சினேகாவின் காதலர்கள் விமர்சனம்

‘காதல், ஒருமுறைதான் பூக்கும்’ என்கிற ஒருதலை ராக சென்ட்டிமென்ட்டையெல்லாம் உடைத்து தள்ளியிருக்கிறார் அறிமுக இயக்குனர் முத்துராமலிங்கன். ‘அவனுக்கு முன்னாடி உன்னை பார்த்திருந்தேன்னா உன் லவ்வை ஏத்துகிட்டு இருந்திருப்பேன்’ என்று சினேகா சொல்லும்போது, ‘அடடா… அந்த அவன் யாருப்பா?’ என்ற கேள்வியோடு காத்திருக்கிறோம். அவனுக்கு முன்னால அவன் என்று இன்னொருத்தனும், இவனுக்கு பின்னால இவன் என்று வேறொருத்தனுமாக போகிறது சினேகாவின் காதல்கள். காதலில் அடிதடி இருக்கலாம். அடித்தல் திருத்தல் இருக்கலாமோ என்கிற அதிர்ச்சியை நிமிஷத்துக்கு நிமிஷம் ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறாள் இந்த சினேகா. தமிழ்சினிமாவை பொருத்தவரை இந்த கேரக்டர் ‘பெண்ணே புது மலரே’தான், சந்தேகமில்லை!

தன்னை பெண் பார்க்க வருகிறவனையும் அழைத்துக் கொண்டு மருத்துவரிடம் போகிறாள் சினேகா. ‘90 நாளாயிருச்சு. இப்ப என்ன பண்றது?’ என்று மருத்துவரும் கைவிரிக்க, ‘எனக்கு ஒரு உதவி பண்றியா?’ என்று கேட்டு, 90 நாளுக்கு காரணமானவனை தேடிப் புதுசாக தன்னை காதலிக்க வந்தவனுடன் புறப்படுகிறாள் சினேகா. போகிற இடமெல்லாம் பிளாஷ்பேக்குகள் விரிய, ஒவ்வொன்றும் பிளாஷ்பேக் இல்லை. பிளாஷ்‘bad’. படிக்கும் போது வருகிற அடலசன்ட் லவ்! அந்த நேரத்தில் ‘திசைகள்’ பத்திரிகையில் வேலை கிடைக்க, ‘தம்பி ஆளை வுடு’ என்று முதல் லவ்விலிருந்து கழண்டு கொள்கிறாள். வேலைக்கு சேர்ந்து சில காஸ்ட்யூம் சேஞ்சுகளுக்குள் ஒரு அசிஸ்டென்ட் டைரக்டருடன் லவ். அந்த லவ்வின் ஸ்கிரிப்ட் காய்வதற்குள் அடுத்த லவ் என்று கதையின் போக்கையே கலவரப் போக்காக்குகிறாள் சினேகா! 100 கிலோ மீட்டர் தாண்டி வந்து ‘டிராப்’ பண்ணும் அந்த புது காதலன், கடைசியில் ஒரு ‘டிராப்’ கண்ணீரோடு கிளம்புவதுதான் முடிவு.

இந்த படத்தின் ஆகப்பெரிய அம்சம் காட்சிகளில் கூட அல்ல, காதுகளை குளிர வைக்கும் வசனங்களில்தான்! பேனா முனையில் வித்தை காட்டியிருக்கிறார் முத்துராமலிங்கன். ‘நான் கிளையை நம்பி மரத்துல உட்காரல, என் சிறகை நம்பி’ என்று சில இடங்களில் கவிதையாகவும், பல இடங்களில் யதார்த்தமாகவும் முழங்குகிறது வசனங்கள்!

