புலி தலைப்பை கொடுத்தார்.. ஆனால் பட வாய்ப்பை இழந்தார்?

புலி படத்தின் தலைப்பு எஸ்.ஜே.சூர்யாவிடம்தான் இருந்தது. விஜய் படத்திற்காக அந்த தலைப்பு வேண்டும் என்றதும் மறு பேச்சே இல்லாமல், எவ்வித கைமாறும் எதிர்பார்க்காமல் உடனே அந்த தலைப்பை விட்டுக்கொடுத்தது எஸ்.ஜே.சூர்யாவின் பெருந்தன்மை. விஜய் அவரது செல்போனில் தொடர்பு கொண்டு நன்றி சொன்னதும், “நான் என்ன பெரிசா செஞ்சுட்டேன்… இதுக்கெல்லாம் நன்றி சொல்லிகிட்டு?” என்று சூர்யா கோபித்துக் கொண்டதும் நடந்து கொஞ்ச மாதங்கள் கூட ஆகவில்லை.

அந்த புலி தலைப்பு விவகாரத்தை புதுக்கதையோடு முடிச்சு போட்டது சில நல்ல மனசுக்காரர்களின் நம்பிக்கை. இவரையும் விஜய்யையும் வைத்து ஒரு படத்தை தயாரித்துவிட வேண்டும் என்று நினைத்த ஏ.எம்.ரத்னம் அதற்கான முயற்சியிலும் இறங்கினார். அதற்கேற்றார் போல முன்பே ஒரு கதையை விஜய்க்கு சொல்லியும் வைத்திருந்தாராம் எஸ்.ஜே.சூர்யா.

வெண்ணை திரண்டு வர்ற நேரத்துல தொன்னையை கிழித்தது அண்டை மாநிலத்திலிருந்து வந்த ஒரு அழைப்பு. தெலுங்கு தேசத்தின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் கல்யாண் எஸ்.ஜே.சூர்யாவை அழைத்து ஒரு படம் பண்ணலாம் என்றால், சும்மாவாயிருப்பார் சூர்யா? அந்த படத்தை முடிச்சுட்டு வந்துடுறேன் என்று கிளம்பிவிட்டார். அவர் வருவதற்குள் விஜய் தன் கமிட்மென்டுகளை முடித்து தயாராக இருப்பார் என்கிறது ஷெட்யூல்!

அவர் வரும்போது சூழ்நிலை எப்படியோ? அதுக்குள்ள இப்பவே எப்படி சொல்ல முடியும் என்கிறது இன்னொரு தரப்பு. ஒரு வாய்ப்பை பெறுவதற்காக இன்னொரு வாய்ப்பை இழந்துவிட்டாரோ எஸ்.ஜே.சூர்யா?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எழுத்தாளர்களுக்கு தமிழ்சினிமா தரும் மரியாதை இவ்ளோதான்!

சில தினங்களுக்கு முன் முன்னணி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்திருக்கிறார்கள் எழுத்தாளர்கள் சுபா! அதில், “ஒரு படம் துவங்கப்படுவதற்கு முன் அழைக்கப்படுவது நாங்கள்தான். ஆனால் எல்லாரும் சம்பளம் வாங்கிய...

Close