ஏறி வந்த லிங்கு இறங்கி வந்த சிவா முடிவுக்கு வந்த கோடி பேரம்!
ஒரு வழியாக பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.
போன்வீட்டா குடிக்கிற குழந்தை ‘போர்ன் லஸ்’சா இருக்காது என்ற நம்பிக்கையில் வளரும்போதே அட்வான்ஸ் கொடுத்து கமிட் பண்ணி வைப்பது கோடம்பாக்கத்தில் அவ்வப்போது நடக்கிற விஷயம்தான். ஒரு நடிகரின் படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகிக் கொண்டிருந்தால் உடனே அவருக்கு ஒரு சம்பளத்தை பேசி அட்வான்ஸ் கொடுத்து அமுக்கி விடுவது முன்னணி நிறுவனங்களின் முதலாளி போக்கு! அப்படிதான் சிவகார்த்திகேயனின் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படம் வெளிவருவதற்கு முன்பே ஒரு கோடி சம்பளம் நிர்ணயம் செய்து அட்வான்சும் கொடுத்திருந்தார் பட முதலாளி போஸ். லிங்குசாமியின் தம்பி என்பதாலேயே இந்த அட்வான்ஸ்சுக்கு முன்னுரிமையும் கொடுத்தார் சிவா.
அதற்கப்புறம் சிவாவை காலமும் வெற்றியும் உச்சாணிக் கொம்பில் ஏற்றி வைத்துவிட்டது. இன்றைய தேதிக்கு அவரது மார்க்கெட் சம்பளம் சுமார் பதினாலு கோடி என்கிறது கமுக்க தகவல்கள். இருந்தாலும் ‘பேசிய ஒரு கோடிக்கு மேல் பத்து பைசா தர முடியாது’ என்று முரண்டு பிடித்தார் போஸ். இதெல்லாம் பழைய பழைய செய்தி. தற்போதைய நிலவரம்…? ரொம்பவே ஆரோக்கியம். என்னவாம்?
போஸ் தரப்பிலிருந்தும் சிவா தரப்பிலிருந்தும் அடிக்கடி கூட்டு பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டேயிருந்தன. எட்டு கோடி ரூபாயில் நின்று கொண்டு இறங்கி வராமல் முரண்டு பிடித்த சிவகார்த்திகேயன் ஒரு வழியாக ஆறு கோடிக்கு இறங்கி வந்தாராம். இரண்டு கோடியிலிருந்த லிங்குசாமி அண் கோ மெல்ல மெல்ல மேலேறி கடைசியாக அவர் கேட்ட ஆறு கோடியில் வந்து நின்றதாம். பேச்சு வார்த்தை நிறைவடைந்த சந்தோஷத்தோடு மீட்டிங் கலைந்திருப்பதாக தகவல்!
நமக்கு தெரிஞ்ச ஒரே கோடி, தனுஷ் கோடிதான்!