சிவப்பு எனக்கு பிடிக்கும்- விமர்சனம்

துணிக்கடைக்கு பாண்டி பஜார், டூ வீலர் பார்ட்சுக்கு புதுப்பேட்டைன்னு தேவைக்கு தகுந்த மாதிரி இடங்களை பிரித்து வைத்திருப்பதை போல ‘அந்த’ மேட்டருக்கும் ஒரு ஏரியாவை ஒதுக்க பழகுங்கப்பா என்று தனது பெருத்த தேகத்தோடு மன்றாடியிருக்கிறார் இயக்குனர் யுரேகா.

‘சென்னைக்கு சிவப்பு விளக்கு பகுதி வேணுமா, வேணாமா?’ அரிச்சந்திரன் வீட்டுல கோயபல்சை குடி வச்ச மாதிரி என்னாவொரு முரட்டு சிந்தனை? முடிவில்லாத கேள்வி?

யுரேகா என்றால் ‘கண்டுபுடிச்சிட்டேன்’ என்று அர்த்தமாம். அந்த கிரேக்க மொழி அர்த்தத்தை ‘கிறக்க’ மொழியில் கண்டுபிடித்திருக்கிறார் இவர். அவர் சொல்ல வந்த விஷயத்துல நியாயம் இருக்கா, இல்லையா என்பதெல்லாம் அவரவர் தெம்புக்கேற்ப தீர்மானிக்க வேண்டிய விஷயம். ஆனால் இந்த ‘சிவப்பு விளக்கு சிங்காரி’ கதையை அதிக அருவருப்பு இல்லாமல், ஆபாசம் இல்லாமல் படமாக்கினாரல்லவா? அதுக்கு வைங்க அண்ணாச்சி ஒரு ஷொட்டு!

அடிப்படையில் எழுத்தாளரான யுரேகா சிவப்பு விளக்கு பகுதியில் வசிக்கும் ஒரு அழகியை சந்திக்க வருவதாக துவங்குகிறது கதை. ‘சிவப்பு விளக்கு அழகிகளை பற்றி நான் ஒரு நாவல் எழுதப் போறேன். உங்க வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை சொல்லுங்க’ என்று அவர் கேட்க, ரெட் குயின் சான்ட்ரா சொல்ல ஆரம்பிக்கிறார். கதை ஒவ்வொரு சம்பவமாக கடக்கிறது. சில சம்பவங்கள் குபீர் சிரிப்பு. சில சம்பவங்கள் திகீர் மலைப்பு. நடுவில் அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் இந்த கும்பல் மொத்தத்தையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அள்ளிக் கொண்டு போக, லாக்கப்பில் உட்கார்ந்து கொண்டே மிச்ச பேட்டியை தொடர்கிறார் யுரேகா.

இவன் வந்தான்… அவன் வந்தான்… அவன் படுத்தான்… இவன் படுத்தான் என்றே கதை நகருதே, முடிவு எப்பதான்யா..? என்று ஆயாசத்தோடு நெளிய ஆரம்பிக்கும்போது, கிளைமாக்ஸ்! அது கண்ணீரும் கம்பலையுமான ஒரு சம்பவம்….அப்படியே படக்கென்று உதறி குப்புற தள்ளுகிறது நம்மை. நாட்டில் நடைபெறும் இவ்வளவு குற்றங்களும் ஒரு வடிகால் இல்லாமதானே நடக்குது? டாஸ்மாக்கை கொண்டு வந்து கள்ள சாராயத்தை ஒழிச்ச மாதிரி, சிவப்பு விளக்கு பகுதியை சென்னையில் கொண்டு வந்து பாலியல் குற்றங்களை தடுங்கய்யா… என்று கதறாத குறையாக படத்தை முடிக்கிறார் யுரேகா! அந்த கடைசி இருபது நிமிடங்கள் உணர்த்தும் சங்கதி, ‘இந்தாளு சொல்றது சரிதானோ?’ என்று படம் பார்க்கிற ரசிகனை தடுமாற வைக்கிறதே… அதுதான் இந்த படத்தின் ஆகப்பெரிய கவன ஈர்ப்பு.

