சீக்கிரமா கிசுகிசுவில் அடிபட வாழ்த்துகிறேன்… அறிமுக ஹீரோவை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!
நாளொரு ஆடியோ, பொழுதொரு ரிலீஸ் என்று கோடம்பாக்கத்தில் விழாக்களுக்கு பஞ்சமேயிருக்காது. ஆனால் எப்போதாவதுதான் இதுபோன்ற விழாக்களுக்கு ஒரு அர்த்தம் தருகிற மாதிரி, கேட்பதற்கு இனிமையான பாடல்கள் அடங்கிய ஆல்பத்தை வெளியிடுவார்கள். இன்று சத்யம் வளாகத்தில் நடந்த ‘மொசக்குட்டி’ படத்தின் பாடல்கள் அந்த ரகம்! இசை ரமேஷ் விநாயகம். ‘89 ல் சினிமாவில் அறிமுகமானேன். அதற்கப்புறம் நள தமயந்தி, அழகிய தீயேன்னு சில படங்களுக்கு இசையமைச்சேன். அண்மையில் வந்த ராமானுஜம் படம் என்னுடைய இசையில் வந்ததுதான். ஆனால் தமிழ்ல எனக்கு பெரிய அங்கீகாரம் இல்ல. தெலுங்குல கூப்பிட்டாங்க. ஆனால் எத்தனை தாமதம் ஆனாலும் சரி. தமிழில்தான் இசையமைக்கணும், ஜெயிக்கணும் என்று காத்திருந்தேன். அது வீணாப் போகல. இந்த படத்தின் பாடல்களுக்கு பெரிய அங்கீகாரம் கிடைச்சுருக்கு’ என்றார் ரமேஷ்விநாயகம்.
பாடல்கள் அத்தனையையும் இயக்குனர் ஜீவனே எழுதிவிட்டார். இருந்தாலும் அவரை வாழ்த்த வந்திருந்தார் கவிஞர் சினேகன். என்னை பாடல் எழுத கூப்பிட்டிருந்தார். போயிருந்தேன். சில பாடல்களுக்கு பல்லவியும் சரணத்தையும் அவரே எழுதிட்டார். அதையும் என் கையில் கொடுத்து சுச்சுவேஷனும் சொல்லி அனுப்பியிருந்தார். வீட்டில் வந்து படிச்சு பார்த்தேன். அவர் எழுதியதே அவ்வளவு அற்புதமா இருந்திச்சு. உடனே அவருக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினேன். நீங்கள் எழுதிய வரிகளே அற்புதமா இருக்கு. ஏன் என்னை இன்னொரு முறை எழுத சொல்றீங்க? இதையே பயன்படுத்திக்கலாமே என்று. அவர் ஒரு சிறந்த ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். டைரக்டரா இருந்திருக்கிறார். இப்போ பாடல் ஆசியராகவும் ஆகியிருக்கிறார். அவரை வாயார வாழ்த்துகிறேன் என்றார் சினேகன்.
விழாவில் பாரதிராஜா, சிவகார்த்திகேயன், பிரபுசாலமன் மாதிரி முக்கியமான ஸ்டார்களும் கலந்து கொண்டார்கள். சிவகார்த்திகேயன் படத்தின் ஹீரோவை வாழ்த்தியதுதான் ரொம்பவே வித்தியாசம். ‘சீக்கிரம் உங்களை பற்றி எல்லாரும் கிசுகிசு எழுதுகிற அளவுக்கு வளரணும். இன்னைக்கு கிசுகிசு வரலேன்னா அவங்க மார்க்கெட் அவ்வளவு பெரிசா இல்லேன்னு அர்த்தம்’ என்றார். படத்தின் இயக்குனர் ஜீவனின் தம்பிதான் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார். இவர் ஏற்கனவே மைனா, கும்கி, மான்கராத்தே ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளராக இருந்திருக்கிறார். தற்போது சிவ கார்த்திகயேன் நடிக்கும் டாணா படத்திற்கும் இவர்தான் கேமிரா.
‘என்னை அழகா காட்டிடணும்னு ரொம்பவே ட்ரை முயற்சி பண்ணுகிறார் சுகுமார். அவர் அழைத்ததால்தான் நான் வந்தேன்’ என்று அங்கு அவர் வந்ததற்கும் ஒரு காரணத்தை சொல்லிவிட்டு கிளம்பினார் சிவகார்த்திகேயன்.
ரஜினியை வைத்து எஜமான், விஜயகாந்தை வைத்து சின்ன கவுண்டர் ஆகிய படங்களை இயக்கிய ஆர்.வி.உதயகுமாரும் வந்திருந்தார். அவர் பேச்சில்தான் அநியாயத்திற்கு உண்மை புலப்பட்டது. ‘நான் பார்த்து வளர்ந்த ஹீரோக்கள் இங்க நிறைய பேரு இருக்காங்க. ஆனால் போன் அடிச்சா கூட யாரும் எடுக்கறதில்ல. நேர்லதான் பேச மாட்டேங்கிறீங்க. அட்லீஸ்ட் போன்லயாவது பேசுங்கப்பா… இந்த படத்தோட ஹீரோவுக்கு என்னோட அட்வைஸ் அதுதான். மக்களை விட்டு தள்ளிப் போகாதீங்க. எல்லாரையும் மதிக்க கத்துக்கோங்க’ என்றார் ஆவேசமாக.
நிகழ்ச்சியை மிக அற்புதமான தமிழில் தொகுத்து வழங்கினார் கவிஞரும், கும்கி படத்தில் பிரமாதமான நடிப்பை வழங்கிய திடீர் நடிகருமாகிய ஜோ.மல்லுரி.