பட விழாவில் பாம்பு? அதுவும் படமெடுத்ததால் பரபரப்பு!
குப்பை பொறுக்குகிற வேடத்தில் நடித்தால் கூட “நான் தினமும் வீடு பெருக்குவேன். அதனால் இந்த கதையோட என்னால ரிலேட் பண்ணிக்க முடிஞ்சுது” என்று ஹீரோயின் கொஞ்சியபடியே பேட்டியளிக்கிற காட்சியெல்லாம் ரசிகர்களுக்கு புதுசு இல்லை. எந்த கேரக்டராக இருந்தாலும், ஏதாவது ஒரு கதையை விட்டு, “அதனால்தான் என்னால அந்த கேரக்டரை ரிலேட் பண்ணிக்க முடிஞ்சுது” என்று எல்லா படங்களிலும் யாராவது ஒரு நடிகை உதார் விட்டுக் கொண்டேயிருக்கிறார். நாமும் ரசித்துக் கொண்டேயிருக்கிறோம்.
இந்த ‘ரிலேட்’ பண்ணிக்கிற விஷயத்தை எந்தளவுக்கு நேசித்திருந்தால் நேற்று அப்படியொரு வேலையை செய்திருப்பார்கள்? ‘விடாயுதம்’ என்றொரு படம் வரப்போகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில்தான் இந்த வியத்தகு வில்லங்கம். பேய்க்கும் பாம்புக்கும் நடக்கிற பிரச்சனைதான் படமாம். சொத்து பிரச்சனையோ? காதல் பிரச்சனையோ? அல்லது கள்ளக் காதல் பிரச்சனையோ? படம் வந்தால் தெரிந்துவிட்டு போகிறது. சிக்கல் அதுவல்ல… இந்த படத்தின் எபெக்ட் மேடையிலும் தெரிய வேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போலிருக்கிறது.
மேடைக்கு பின்புறம் அமைக்கப்பட்டிருந்த போர்டில் ஒரு பாம்பை தொங்க விட்டுவிட்டார்கள். அது நிஜப்பாம்பு என்பதும், நல்ல பாம்பு என்பதும் கூடுதல் சொரேக்…! அது சும்மாயில்லாமல் அவ்வப்போது படம் எடுத்து உஸ்… உஸ்… என்று சவுண்ட் கொடுத்துக் கொண்டிருந்தது. நல்லவேளை அந்த நல்லப்பாம்பு தந்த அச்சுறுத்தலால் மணிக்கணக்கில் பேசுகிற விஐபிகள் கூட நாலே நாலு வார்த்தைகளில் தங்கள் சொற்பொழிவை முடித்துவிட்டு இடத்தை காலி பண்ணினார்கள்.
நிகழ்ச்சியில் இயக்குநர்கள் ஏ.வெங்கடேசன், பாலசேகரன், ராஜ்கபூர், படத்தின் நாயகன் ராம் சரவணன்,நடிகர்கள் செந்தில், ப்ரஜின், உதயராஜ், நாயகி கமலி, தயாரிப்பாளர்கள் ஜே. கே.ஆதித்யா, ஆர்.என்.ஸ்ரீஜா, மும்பை ரவிச்சந்திரன் ராஜு, இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வர், சினிமா மக்கள் தொடர்பாளர்கள். டைமண்ட்பாபு, விஜயமுரளி, பெரு. துளசிபழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
அதிருக்கட்டும்… இந்த படத்தின் டைரக்டர் பெயர் என்ன தெரியுமா? ‘நாக’மானிசி! மடியில மகுடிய வச்சுகிட்டே படமெடுத்திருப்பாரு போலிருக்கே? (ச்சே… அந்த படம் இல்லீங்க, சினிமாப்படம்!)