சிவாஜிக்கு மணி மண்டபம் கட்டியாச்சு… அடுத்தது பாலசந்தருக்கு சிலை வைப்பதுதான் பாக்கி!

கலைஞர்களுக்கு உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் கடப்பாரையால் குத்தினால் கூட சில நேரம் அமைதியாக இருந்துவிடுகிற விசித்திர குணம் கொண்டவர்களும் அதே கலைஞர்கள்தான். தேவைப்பட்ட நேரத்தில் அழுது கண்ணீர் வடிக்கும் இவர்கள், ‘நமக்கெதுக்குப்பா இதெல்லாம்?’ என்று தோன்றினால் அங்கு அப்படியொரு விஷயம் நடப்பதாகவே காட்டிக் கொள்ள மாட்டார்கள். அண்மைகால உதாரணம் பாலசந்தரின் மறைவும், அவருக்கு சிலை வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையும். நீண்ட கால உதாரணம், சிவாஜியின் மணி மண்டபம்.

சிவாஜி இறந்து போன அதே வாரத்தில் கூடி இரங்கல் தெரிவித்த தமிழ்சினிமா அமைப்புகள் அப்போது போட்ட தீர்மானங்களில் ஒன்று சிவாஜிக்கு மணி மண்டபம் எழுப்ப வேண்டும் என்பது. ஆனால் இன்று வரை அதற்கான அடிக்கல் அல்ல, உடைந்த ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முன்வரவில்லை எவரும். இது அரசின் கடமை என்று அமைதியாக இருந்துவிட முடியாது. ஒரு மாபெரும் கலைஞனை கவுரவிக்க வேண்டியது அரசின் கடமைதான். ஆனால் அரசுக்கு அதைவிடவும் பல கடமைகள் இருப்பதால், சிவாஜியை கலையுலக மாமேதை என்று கருதும் சினிமா இனம்தான் அந்த வேலையை செய்ய வேண்டும்.

பல நூறு கோடிகள் சொத்துக்கள் வைத்திருக்கும் சிவாஜி பேமிலியே கூட, ஒரு அரை கிரவுண்ட் நிலம் ஒதுக்கி அங்கு ஒரு சிலையும் பூங்காவும் அமைக்க முன் வரவில்லையே என்பதுதான் சிவாஜி ரசிகர்களின் உண்மையான கவலை. இதைதான் அரசும் செய்யப் போகிறது. (ஒருவேளை செய்ய முன் வந்தால்?)

தமிழனின் ஒற்றுமையையும் கடமை உணர்ச்சியையும் நினைத்து எப்போதும் சிரிக்கும் அண்டை மாநிலத்துக் காரர்கள் இப்போதும் சிரிப்பார்கள். ஏன் தெரியுமா? இதே மண்ணில்தான் மறைந்தார் ஆந்திராவின் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான சோபன்பாபு. அவருடைய குடும்பம் ஆந்திர அரசிடமோ, தமிழக அரசிடமோ கையேந்தி நிற்கவில்லை. சோபன்பாபுவின் வீட்டருகே, நெல்சன் மாணிக்கம் சாலையில் கம்பீரமாக அவருக்கு சொந்த செலவில் சிலை வைத்துவிட்டார்கள். தினந்தோறும் அந்த சிலையை கழுவி, தினமும் ஒரு புத்தம் புது மாலையணிவித்து பராமரித்துக் கொண்டிருக்கிறார்கள். நமக்கெல்லாம் இது ஒரு பாடமும் கூட.

சரி… பாலசந்தருக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார்களே, அது நடக்குமா? நிச்சயம் நடக்கும். ஆனால் எப்போது என்று யாருக்கும் தெரியாது. அதுவரைக்கும் ஒரு மாபெரும் கலைஞனின் புகழுக்கு மரியாதை செலுத்தாமல் இருப்பது அவரை கடவுளாகவும், கடவுளுக்கு மேலான குருவாகவும் கருதும் யாருக்கும் பெருமையல்ல. தமிழ் திரையுலகத்தில் பாலசந்தர் அறிமுகப்படுத்திய அற்புதமான கலைஞர்களில் பலர் இன்று செல்வ செழிப்போடும் செல்வாக்கோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆளுக்கு ஒரு லட்சம் போட்டால் கூட கன்னியாக்குமரி வள்ளுவரை மிஞ்சிய சிலை வைத்துவிடலாம் பாலசந்தருக்கு.

இதையெல்லாம் விட்டுவிட்டு வழக்கம் போல, அறிக்கைகள், அபிலாஷைகள் என்று பேட்டியும் அறிக்கையும் கொடுத்துக் கொண்டிருந்தால் சிவாஜியின் மணி மண்டபத்தையும் பாலசந்தரின் சிலையையும் அவரவர் மனசுக்குள் கட்டிக் கொண்டு வாழ வேண்டியதுதான்.

நமக்குதான் பொறுமையின் எல்லை எதுவரைக்கும் என்பது நன்றாக புரியுமே!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. அந்துவன் மொந்தைக்கள்ளு says

    நாட்டுக்கு நெம்ப முக்கியம் இப்ப!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
2015 ல் என்ன செய்ய வேண்டும் ரஜினி?

தமிழ்சினிமாவில் தல யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும்... கிரீடம் நான்தான் என்பதை 100 வது முறையாக நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ரஜினி. அவர் படங்கள் திரைக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் நடைபெறும்...

Close