முதல்ல தனுஷை கிளம்பி வரச்சொல்லுங்க! சிம்பு பதிலால் திணறும் கவுதம்!

எந்த கணக்கு போட்டாலும் சிம்புவிடம் செல்லாது என்பதை அடுக்கடுக்காக அனுபவித்தாலும் நப்பாசை யாரை விட்டது? விண்ணை தாண்டி வருவாயா என்ற எகிடுதகிடு ஹிட்டை சிம்புவுக்கு வழங்கிய விதத்தில் இவரும் அவரும் இப்படி அப்படி என்று ஆகிவிட்டார்கள். இந்த நட்பை துட்டாக்குவதுதானே முறை? எந்த ஹீரோவுமே தன்னை நம்பி வராத நேரத்தில், நானிருக்கேன் என்று சிம்பு வந்ததையே தேசிய விருதாக கருதினார் கவுதம்மேனன். உடனடியாக அச்சம் என்பது மடமையடா படத்தை ஆரம்பித்தார்கள். சிம்பு உசுப்பிட்ட நேரம், அஜீத்தும் லைனுக்கு வர சிம்புவை அம்போவென விட்டுவிட்டு ‘என்னை அறிந்தால்’ படத்தை எடுக்க ஓடினார் கவுதம்.

எப்படியோ… மீண்டும் திரும்பி வந்தால் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை வருஷக்கணக்காக கடந்து கொண்டிருக்கிறார்கள் இருவரும். இந்த நிலையில்தான் அதிர்ஷ்டம் ஆடித்தள்ளுபடி கொடுத்தது கவுதம்மேனனுக்கு. எங்க அண்ணன் செல்வராகவனை வச்சு ஒரு படம் தயாரிச்சா, இந்த தம்பியின் கால்ஷீட் உங்களுக்கு என்றொரு மெகா சலுகையை வழங்கினார் தனுஷ். வந்த ஸ்ரீதேவிக்கு வளையல் கொலுசு மாட்டி பயன்படுத்திக் கொண்டார் கவுதம். இங்கேயும் ஒரு கால்குலேஷன் ஓடியது அவர் மனசில்.

தனுஷ் கால்ஷீட் இருக்கு. சிம்பு கால்ஷீட்டும் இருக்கு. இரண்டு பேரையும் ஒரு பாடலில் ஆட வச்சா எப்படியிருக்கும்? உடனே இரண்டு பட யூனிட்டையும் தயார் பண்ணிக் கொண்டு துருக்கிக்கு கிளம்பிவிட்டார். தனுஷ், சிம்புவுடன் படத்தின் நாயகி மஞ்சிமா மோகனும் இருப்பதால், விஷயம் சுலபத்தில் முடிந்துவிடும் என்பது அவரது கணக்கு.

தனுஷ், மஞ்சிமா, மற்றும் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடிக்கும் தெலுங்கு ஹீரோ உள்ளிட்ட அனைவரும் துருக்கியில் இருக்க, இங்கிருந்து கிளம்ப வேண்டிய சிம்பு, “எங்கிட்டயவோ…?” என்று கட்டையை போட ஆரம்பித்துவிட்டார். “முதல்ல தனுஷ் சம்பந்தப்பட்ட ஷுட்டிங்கை முடிச்சுட்டு அவரை பேக் பண்ணி அனுப்புங்க. அப்புறமா நான் வர்றேன்” என்று கூறிவிட்டாராம்.

ஒரு கொடியில் இரு மலர்களாக இருவரையும் ஒரு பாடலில் காட்டி, கல்லா கட்டலாம் என்று நம்பியிருந்த கவுதமுக்கு, இப்போது கனம் கனமா ரணம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
தெறி படத்தில் விஜய் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா சாஷா

எங்க வீட்டு ராசா என்று அவரவர் வாரிசுகளை அவரவர் கொண்டாடினாலும், அடுத்தவர்களையும் சேர்த்து கொண்டாட வைக்கிற அதிர்ஷ்டம் விஜய் அஜீத் மாதிரியான விஐபி குழந்தைகளுக்குதான் வாய்க்கும். அப்படியொரு...

Close