ஏதாவது ஒரு காரணத்துக்காக எல்லார்ட்டயும் கையேந்துறோம்! -சிம்பிள் விஜய் ஆன்ட்டனி
எடுத்த படங்களின் எண்ணிக்கை குறைச்சலாக இருந்தாலும், சசி இயக்கிய படங்கள் ஓடிய நாட்களின் எண்ணிக்கை ஜாஸ்தி ஜாஸ்தி! சொல்லாமலே, ரோஜாக்கூட்டம், டிஷ்யூம் என்று அவரது கணக்கில் ப்ளஸ் அதிகம். மைனஸ் குறைச்சல்தான்! அவரது லேட்டஸ்ட் படம்தான் பிச்சைக்காரன். ஒரு வேடிக்கை என்னவென்றால், இந்த படத்தின் ஹீரோவான விஜய் ஆன்ட்டனி, டிஷ்யூம் படத்தில் சசியால் அறிமுகப்படுத்தப்பட்ட இசையமைப்பாளர். இன்று மார்க்கெட் லெவல் என்எஸ்சி நிப்டியை விட தொங்கலாக இருப்பதால், விஜய் ஆன்ட்டனியை தேடி, சசி செல்ல வேண்டிய நிலைமை!
இருந்தாலும் போன இடம் பொக்கிஷம். அலுங்காமல் குலுங்காமல் ஷுட்டிங்கை முடித்துவிட்டார் சசி. அதற்கப்புறமும் சுலபமாக அவரை கைதூக்கிவிட்டு விட்டது இன்னொரு வெளியீட்டு நிறுவனமான கே.ஆர்.பிலிம்ஸ். இந்த நிறுவனத்தின் முதலாளி சரவணனுக்கு மாற்றி மாற்றி பாராட்டு பத்திரம் வாசிக்கிறார்கள் சசியும், விஜய் ஆன்ட்டனியும். விளம்பரங்களும் சரி, மற்ற மற்ற பிரமோஷன்களும் சரி. பிரமாதமா பண்றாங்க என்ற சசி, இன்னொரு தகவலையும் சொன்னார். படத்தை நம்பிக்கையோடு எடுத்து முடிச்சாச்சு. எனக்கு முழு நம்பிக்கை இருந்தாலும் விநியோகஸ்தர்களுக்கு படம் போட்ற அன்னைக்கு டென்ஷன் இருந்திச்சு. அவங்களுக்கு இந்த படம் புடிக்கணும் என்கிற பதற்றம் இருந்திச்சு. மறுநாள் நான் அவங்க ஆபிசுக்கு போயிருந்தேன். அதுக்கு என்னை பார்த்தா எவ்வளவு உற்சாகமாக பேசுவாங்களோ, அந்த உற்சாகம் இன்னும் அதிகமாக அவங்க முகத்துல தெரிஞ்சுது. அப்படின்னா அவங்களுக்கு படம் புடிச்சுருக்குன்னுதானே அர்த்தம்? என்கிறார் வெள்ளந்தியாக!
‘எப்படிதான் இப்படியொரு தலைப்புல, இப்படியொரு கேரக்டர்ல நடிச்சீங்களோ’ என்று என்னை பார்த்து பலரும் கேட்கிறாங்க. பேசிக்கலாகவே நான் ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு வளர்ந்தவன். இங்கு எல்லாருமே பிச்சைக்காரங்கதான். ஏதாவது ஒரு காரணத்துக்காக எல்லார்ட்டயும் கையேந்தி நிற்கிறோம். இந்த கதையை சசி சார் எங்கிட்ட சொல்லும்போது குமுறி குமுறி அழுதேன். அதுக்குள்ள அப்படியொரு ஜீவன் இருந்திச்சு என்றார் விஜய் ஆன்ட்டனி.
ட்ரெய்லரும் நமக்காக திரையிடப்பட்ட ஒரு பாடலுமே உணர்த்தியது, அவர் சொன்ன அந்த ஜீவனை!