முதலில் இப்படியொரு கதையில் நடிக்க ஒப்புக் கொண்ட சின்னத்திரை நடிகை சான்ட்ராவுக்கு ஒரு சல்யூட். சற்றே கவலை கோர்த்த முகம். அதில் உட்கார்ந்து கொண்ட எக்ஸ்ட்ரா புன்னகை. ‘நான் இதை ஒரு தொழிலா செய்யல. ஒரு சேவையா செய்யுறேன்’ என்று பேசுகிற போது அந்த குரலில் கசிகிற கழிவிரக்கம். இப்படி அச்சு அசலாக அழகான ‘ரெட் ’ ரோஸ் ஆகவே பளிச்சிடுகிறார் சான்ட்ரா. ஊனமுற்ற ஒருவன் வந்து ‘என்னை யாருமே கல்யாணம் செஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. எனக்கும் முதலிரவு கொண்டாடனும்னு ஆசையா இருக்கு’ என்று தவிக்க, தாலி கட்டிக் கொண்டு, மாலை மாற்றி ஜகஜ்ஜோதியாக முதலிரவு கொண்டாடி, கடைசியில் அந்த தாலியையும் கழற்றி அவன் கையிலேயே கொடுத்து ‘போயிட்டு வா’ என்கிறாரே… ஸ்வீட் எபிசோட்! அப்புறம் அந்த மனோதத்துவ மருத்துவர் எபிசோட்…. பயங்கரம்ப்பா அது!

‘நாட்டுக்கோழிக்கு நல்ல நேரம் வந்திச்சுன்னா முனியாண்டி விலாசுக்கு முன்னாடி நின்னு தை தைன்னு ஆடுமாம்…’ இந்த ஒரு கேலி வசனத்திற்கு தியேட்டரே விழுந்து புரள்கிறது. அந்த இன்ஸ்பெக்டர் கேரக்டர் அப்படி! முதலில் ஆக்ரோஷமாக இந்த கோஷ்டியை உள்ளே தள்ளிவிட்டு அதற்கப்புறம் யுரேகாவிடமே சினிமா சான்ஸ் கேட்பது சுவாரஸ்யம்தான். நடுநடுவே பிரச்சார நெடியுடன் கதை நகர்வதை தவிர்த்திருக்கலாம்.

இந்த படத்தில் மியூசிக் டைரக்டர்கள் என்று சிவ சரவணன், அனிஷ் யுவானி என்ற இருவரை அறிமுகப்படுத்தியிருக்கிறார் யுரேகா. ஒரு பாடலாவது உருப்படியாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தால், வணக்கம் போடுகிற வரைக்கும் அந்த நம்பிக்கையின் தலையில் அத்தனை இசைக்கருவிகளையும் டமால் டுமால் என்று உடைத்துப் போட்டுக் கொண்டேயிருக்கிறார்கள் அவர்கள். அதே நேரத்தில் ஒளிப்பதிவாளர் மகேஷ்வரனின் மூடுக்கேற்ற லைட்டிங்கும், மிதமான டோர்னும் ரசிக்க வைக்கிறது.

‘ஆம்புலன்ஸ் பல்பு அணையனும்னா, சிவப்பு விளக்கு எரியணும்’ என்கிற இயக்குனரின் தத்துவத்தை தாங்குகிற சக்தி உள்ளவர்கள் மட்டும் இந்த படத்தை ரசிக்கலாம்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
புதியதோர் உலகம் செய்வோம்- விமர்சனம்

அஞ்சான் வந்த கையோடு வந்திருக்கிறது இந்த லஞ்சான்! ‘லஞ்சத்தை முதலில் வீட்டிலேயிருந்தே ஒழி..., நாடு தானாக திருந்தும்’ என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் பேச்சிலிருந்து இந்த ஒரு...

Close