முன்னணி ஹீரோக்களை வாரிய சினேகன்! விளைவு என்னவாகுமோ?
‘பாதி உனக்கு பாதி எனக்கு’ என்றொரு படம். இதன் ஆடியோ வெளியீட்டு விழா ஆர்.கே.வி ஸ்டூடியோவில் நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களில் முக்கியமானவர்களாக பவர்ஸ்டார் சீனிவாசனும், கவிஞர் சினேகனும் கலந்து கொண்டார்கள். எம்.ஏ. விஜயகுமார் என்ற புதியவர் இயக்கியிருக்கிறார். நடித்திருப்பதும் புதியவர்களே.
பொதுவாக கவிஞர்கள் யாராவது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் நெஞ்சு நிமிர்த்தி பேசுவதுடன் குற்றம் கண்டு பிடித்தே பெயர் வாங்கிவிடுவார்கள். சினேகனும் விதிவிலக்கல்லவே? ஆனால் அவர் கண்டுபிடித்த குற்றம் மிக மிக சரியானதுதான். அதையும் வாழைப்பழத்தின் தோலை உரிப்பதை போல, வாகாக உரித்து தோதாக சொல்லிவிட்டு போனார் . வேறொன்றுமில்லை, தமிழ்சினிமாவில் மறைந்த சாதனையாளர்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் என்றொரு வினைல் வைக்கப்பட்டிருந்தது மேடையில். அதில் உயிரோடு இருக்கும் இரண்டு சாதனையாளர்களான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், மற்றும் ஏ.சி.திருலோகசந்தர் படங்களையும் சேர்த்து மறைந்தவர்கள் லிஸ்டில் வைத்துவிட்டார் இயக்குனர் விஜயகுமார். விடுவாரா சினேகன்? அதை சுட்டிக்காட்டியதுடன் இப்போதிருக்கும் ஹீராக்களையும் லேசாக வாரிவிட்டு போனார்.
எஸ்.எஸ்.ஆர் மாதிரியெல்லாம் தமிழ் வசனத்தை உச்சரிக்கிற நடிகர்களை இப்போது பார்க்க முடியவில்லை. அந்த காலத்தில் இருபது பக்க வசனத்தையும் முப்பது பக்க வசனத்தையும் மனப்பாடம் செய்து பேசினார்கள். ஆனால் இப்போது அப்படியா? ரெண்டு பக்கம் எழுதிக் கொடுத்தா, கட் பண்ணி எடுத்துக்கலாமான்னு கேட்கிறாங்க. அது மட்டுமா? இன்னைக்கு என்ன ஷுட்டிங் என்பதையே டிரைவர்ட்ட கேட்டுதான் தெரிஞ்சுக்கிறாங்க என்று போட்டு தாக்கு தாக்கென தாக்கினார்.
இந்த விஷயம் வெளியே ஹீரோக்களுக்கு தெரிஞ்சா, சினேகனை எந்த பார்ட்டியில வச்சு எப்படியெல்லாம் பேசுவாங்களோன்னு நினைச்சா, தமிழுக்கே வலிக்கும்! சினேகன் சார்… எதுக்கும் பெயின் ஸ்பிரே வாங்கி வச்சுக்கங்க!