அவிய்ங்க மூக்கை உடைக்கணும்! சிவகார்த்திகேயன் சைலன்ட் ஆத்திரம்?
சில பிளாஷ்பேக்குகள்தான் இனிக்கும். சில பிளாஷ்பேக்குகள் நாக்கிலும் மனசிலும் நாள் கணக்கில் தங்குகிற அளவுக்கு கசப்போ கசப்பாக இருக்கும். ஒருவேளை அப்படிதான் இருந்ததோ என்னவோ? அந்த சம்பவத்தை இன்னும் மறக்கவேயில்லை சிவகார்த்திகேயன் என்கிறார்கள் அவரது மனசறிந்தவர்கள். அவர் நடித்த ஒரு படத்தின் சிங்கிள் டிராக் பாடல் வெளியீட்டு விழாவை சிங்கப்பூரில் வைக்கலாம் என்று ஒரு சேனலோடு டை அப் போட்டார் சிவகார்த்திகேயன். எல்லா வேலைகளும் இனிதே நிறைவேறின. மனம் கொள்ளாத சந்தோஷத்தோடு சிங்கப்பூரில் கால் வைத்தது படக்குழு.
அந்த நேரத்தில்தான் சென்னையிலிருந்து ஒரு போன். அந்த விழாவை அங்கு நடத்தக்கூடாது. நடத்தினால் நடக்கறதே வேற… என்று எச்சரித்தது தமிழ்சினிமாவின் மிக முக்கியமான சங்கம் ஒன்று. ஏன்? சேனலுக்கும் சங்கத்திற்கும் ஏற்பட்ட உரசல்தான் காரணம். இன்னும் மூன்று மணி நேரத்தில் விழா நடந்தாக வேண்டும். கலை நிகழ்ச்சிகளும், ஆடல் பாடல் குழுக்களும் தயார் நிலையில் இருக்க, இந்த திடீர் உத்தரவு காரணமாக திணறிப் போனார் சிவகார்த்திகேயன். கண்களில் அழுகை வராத குறை.
வேறுவழியில்லை. நிகழ்ச்சியை கேன்சல் செய்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.
இதோ- சொந்தப்படமான ரெமோ படத்தின் சிங்கிள் டிராக் பாடல் அதே சிங்கப்பூரில்தான் வெளியாகவிருக்கிறது. என்ன ஆனாலும் சரி. மூக்குடைபட்ட அதே நாட்டில்தான் நடக்கணும் என்று கூறிவிட்டாராம் அவர். அதற்கான முழு ஏற்பாடுகளையும் பரபரவென செய்து கொண்டிருக்கிறார்கள். வடு இருக்கிற இடத்துலதான் களிம்பு போட முடியும்? அந்த வடு சிங்கப்பூர்ல அல்லவா இருக்குது?