்ருதி. கமல் ஒரு தேர்ந்த கவிஞர் என்பதை பல நேரங்களில் நிரூபித்திருக்கிறார். பாவம்… பிழைத்துப் போகட்டும் என்று பாடல் எழுதும் ஏரியாவுக்குள் தலையிடாமலிருந்தது கமல் மற்ற பாடலாசிரியர்கள் மீது வைத்திருக்கும் தனிப்பட்ட அன்பு. (அவ்வப்போது சில பாடல்களை மட்டும் எழுதியிருந்தாலும்…)
தமிழ்சினிமாவில் ஆல் ரவுண்டராக திகழும் கமலுக்கு சற்றும் சளைத்தவரல்ல ஸ்ருதி. இசை, பாடல், நடிப்பு என்று மும்முனை வாள் போல அவரால் ஜெயிக்க முடியும் என்றாலும், இப்போதைக்கு நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது ஓய்வு நேரத்தில் கவிதைகள் நிறைய எழுதி வைத்திருக்கிறாராம். அவற்றையெல்லாம் ஒரு புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது ஸ்ருதியின் ஆசை.
தன் ஆசையை அப்பாவிடம் சொல்ல, சமஸ்தானத்தை கூட்டிவிட்டார் கமல். அங்கு வந்த பெரும்பாற் புலவர்கள் எல்லாம், ஆஹா… ஓஹோ… அற்புதம் என்று அந்த கவிதையை கொண்டாடியிருக்கிறார்கள். வெளியே சென்ற கையோடு முன்னணி பதிப்பகங்களுக்கு போன் போட்டு விஷயத்தையும் கக்கி விட்டார்கள். இப்போது ஸ்ருதியை துளைத்தெடுக்கிறதாம் போன் கால்கள். எல்லாமே வெவ்வேறு பதிப்பகத்தாரிடம் இருந்துதான்.
உங்க கவிதையை நாங்க புத்தமாக போடுறோம் என்று க்யூ கட்டுகிறார்களாம். விட்டால் ஸ்ருதியை ஔவையாராக்கி ஆயுத எழுத்துக்கும் ஆயுத பூஜை போட்டுவிடுவார்கள் போலிருக்கிறது. அழகே… தமிழே… அழகிய மொழியே… ஸ்ருதியக்கா!