படத்தின் முழு அஸ்திவாரமும் நான்தான் என்று நம்பி சுமக்கிறார் கீர்த்தி. லேசாக உதட்டை சுழித்து எதிரிலிருக்கும் இளைஞர்களை மடக்கிப் போட்டாலும், இவர் ‘காதல் வேம்ப்’ இல்லை என்பதுதான் ஆறுதலான சித்தரிப்பு. தன்னுடன் பழகும் போது அவர்கள் மீது சுய பரிதாபம் காரணமாக காதலிக்கிறார். பின்பு சந்தர்ப்ப சூழலால் அவர்களே விலகுகிறார்கள், அல்லது இவரே விலகுகிறார். இதுதான் அந்த பெண்ணின் முகத்தில் சேறு பூசாமல் காப்பாற்றவும் செய்கிறது. எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்கிற சினேகாவை தன் பாடி லாங்குவேஜ் மூலம் மிக அழகாக்கி தந்திருக்கிறார் கீர்த்தி.

சினேகாவை காதலிக்கும் இளைஞர்களில் அந்த உதவி இயக்குனர் கேரக்டர் மிக மிக நேர்த்தி. தனக்கு தரப்பட்ட புத்தகத்திற்குள்ளிருக்கும் ஆயிரங்களை சுய மரியாதையோடு சினேகாவிடம் திருப்பி தர முயல்வதும், பின்பு உரிமையோடு அதை ஏற்றுக் கொள்வதும் அழகு. அதுமட்டுமல்ல, லட்சியத்தை நோக்கி போகும் ஒருவனை காதல் ஒன்றும் செய்ய முடியாது என்பதையும் பளிச்சென்று சொல்லிவிட்டு காணாமல் போய்விடுகிறான். அந்த சிவன் பார்க் காட்சி, வழி தெரியாமல் தத்தளிக்கும் பல உதவி இயக்குனர்களுக்கான விசிட்டிங் கார்டாகவும் அமையக்கூடும், முத்துராமலிங்கனின் புண்ணியத்தால்!

அதுவரை மேகம் தண்ணீர் தெளித்துவிட்டு போனதை போல நகர்ந்த படம், இளவரசன்- காதல்- சாதீ- கொலை என்று நகர்கிறபோது பேய் மழையாய் அடித்து ஊற்றுகிறது. செருப்பு தொழிலாளியாக நடித்திருக்கும் உதய்குமார், உணர்ந்து நடித்திருக்கிறார்.

‘திசைகள்’ பத்திரிகையில் வேலை என்பதை ஏதோ ‘இன்போசிஸ்’ வேலை என்பது போல சித்தரிப்பதெல்லாம் டூ மச் டைரக்டரே! தன்னால் கவிழ்க்கப்பட்ட காதல் லாரிகள் ஆங்காங்கே ஸ்தம்பித்து நிற்பதை கூட டேக் இட் ஈஸியாக ஒருத்தி கடக்கிறாள் என்பது சற்றே நெருடலாக இருப்பதையும் திரைக்கதையில் கவனித்திருக்கலாம். ஒரு காதலுக்கும் மறு காதலுக்குமான இடைவெளியில் ஒரு சின்ன ஃபீலிங் கொடுத்திருந்தால் அவளது அடுத்த காதல் கூட நியாயமாகியிருக்குமே? தன் காதலி உயிரோடு கொளுத்தப்பட்ட பின்பும், வேறொருத்தியோடு உறவு வைத்துக் கொள்கிறான் என்பது இளவரசனின் கேரக்டரையும் டேமேஜ் செய்துவிடுகிறதே…?

க்ளைமாக்சில் சுமார் 20 நிமிடங்களுக்கு வசனங்களே இல்லை. தனது இசையால் நிரப்பியிருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் இரா.ப்ரபாகர். கண்ணகியின் கால் சிலம்ப… பாடல் துள்ளல் என்றால் பிற பாடல்களும், வரிகளும் கவனத்தை ஈர்க்கிறது.

சின்ன சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக்குகள் இருந்தாலும், சினேகாவின் இந்த லவ் லெட்டர் ரசிகர்களையும் காதலாகி கசிந்துருக வைக்கும், சந்தேகமில்லை!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
JYOTIKA TO MAKE COMEBACK WITH ‘HOW OLD ARE YOU?’ REMAKE

JYOTIKA TO MAKE COMEBACK WITH ‘HOW OLD ARE YOU?’ REMAKE Good news arrives to one and all awaiting the comeback...

Close