சிகரம் தொடு விமர்சனம்

மோனல் கஜ்ஜார் என்ற மூடு பனியை, மார்கழி மாதத்திற்கு முன்பே தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு அறிமுகம் செய்த UTV யை வணங்கி இந்த விமர்சனத்தை துவங்குவதுதான் சாலப்பொருத்தம்! படத்தில் முதல் சில பல ரீல்களிலேயே உயரத்தில் அமைந்திருக்கும் கேதார்நாத்துக்கு ஆன்மீக சுற்றுலா கிளம்புகிறது படக்குழு. அங்கேயே ‘சிகரம் தொட்டுட்டோம்ல…?’ என்கிற திருப்தி வந்திருக்குமோ என்னவோ. அதற்கப்புறம் நடக்கும் அத்தனையும் லேசான யூகிப்பும், மிதமான பிரமிப்பும் கலந்த ஆக்ஷன்!

போலீஸ் அதிகாரி சத்யராஜுக்கு தன்னை போலவே தன் மகனையும் டிபார்ட்மென்ட்டில் கம்பீரமான அதிகாரியாக்கிவிட வேண்டும் என்கிற ஆசை. ‘என் ஆசை இதுதாண்டா மவனே’ என்று அவ்வப்போது டச் பண்ணிக் கொண்டேயிருக்கிறார். அப்பாவுக்கு ‘ஆமாம்…’ போட்டாலும், மனசுக்குள் ஒரு வங்கி அதிகாரியாகவே தன்னை நினைத்துக் கொண்டு பொங்கி வழிகிறார் விக்ரம் பிரபு. ஒவ்வொரு நாளும் தன் ரூட்டை அந்த பக்கமாக நகர்த்துகிற வேளையில்தான், டிபார்ட்மென்ட் ட்ரெய்னிங்குக்கு ஆர்டர் வருகிறது. நடுவில் மோனல் கஜ்ஜாருடன் காதல் வேறு. கொடுமை என்னவென்றால் போலீஸ் என்றாலே அலர்ஜியாகிறார் மோனல். ‘சத்தியமா நான் பேங்க்லதான் வேலை பார்ப்பேன். போலீஸ் வேலைக்கு போகவே மாட்டேன்’ என்றெல்லாம் சத்தியம் பண்ணிக் கொடுக்கும் விக்ரம்பிரபு, மோனலிடம் பொய் சொல்லிவிட்டு ட்ரெய்னிங் போனால், அங்கேயும் வந்து நிற்கிறார் அவர். எப்படி? ஹ்ம்ம்ம்… அந்த ட்விஸ்ட்ட படத்துல பாருங்க!

இதற்கிடையில் ஊருக்கு ஒதுக்குபுறமான வங்கி ஏடிஎம் களில் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது மூவர் குழு. அந்த பலே கில்லாடிகளால் ஒரு முறை சத்யராஜே தாக்கப்பட, ஏரியா இன்ஸ்பெக்டராக இருக்கும் விக்ரம் அவர்களை இழுத்து வந்து லாக்கப்பில் தள்ளுகிறார். (இவரெங்கே தள்ளினார்? அப்பா சத்யராஜேதான் அந்த வேலையை பார்க்கிறார்.) நாளைக்கு நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்த வேண்டும். கண்ணில் விளக்கெண்ணை ஊற்றிக் கொண்டு கைதிகளை கண்காணிக்க வேண்டிய விக்ரம் பிரபு, மோனலுடன் காதல் பண்ணுவதற்காக கிளம்பிப் போய்விட, ஸ்டேஷனிலிருந்து தப்பிகிறார்கள் குற்றவாளிகள். போகிற போக்கில் தடுக்க முயலும் சத்யராஜையும் சகட்டுமேனிக்கு தாக்கிவிட்டு ஓடுகிறார்கள் அவர்கள். அப்பா ஐசியூவில். கைதிகளை பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் விக்ரம் பிரபு. ‘அம்புட்டு பேரையும் புடிச்சு பொளங்க விக்ரம்…’ என்று ரசிகர்களை ஆர்வமாக்கி சீட் நுனிக்கு தள்ளுகிறார் இயக்குனர் கவுரவ். ஆனால் முடிவு…? சற்றே வாய் வலிக்க வைக்கும் சவ்வு மிட்டாய்! பொறிபறக்க வேண்டிய காட்சியை அவ்வளவு இழுவையாக்கி முடிக்கணுமா கவுரவ்?

