கோர்ட்டுக்கே வர மாட்டேங்குறாரு தம்பி… வராத வடிவேலுவுக்காக சிங்கமுத்து புலம்பல்!
‘என் வழி தனி வழி!’ ஊர் உலகத்திற்கெல்லாம் பழகிப் போன இந்த பஞ்ச் டயலாக்கைதான் தன் படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் ஆர்கே. இந்த தலைப்பு கிடைச்சது எப்படி? இதற்கு ஒண்ணும் ஆட்சபேணை வரலீயா போன்ற அதி அத்யாவசியமான கேள்விகளுக்கெல்லாம் மெல்லிய சிரிப்போடு, அதெல்லாம் பார்த்துக்கலாம் சார். ஒண்ணும் பிரச்சனையிருக்காது என்று பதிலளித்த ஆர்.கே, தமிழ்சினிமாவின் மினிமம் கியாரண்டி சப்ஜெக்டான போலீஸ் கதைக்குள் இறங்கிவிட்டார். ஆர்கேவுக்கு ரெண்டு ஜோடிகள். ஒருவர் மீனாட்சி தீக்ஷித். மற்றொருவர் பூனம் கவுர். இந்த படத்தை ‘எல்லாம் அவன் செயல்’ படத்தை இயக்கிய ஷாஜிகைலாஷ் இயக்குகிறார். ‘எல்லாம் அவன் செயல்’ படத்தில் வட்டச்செயலாளர் வண்டு முருகனை தன்னுடன் துணைக்கு வைத்துக் கொண்டதை போல, இந்த படத்தில் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரியான இவருக்கு பக்க துணையாக இருப்பது அண்ணன் சிங்கமுத்துவும், அற்புத நடிகர் தம்பி ராமய்யாவும்.
சிங்கமுத்து பேச ஆரம்பித்தார். ‘நாங்க ஒரு காலத்துல ஒரு ‘பார்ட்டிக்காக’ வேலை பார்த்தோம் (யாரை சொல்றாருன்னு தெரியுதா?) அப்பவுலேர்ந்து நாங்க நல்ல நண்பர்களா பழகிட்டு இருக்கோம். இப்போ இந்த படத்தின் வசனகர்த்தா பிரபாகர் போன் பண்ணி, ‘அண்ணே ஒரு படம் இருக்கு வாங்க’ன்னாரு. பழக்கத்துக்கு மரியாதை கொடுத்து வந்துட்டேன். வந்தா? இங்க தம்பி ராமய்யா இருக்காரு. அப்புறம் ரெண்டு பேரும் உட்கார்ந்து பழைய கதை அப்படி இப்படின்னு பேசி முடிச்சு இந்த படத்துல பர்பாமென்ஸ் கொடுக்க ஆரம்பிச்சுட்டோம். படத்துல ஒரு டயலாக் வச்சுருக்கேன். ‘அந்தாளு கூட கொஞ்ச நாளு திரிஞ்சோம். இந்தாளு கூட கொஞ்ச நாளு திரிஞ்சு பார்ப்போமே’ன்னு? எல்லாத்தையும் ஜனங்க புரிஞ்சுப்பாங்க’ என்றார்.
அதெல்லாம் இருக்கட்டும். நீங்களும் வடிவேலுவும் திரும்ப ஒண்ணா நடிக்கப் போறதா? சொல்லி முடிப்பதற்குள் பேச ஆரம்பிக்கிறார் சிங்கமுத்து. ‘அட… ஆமாந்தம்பி. ரெண்டு மூணு முக்கியமான சினிமாக்காரங்க வந்து பேசினாங்க. நீங்களும் வடிவேலுவும் சேர்ந்து நடிக்கிறீங்கன்னு விளம்பரம் பண்ணினா, எங்க படம் ஒரு வாரம் ரெண்டு வாரம் ஓடிட்டு போவுமேன்னு. எனக்கொன்னும் இல்ல. நடிச்சுருவேன். ஆனா நான் ஏழரை கோடி ரூபாய அடிச்சுட்டு போயிட்டதா சொன்னாருல்ல. அதை கோர்ட்ல வந்து இல்லேன்னு சொல்ல சொல்லுங்க. இல்லேன்னா ஆமாம்னு புருப் பண்ண சொல்லுங்க. கோர்ட்டுக்கே வர மாட்டேங்குறாரு. எல்லா வாய்தாவுக்கும் நான் மட்டும்தான் போயிட்டு வந்துகிட்டு இருக்கேன்னு அவங்கிட்ட சொன்னேன். போயிருக்காங்க…முதல்ல ஏழரை கோடி மேட்டர் முடியட்டும் தம்பி. அப்புறம் பார்க்கலாம் என்றார்.