சொந்தப்பட ஆசை! மூட்டை கட்டிய சினேகா!

எலி வலைக்குள் புலி தலையை விட்ட மாதிரி எல்லாவிதமான அவஸ்தைகளையும் அனுபவித்து வருகிறது தமிழ்சினிமா. ஓடுவது ஒரு படம் என்றால், தியேட்டரை விட்டு ஓடுவது ஏராளமான படங்கள். டிக்கெட் விலை, கேன்ட்டீன் கிலி, பார்க்கிங் பகீர் எல்லாவற்றையும் தாண்டி தியேட்டருக்குள் போனால், உப்புமா கிண்டி ஊட்டுகிறார்கள் இயக்குனர்கள். இந்த அவஸ்தைக்கு டி.வி தேவலாம் என்ற முடிவுக்கு தள்ளப்பட்டிருக்கிறது தமிழகம்!

இந்த இக்கட்டான நேரத்தில்தான் விபரம் புரியாமல் சொந்தப்படம் எடுக்க கிளம்புகிறார்கள் சில ஹீரோக்களும் ஹீரோயின்களும். வாங்கி வெளியிட கார்ப்பரேட் நிறுவனங்கள் முன் வரும் என்ற நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையில் சாம்பல் பொட்டலத்தை துவி வருகின்றன சில நிறுவனங்கள். அதை விடுங்கள்… அது பெரிய கதை. இப்படி சொந்தப்படம் எடுக்க கிளம்பிய சில ஹீரோக்களின் அடி மனசு அனல் தெறித்து ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் பஸ்பமாகிவிடும் போலிருக்கிறது.

இவர்களில், சினேகா- பிரசன்னா தம்பதியின் முடிவு தமிழ்சினிமாவில் இருக்கும் ஒரு சில நல்ல மனசுக்காரர்களை நிம்மதி மூச்சுவிட வைத்திருக்கிறது. ஏன்?

எல்லாரையும் போல இவர்களுக்கும் ஒரு ஆசை வந்தது. சொந்தப்படம் எடுத்து நாலு பேருக்கு வேலை கொடுக்கணும். அப்படியே போட்ட பணத்தோடு கொஞ்சம் லாபம் கிடைத்தால் போதும் என்று! எத்தனையோ படப்பிடிப்புகளில் பங்கு பெற்றிருந்தாலும், நேரடியாக இறங்கி பர்பார்மென்ஸ் கொடுத்திருந்தாலும், கையிலிருந்து காசை எடுக்கும் போதுதானே தெரியும்… இது எவ்வளவு பெரிய அசுரர்களின் உலகம் என்று? முதல் இரண்டு நாட்கள் படப்பிடிப்பையும் நடத்தினார்களாம். ஆகிற செலவு, அதிலும் கண்ணுக்கு தெரிந்தே செய்யும் வெட்டி செலவு, பெப்ஸி தொழிலாளர்களின் அட்டகாசம் எல்லாவற்றையும் கண்கூடாக பார்த்தவர்கள், அந்த ரெண்டு நாள் அனுபவமே போதும்டா சாமி… என்று எல்லா முயற்சியையும் மூட்டை கட்டி வைத்துவிட்டார்களாம்.

ஊறு வருமுன் உஷாரான தம்பதிகளை பணம் பிடுங்கிகளிடமிருந்து காப்பாற்றிய அந்த பரம்‘பொருளுக்கு’ நன்றி சாமீயோவ்…

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
படபிடிப்பின் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்ட “மூன்றாம் உலக போர்”

2025 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரின் காரணம் என்ன? எந்த முடிவை நோக்கி அந்த போர் நடக்கிறது? என்பதே மூன்றாம்...

Close