என் பொண்ணுக்கு எதிரா புரளி கிளப்புறாரு… சிம்பு மீது ஹன்சிகா அம்மா காட்டம்!
கோடம்பாக்கத்தின் இந்த வார ஹாட் ஷோ, ‘ஹன்சிகாவுக்கும் ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த்துக்கும் லவ்வாமே?’ என்பதுதான். மூணு புள்ளி ஒரு ஆச்சர்யக்குறியோடு அலைச்சல் காட்டும் எல்லா காதல்கள் போலதான் இந்த காதலும் இருக்கும் என்று நினைத்தால், ஏகப்பட்ட கேள்விக்குறிக்குள் அடங்கி விட்டது இந்த பரபரப்பு. ஆமாவா? இல்லையா? என்று இரண்டே கேள்விகளுக்குள் அடக்க முடியாத பிரச்சனையாகவும் இருக்கிறது இந்த லவ்.
ஏன்?
ஜெயப்பிரதாவின் சொத்து விபரங்கள் அப்படி! மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் என்று திரும்புகிற மாநிலத்தில் எல்லாம் சொத்துக்கள் குவிந்து கிடக்கின்றனவாம் அவருக்கு. நாளைக்கு மணக்கப் போற மல்லிகை பூவை விட, இன்னைக்கு பூத்துக் கிடக்கிற தாழம்பூ மேல் என்று நினைக்கிற வர்கம் இல்லை நடிகைகள். செல்போன் எண்ணை வாங்கும்போதே, சம்பந்தப்பட்ட இளைஞர்களின் சொத்துக்கணக்கையும் சேர்த்து வாங்கும் வழக்கம் அநேக நடிகைகளுக்கு உண்டு. அதற்கப்புறம் கால்குலேஷன்களோடுதான் பயணமாகும் அவர்களின் காதல். இதில் அமர காவியம் படைத்த தேவயானி, குஷ்பு போன்றவர்களோடு இன்னும் சில ஜோடிகளையும் கணக்கில் சேர்க்காமல் பார்த்தால், எல்லா சினிமா காதலுக்குப் பின்பும் நோட்டுதான் முக்கியமான அட்ராக்ஷனாக இருக்கும்.
ஹன்சிகா காதலும் அப்படிதானா? புரியவில்லை. ஆனால் இந்த செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில் பரபரப்பானார் ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி. சென்னையிலிருக்கும் தனக்கு தெரிந்த அத்தனை பத்திரிகையாளர்களுக்கும் போன் அடித்துவிட்டார். ‘எல்லாம் அந்த சின்ன பையனோட வேலைங்க. (யார்னு புரியுதா?) தேவையில்லாமல் என்ற பொண்ணை பற்றி புரளி கிளப்பிகிட்டு இருக்கார். ஹன்சிகா அப்படியெல்லாம் யாரையும் லவ் பண்ணல. சொத்துக்காக பொண்ணை அடகு வைக்கிற குடும்பமும் எங்களுது இல்ல என்றும் பொங்கி வெடித்திருக்கிறார்.
சிம்புவை விட சித்தார்த் பணக்காரரா ? சித்தார்த்தை விட சிம்பு பணக்காரரா? என்ற வாதங்கள் எல்லாம் அபத்தமானது. ஏனென்றால் சிம்புவும் சித்தார்த்துமே எதிரெதிர் வீட்டுக்காரர்கள். சிறு வயதில் ஒன்றாக கிரிக்கெட் விளையாடியவர்கள். இப்போதும் அந்த பிரண்ட்ஷிப் தொடர்கிறது என்று வைத்துக் கொண்டால், சித்தார்த்தை சிம்பு எச்சரித்திருப்பார் அல்லவா? அந்த பொண்ணு லவ் விஷயத்துல ரொம்ப மோசம். நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றுதானே நண்பனை வழி நடத்தியிருப்பார்?
ஆனால் இதையெல்லாம் புரிந்து கொள்கிற மன நிலையில் மோனா மோத்வானி இல்லை என்பது மட்டும் தெள்ளந் தெளிவாக புரிகிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் சிம்பு என்றால், ஐயோ பாவம்… அவர்தான் என்ன செய்வார்?
எது எப்படியோ? தியேட்டருக்கு வருகிற கமர்ஷியல் படங்களை விட, வார இதழ்களில் வருகிற இந்த மாதிரி லவ் படங்களுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது ரசிகர்களிடத்தில். அப்படி பார்த்தால், இந்த படம் இன்னும் நாலைஞ்சு வாரங்களுக்கு ஓடும்… ஓடட்டும்!