எம்.ஜி.ஆர் வீட்டில் சிவகார்த்திகேயன்!

அறிமுக இயக்குனர் பாக்யராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் படு ஜரூராக துவங்கிவிட்டது. இந்த படத்தை சிவகார்த்திகேயனின் நண்பர் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, அனிருத் போன்ற முக்கியமான டெக்னீஷியன்கள் பணியாற்ற இருக்கிறார்கள். இதெல்லாம் ரசிகர்களுக்கு தெரிந்த விஷயம்தான். தமிழ்சினிமாவின் கலெக்ஷன் கிங் என்று அண்மைக்காலமாக வர்ணிக்கப்படும் சிவகார்த்திகேயனுக்கு இயற்கையே தந்த பரிசு ஒன்று….

அது என்ன?

இந்த புதிய படத்திற்கு அலுவலகம் அமைப்பதற்காக சென்னையிலிருக்கும் பிரதான இடங்களில் எல்லாம் சல்லடை போட்டு சலித்துக் கொண்டிருந்தாராம் ராஜா. சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட அலுவலகங்களை வாடகைக்கு பார்த்தும் எதுவும் மனசுக்கு திருப்தியாக இல்லை. கடைசியாக ஒரு அபார்ட்மென்ட் வீட்டை தேர்வு செய்தாராம். வாடகை பேசி அட்வான்ஸ் முடிவு செய்து, வீட்டு ஓனரிடம் முன் பணம் கொடுக்கச் சென்றால்… அங்கே அவரது வீடு முழுக்க வெற்றிப்பட ஷீல்டுகள். அதெல்லாம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த படங்களுடையது. அதற்கப்புறம்தான் தெரியவந்ததாம் அவருக்கு. இவர்களுக்கு அமைந்தது மாட்டுக்கார வேலன் படத்தின் தயாரிப்பாளர் என். கனகசபை என்பவருக்கு சொந்தமான இடம் என்று.

33 வருடங்களுக்கு முன்பே இந்த வீட்டை கட்டியிருக்கிறார் அந்த தயாரிப்பாளர். நேரில் வந்து குத்துவிளக்கேற்றி பூஜை செய்து வைத்த எம்.ஜி.ஆர் சம்பிரதாயப்படி ஒரு நாள் இரவு அந்த வீட்டில் தங்க வேண்டும் என்பதால் தங்கியும் சென்றாராம். இப்போது அந்த வீடுதான் சிவகார்த்திகேயனின் புதிய படத்திற்கான அலுவலகம் ஆகியிருக்கிறது.

கடவுளோ… எம்ஜிஆரோ…. எங்கிருந்தோ ஆசிர்வதிக்கிறார்கள் சிவகார்த்திகேயனை! அதுதான் கேட்காமலே கிடைத்த வரம்….

Read previous post:
lakshmi menon singing song oh coffcee panney

https://youtu.be/a9GLSnBlj6A

Close