பி2 ஏ2 ஸ்டேஷன்களில் கூட விக்ரம் சூர்யா போட்டோக்களை மாட்டி வைக்கிற அளவுக்கு வீரம் காட்டிய போலீஸ் கதைகள் உலவிய கோடம்பாக்கம் இது. விக்ரம் பிரபுவும் அந்த ஆசையில்தான் காக்கி சட்டை மாட்டியிருக்கிறார். எப்படியிருக்கிறது..? ரசிகர்கள்தான் தீர்மானிக்க வேண்டும் அதை. மற்றபடி காதல் காட்சிகளில் அதே ரொமான்ஸ் வழியும் குழந்தையாக கவர்கிறார். ஹரித்துவாரில் அந்த சாமியாரை மடக்கி, தனக்கு தோதாக குறி சொல்ல வைக்கும் அந்த அழகு, கிரேட்! காதலிக்கு முன் அப்பா தன்னை துக்கி சுற்றுகிற நேரத்தில், வெட்கமும் வேதனையுமாக விக்ரம் பிரபு மோனலை பார்ப்பதும், அவர் வெறுப்போடு தலையை திருப்பிக் கொள்வதும் நிமிடத்தில் கடந்து விடுகிற பளிச் சீன்!

ஒரு காலிலேயே சண்டை போட்டு, ஒற்றை ஊன்று கோலில் ஒரேயடியாக தாவி சிகரம் தொட்டிருப்பவர் சத்யராஜ்தான். ஐசியூ வில் படுத்திருக்கும் அவரது தேகமும் கூட சைலன்ட்டாக நடித்திருக்கிறது. மகன் இப்படி ஸ்டேஷனை அநாதையா விட்டுட்டு போயிட்டானே என்கிற முடிச்சை புருவத்தில் ஒரு வினாடி கொண்டு வந்து அந்த நேரத்திலும் கைதிகளை தப்ப விடாமல் போராடுவது சிலிர்ப்புதான். சந்தேமென்ன?

ஹ்ம்ம்ம்… அப்புறம் மோனல் கஜ்ஜார்! புடவை, சுரிதார், தாவணி என்று எதில் வந்தாலும் கிறங்கடிக்கிறது தேவதை! முன்னணி நடிகைகள் உஷாராக இல்லாவிட்டால் பட்டா பறிபோகக் கூடும்.

காமெடிக்கு சதீஷ், ஈரோடு மகேஷ் என்ற இருவர் இருக்கிறார்கள். ஒழுங்கா ஹோம் வொர்க் பண்ணிட்டு நடிக்க வராத எவரையும் பின்னங்கால் பிடறியில் இடிக்கிற அளவுக்கு விரட்டுவார்கள் ரசிகர்கள் என்பதை உணர வேண்டிய தருணத்தில் இருக்கிறார்கள் இருவரும். அதுவும் வளரவே துவங்கல, அதற்குள் இந்த நிலைமை! நல்லவேளையாக தனக்கு தரப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து கலகலப்பூட்டுகிறார்கள் லொல்ளு சபா மனோகரும், சிங்கம்புலியும்.

ஒரு இயக்குனராக ஏ.டி.எம் திருட்டை துல்லியமாக ஆராய்ந்து பிரசன்ட் செய்திருக்கிறார் கவுரவ். ‘பின்’ நம்பர்கள் எப்படி திருடப்படுகின்றன? போலி கிரடிட் கார்டுகள் தயாரிப்பது எப்படி என்பது பற்றியெல்லாம் அவ்வளவு நுணுக்கமான பதிவாக இருக்கிறது படம். பாராட்டுகள். அதில் ஒரு கொள்ளையனாகவும் அவரே நடித்திருக்கிறார். சிறப்புதான். இருந்தாலும், ஒரு தொழிலில் மட்டும் அக்கறை செலுத்தினால் பர்பெக்ஷன் பலமாக இருக்குமே கவுரவ்?

பெரும்பாலான காட்சிகள் இரவு நேரத்தில் நடப்பவை. அதை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன். டி.இமானின் இசையில் ‘டக்கு டக்கு டக்குனு’ பட்டய கிளப்பும் பாடல். விஷுவல் ட்ரீட்டும் பலே. அந்த கிராபிக்ஸ் கற்பனைக்கு மட்டும் இயக்குனருக்கு தனியாக ஒரு ஷொட்டு. பிற பாடல்களிலும் இமானின் ராஜ்யம்!

ஹீரோ விக்ரம் பிரபு, சென்னை டிராபிக்கை கண்டமேனிக்கு திருப்பிவிட்டு கொள்ளையர்களை தனிமை படுத்துகிறார் என்பது ட்விஸ்டுதான். அதைவிட பெஸ்ட்டு… சிக்னலிலேயே அவர்களை மடக்கி பிடித்து வெளுத்துக்கட்டுவதுதான் என்பதாக இருந்திருந்தால், ரசிகர்களும் சிகரம் தொடுகிற அளவுக்கு கேள்விகளை அடுக்கியிருக்கப் போவதில்லை!

கம்பீர போலீஸ்…. ஆனால் மெடல்தான் அலுமினியத்தில்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உங்க ‘ ஆதிபகவன் ’ லட்சணம் தெரியாதா? இயக்குனர் அமீர் மீது பாயும் திலகர் பட இயக்குனர்

விரைவில் திரைக்கு வர இருக்கிறது ‘திலகர்’ திரைப்படம். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர் பேசிய பேச்சுக்கு திடீரென ஆவேசப்பட்டிருக்கிறார் அப்படத்தின் இயக்குனர் பெருமாள்...

Close