சித்தார்த் யோசனை! ஷாக்கானது தொலைக்காட்சி!
சித்தார்த்தை குறை சொல்வது சீனி மிட்டாயை குறை சொல்வது மாதிரி. அவரது இமேஜை வெள்ளத்திற்கு முன்… வெள்ளத்திற்கு பின்… என்று இரண்டாக பிரித்துக் கொள்ள வேண்டியதுதான். அதற்கு முன்பு வரை ‘யாரோ ஒரு இளவட்டம். நடிக்க வந்த நடுமட்டம்’ என்கிற ரேஞ்சிலேயே அவரை பார்த்து வந்த தமிழ்நாடு, இந்த வெள்ளத்தில் அவர் இறங்கி வேலை பார்த்ததை கண்டு இன்ப அதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டது. “மனிதாபிமானம்னா என்னன்னு அந்த தம்பிகிட்ட தெரிஞ்சுக்கணும்ப்பா” என்று கிராமங்கள் கொண்டாடின. நகரங்கள் நற்சான்றிதழ் கொடுத்தன.
அவருக்கு நாம் செய்யப் போகும் பரிகாரம், அவர் நடித்து விரைவில் வெளிவரப்போகும் ஜில் ஜங் ஜக் படத்தை வெற்றிபெற வைப்பதுதான். ஆனால் அதெல்லாம் நடக்குமா? நன்றி நினைப்பார்களா நம் மக்கள் என்பதெல்லாம் இப்போதைக்கு யூகிக்க முடியாத பேச்சு. இருந்தாலும், சித்தார்த்தின் சமீபத்திய ஒரு செயல், அந்த டி.வி நிர்வாகத்தை தடுமாற வைத்தது மட்டும் நிஜம் என்கிறார்கள் ஏரியாவில்.
வெள்ளத்தால் உயிர்களை பறி கொடுத்தவர்களின் உறவினர்களையும் நண்பர்களையும் அழைத்து அவர்களின் கண்ணீர் கதைகளை கேட்டு வருகிறது அந்த டி.வி. இதில் ஏராளமான சோகத்தை பிழியும் கதைகள். அந்த நேரத்திலும் உயிர் தப்பியவர்கள் தங்களை காப்பாற்றியவர்களை நெஞ்சம் நெகிழ நினைத்துப் பார்க்கிறார்கள் இதில் பாதித்தவர்களையும், காப்பாற்றியவர்களையும் சந்திக்க வைக்கிற காட்சிகள் கண்களை குளமாக்குகின்றன.
அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகதான் சித்தார்த்துக்கு அழைப்பு விடுத்ததாம் டி.வி நிர்வாகம். அவர்களிடம், “நான் வர்றேன். ஆனால் அதை என்னோட ஜில் ஜங் ஜக் புரோமோ நிகழ்ச்சியாகவும் செஞ்சுக் கொடுத்திங்கன்னா நல்லாயிருக்கும்” என்றாராம் அவர். இந்த பதிலைக்கேட்டுதான் பேரதிர்ச்சிக்குள்ளாகிவிட்டதாம் டி.வி.
தப்பை தப்புன்னு நினைச்சாதான் தப்பு. சரின்னு நினைச்சு பாருங்க… எல்லாம் சரியா வரும்!