பந்தா இல்லாத பணக்காரர்! சசிகுமாரை பாராட்டிய இயக்குனர்

சிரிப்பு நடிகை தேவதர்ஷினி, விட்டால் கே.பி.சுந்தராம்பாள் லெவலுக்கு ஆன்மீக ரெக்கார்டை அலற விடுவார் போலிருந்தது. ‘திருமுருகாற்றுப்படையில் என்ன சொல்லியிருக்குன்னா…?’ என்று அவர் காட்டிய மேற்கொள்கள் எல்லாம் மூணு வேளையும் பட்டை போடுகிறவர்களால் கூட முடியாத சமாச்சாரம்! ‘முருகாற்றுப்படை’ படத்தின் பிரஸ்மீட்டில்தான் இப்படியொரு ஆன்மீக அவதாரியானார் தேவ்ஸ்!

‘படத்தின் டைரக்டர் பேரு முருகானந்தம். ஹீரோவோட பேரு சரவணன். ஒளிப்பதிவாளர் பேரு செந்தில் குமார். ஸ்டன்ட் இயக்குனர் பேரு ஆறுபடை முருகன். அவ்வளவு ஏன்? இந்த படத்தின் பி.ஆர்.ஓ பேருகூட நிகில் முருகன். இப்படி முருகாற்றுப்படையில் வேலை செஞ்ச நிறைய பேருக்கு முருகனோட பேரே இயற்கையா அமைஞ்சிருக்கே, அது எவ்வளவு பெரிய விஷயம்?’ என்றார் உடம்பெல்லாம் புல்லரிக்க!

இயக்குனர் முருகானந்தம் அடிப்படையில் ஒரு தயாரிப்பு நிர்வாகி. பாலாவின் சேது படத்தில் துவங்கி அதற்கப்புறம் முக்கிய படங்களான அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியிருக்கிறார். ஒரு புரடக்ஷன் மேனேஜர் டைரக்டர் ஆகிட்டானே என்று அலட்சியப்படுத்துகிறவர்களையும் நான் இங்கு பார்த்துட்டுதான் இருக்கேன் என்றார் அவர் வருத்தமாக. (தேசிய விருது பெற்ற இயக்குனர் சேரன் கூட அடிப்படையில் ஒரு தயாரிப்பு நிர்வாகிதான். டோண்ட் வொர்ரி முருகானந்தம்)

நடுவில் படம் இயக்கணும்னு ஆசைப்பட்டு நிறைய நிறுவனங்களை அணுகினேன். ஒருத்தர் பணம் எண்ணுறதை வச்சே அவர் படம் எடுப்பாரா? பாதியிலே நிறுத்திடுவாரா என்பதை கண்டு பிடிச்சுருவேன். அந்தளவுக்கு இந்த சினிமாவுல எனக்கு அனுபவம் இருக்கு என்று முருகானந்தம் சொன்னதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. பாலா சாரிடம் வொர்க் பண்ணும்போதுதான் எனக்கு சசிகுமார் பழக்கமானார். அடிப்படையில் ரொம்ப பணக்காரர் அவர். சேது சமயத்திலேயே 15 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வீடு பார்த்து சென்னையில் தங்கினவர் அவர். ஆனால் ஒரு காலத்திலும் தான் ஒரு பணக்காரன் என்று மிதப்பாக பழகியவர் இல்லை.

இந்த படத்தின் தயாரிப்பாளரை நான் சசிகுமாரிடம் அழைச்சுட்டு போனேன். ‘முருகானந்தம் திறமைசாலி. அவரால் நிச்சயம் ஒரு நல்ல படம் தர முடியும். உங்களுக்கு நான் உத்தரவாதம் தர்றேன்’னு சொன்னார். அப்படி நிறைய நண்பர்களை அடைஞ்சுருக்கேன். அதுதான் எனக்கு பெருமை என்றார் முருகானந்தம்.

இன்ஜினியரிங் கல்லுரி மாணவர்கள் அரசு கல்லுரி மாணவர்கள் மாதிரி ஜாலியா இருக்க முடியலையே என்று ஏங்குவதுண்டு. அதை மையமா வச்சுதான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறாராம் முருகானந்தம். முதல்ல இந்த பஸ் டே பஸ் டேன்னு ஒண்ணு கொண்டாடுறாங்களே, படத்துல அதுக்கு ஒரு நீதியும் தீர்வும் சொல்லுங்க முருகர்… புண்ணியமாப்போவும்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘பசை ’ பார்ட்டிகளே… வாங்க பழகலாம்!

ஒரு மோசமான இயக்குனரிடம் ‘பசையுள்ள’ தயாரிப்பாளர் சிக்கி எல்லா பணத்தையும் இழந்து கடைசியில் கால் வயிற்றுக்கு கஞ்சி குடிக்கிற நிலைமைக்கு ஆளாவதும், ஒரு திறமையான இயக்குனர் தனது...

Close